Header Ads



முஸ்லிம்கள் எனக்கு, அதிகளவு வாக்குகளை அளித்திருந்தார்கள் - தயாசிறி

இனவாதத்தினை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் எடுப்போம், இதன் மூலம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே தேசம் என்பதன் அடிப்படையில் வாழ முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சந்தாங்கேணி ஐக்கிய சதுக்க விளையாட்டு மைதான அபிவிருத்தியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு நேற்று சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.கரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

முன்னாள் ஜனாதிபதி, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் அடிப்படையில் 9 மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதே போன்று 25 மாவட்டங்களிலும் அவ்வாறான வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் வருகின்றது.

மாவட்டங்களுக்கு வழங்கும் விளையாட்டு மைதானங்களை விட பிரதி அமைச்சர் கரீஸின் வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று கல்முனையில் இந்த விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு மைதானத்திலே உள்ளக விளையாட்டு அரங்கு, 25 மீற்றர் கொண்ட நீச்சல் தடாகம், உள்ளக பார்வையாளர் அரங்கு என்பவை கொண்டமைந்த விளையாட்டு மைதானமே இதுவாகும். இன்று நாங்கள் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் இணைந்து இந்த நாட்டிலே வேலை செய்து வருகின்றோம்.

அன்று நான் வடமத்திய மாகாணத்தில் முதலமைச்சராக போட்டியிட்டபோது அங்குள்ள முஸ்லிம் மக்கள் எனது இலக்கத்திற்கு அதிகளவு வாக்குகளை அளித்திருந்தார்கள்.
இன்று ஒரே நாடு ஒரே தேசம் என்பதன் அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்யக்கூடிய நேரம் வந்திருக்கின்றது.
இந்த நாட்டிலே விளையாட்டிற்கு தேசிய அணிகளை தெரிவு செய்கின்றபோது அந்த அணிகளில் மூன்று இனத்தினையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தியிருக்கின்றேன்.

நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் நாட்டை பிரிப்பவர்கள் அல்ல நாட்டை பிரிப்பவர்களுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் ஒன்று சேர்ப்பவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் இனவாதமாக இருக்கட்டும் எந்த இனவாதமாக இருந்தாலும் அவற்றை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமை எனும் ஆயுதத்தினை கையில் எடுத்து ஒற்றுமையுடன் செயற்பட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். வருகின்ற எதிர்கால சந்ததியினருக்கு ஒற்றுமை எனும் செய்தியை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.