Header Ads



முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர், சிங்கள – முஸ்லிம் நட்புறவினை சீர்குலைக்க பாரிய சதி - மங்கள சமரவீர

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. பலஸ்தீனத்துடனான உறவு பலமாகவே உள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சினை கலந்துரையாடல் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான உறவினை பலப்படுத்தும் நோக்கிலேயே யுனஸ்கோ வாக்கெடுப்பில் இலங்கை  பங்கேற்கவில்லை. மாறாக அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கவில்லை. அணிசேரா கொள்கை மீறி செயற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

அத்துடன் நாட்டில் சிங்கள – முஸ்லிம் நட்புறவினை சீர்குலைப்பதற்கு பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. எதிரணியின் முக்கியஸ்தர் ஒருவர் கண்டியில் பள்ளி வீதி பெயர் பலகையை உடைத்தெறிந்துள்ளார். இது போன்று அண்மை காலமாக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதன்போது அமைச்சு கூற்று நேரத்தில் உரையாற்றுகையலேயே    அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தினேஷ் குணவர்தனவினால் 23 (2) கீழ் ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் மங்கள சமரவீர   மேலும் பதிலளிக்கையில்,

முரண்பாடுகளினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் நாம் நன்கு அறிவோம். இலங்கையில் இனிமேலும் பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம். அனைத்து மதங்களின் உரிமையையும் பாதுகாக்கும் நாடு என்ற வகையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது. 

இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சினை தற்போது தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் உக்கிரமான நிலைமை ஏற்பட்ட வண்ணமுள்ளன. இதன் பிரகாரம் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு யுனெஸ்கோ நிறுவனம் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டிலேயே நாம் உள்ளோம். எனினும் அமெரிக்காவிற்கு அடிபணிந்தே யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது பாலஸ்தீனத்துக்கு வாக்களிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாம் அமெரிக்காவினதோ அல்லது வெளிச்  சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படவில்லை. அந்த சக்திகளுக்கு அடிபணியபோவதில்லை. 

இலங்கையினுடைய அணிசேரா கொள்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. வெளிநாட்டு கொள்கையும் மாறவில்லை. நாம் சரியான தீர்மானத்தையே எடுத்துள்ளோம். பாலஸ்தீனத்தின்  உரிமைக்காக இலங்கை பல சந்தர்பங்களில் ஆதரவாக வாக்களித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையில்  பாலஸ்தீன தேசியக் கொடி பறக்கவிடுவதற்கு இலங்கை முழுமையான ஆதரவினை வழங்கியது. இது போன்று மனித உரிமை பேரவையின் வாக்கெடுப்பிலும் ஆதரவாக வாக்களித்தது. பாலஸ்தீன உறவை பலப்படுத்த 1987 ஆம் ஆண்டு பாலஸ்தீன இலங்கை ஒருங்கிணைப்புக் குழு நிறுவப்பட்டது. ஆகவே பாலஸ்தீன் நாட்டுடனான கொள்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. பாலஸ்தீனத்துடனான உறவு பலமாகவே உள்ளது. 

யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது நாம் மாத்திரம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கூட பங்கேற்கவில்லை. இந்தியா அணிசேரா கொள்கையை கொண்ட நாடாகும். 

எனவே இஸ்ரேல்  – பாலஸ்தீன் உறவினை பலப்படுத்தும் நோக்குடனே கொள்கை அடிப்படையில் வாக்கெடுப்பில் பங்ககேற்கவில்லை. எனினும் இஸ்ரேல் உடனான உறவும் எமக்கு முக்கியம்.   எந்தவொரு நாட்டுடனும் எமக்கு முரண்பட்டு செயற்பட முடியாது. இஸ்ரேலுடனும் நாம் பலமான உறவினை கட்டியெழுப்பி வருகின்றோம். இஸ்ரேலில் 6000 இலங்கையர் தொழில் புரிகின்றனர். இன்னும் வேலைவாய்ப்புகள்  கிடைக்கும். எமக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமாகும்.

எனவே நாம் இனவாதத்திற்கு முழுமையான எதிர்ப்பு வெளியிடுகின்றோம். எனினும் பாலஸ்தீன வாக்கெடுப்பில் சார்ந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்க முனைந்துள்ளனர். முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதற்கு திட்டமிட்டுள்ளனர். 

அத்துடன் நாட்டின் சிங்கள –  முஸ்லிம்   இனத்தவர்களின் நட்புறவினை சீர்குலைப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றது. கண்டியில் பிக்குகளின் போராட்டத்தில் எதிரணியின் முக்கியஸ்தர் ஒருவர் பள்ளி வீதி  பெயர்ப் பலகையை உடைத்துள்ளார். தற்போது முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர். அதேபோன்று நாமல் ராஜபக் ஷவின் நண்பர் ஒருவர் இனவாத அமைப்பில்   செயற்பட்டு இனவாத கருத்து தெரிவித்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் முஸ்லிம் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.   இனவாதத்திற்கு இடமில்லை என்றார்.     

No comments

Powered by Blogger.