Header Ads



இவரைத் தெரியுமா..?

-மவ்லவி, கான் பாகவி-   

அவர் ஒரு ஆரம்பக் கால முஸ்லிம். 17 ஆவது வயதில் இஸ்லாத்தில் இணைந்தவர். அவருக்குமுன் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஸைத் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் மட்டுமே இஸ்லாத்தில் இணைந்த ஆண்கள்.

மரியாதைக்குரிய நபித்தோழர். சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற பதின்மரில் ஒருவர். அன்னை ஆமினாவின் பனூஸுஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த இளவல்.

இந்த மாமன்முறை இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தார்கள். ஒருதடவை தோழர்களுடன் அமர்ந்திருந்த நபிகளார், அவர் வருவதைப் பார்த்துவிட்டு,

''இவர் என் மாமன்; என் மாமன் போன்ற ஒருவரை யாரேனும் எனக்குக் காட்டட்டும்!'' என்று (பெருமிதத்தோடு) சொன்னார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

ஹிஜ்ரத்திற்குமுன் 23ஆம் ஆண்டில் மக்காவில் அவர் பிறந்தார். அம்புகள் செதுக்கும் பணியில் ஈடுபட்டார். இப்பணி, அம்பெய்தல், வேட்டையாடல், போர் ஆகிய தீரச் செயல்களுக்கு முன்னோடியான ஒரு பணியாகும். குறைஷி இளைஞர்களுடனும் தலைவர்களுடனும் கலந்துறவாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் நேரத்தைக் கழித்துவந்தார்.

ஒருநாள் இரவு கனவொன்று கண்டார். இருள்படர்ந்த ஓரிடத்தில் அவர் நடந்துசெல்கிறார். அவர் நடக்க நடக்க இருள் கூடிக்கொண்டே போகிறது. அடுத்து ஒளிரும் நிலாவைப் பார்க்கிறார். அங்கு அபூபக்ர், அலீ, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரைக் காண்கிறார்.

விழித்ததும், அந்த நிலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என அறிகிறார். இஸ்லாத்தில் இணைகிறார்.

இறைவழியில் அம்பெய்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தம் தந்தையும் தாயும் அர்ப்பணம் என்று கூறினார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 'உஹுத்' போரில், ''அம்பெய்வீராக! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்!'' என்றார்கள்.

இம்மார்க்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்காக எத்தனையோ இடையூறுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மனிதர் உறுதியாக இருந்துவிட்டார்.

உச்சகட்டமாக, ஈன்ற தாயின் பாசம் குறுக்கே நின்றது. இஸ்லாத்தைக் கைவிட்டுப் பழைய மதத்திற்கே மகன் திரும்பிவராவிட்டால், தான் உண்ணப்போவதில்லை; அருந்தப்போவதில்லை என்று தாயார் விரதம் பூண்டார்.

தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மரணத்தை நெருங்கிவிட்டார் அன்னை. இளைஞர் சென்றார்; தாயை ஒருமுறை பார்த்தார். தாயோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞரின் உள்ளத்தில் ஈமான் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது.

சொன்னார்: தாயே! உனக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் என் மார்க்கத்தைக் கைவிடமாட்டேன். சாப்பிடுங்கள்! சாப்பிடாமல் இருங்கள்! உங்கள் விருப்பம்.

மகனின் நெஞ்சுரத்தைக் கண்ட தாய் தன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.

துஆ ஏற்கப்பட்டவர் என்று பிரசித்தி பெற்ற அந்த நபித்தோழரை, கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இராக்கின் ஆட்சியராக நியமித்தார்கள்.

இராக்கின் தலைநகராக அப்போதிருந்த கூஃபா நகரின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்திய ஆட்சியர், புதுப்புது கட்டடங்களை எழுப்பத் தொடங்கினார்.

வேடிக்கை என்ன தெரியுமா? அவரைப் பற்றி யாரோ ஒருவர் கலீஃபாவுக்குப் புகார் மனு அனுப்பினார்.

''ஆட்சியர் இரகசியத்தைக் காப்பதில்லை; சமமாகப் பங்கிடுவதில்லை; அழுத்தமாகத் தீர்ப்பளிப்பதில்லை; ஒழுங்காகத் தொழவைப்பதில்லை'' என்று புகார் மனுவில் எழுதப்பட்டிருந்தது.செய்தியறிந்த ஆட்சியர் சிரித்துவிட்டுச் சொன்னார்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைத்தான் அம்மக்களுக்கு நான் தொழுவித்தேன். முதல் இரு ரக்அத்களை நீட்டுவேன்; பிந்திய ரக்அத்களைச் சுருக்குவேன்.

கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியரை மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அவரும் வந்து சேர்ந்தார். குற்றச்சாட்டை நோட்டமிட்ட கலீஃபா, உண்மை கண்டறியும் குழு ஒன்றை கூஃபாவுக்கு அனுப்பினார்கள்.

ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்ற குழுவினர், ஆட்சியரைப் பற்றி மக்களின் கருத்தென்ன என்று ஆய்வு செய்தனர். ''அவர் சிறந்த மனிதர்'' என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியாக ஒரு பள்ளிவாசலில் குழுவினர் ஆய்வை மேற்கொண்டபோது, அனைவரும் நற்சான்றே அளித்தனர்; ஒரே ஒரு மனிதர் தவிர. அவர் சொன்னார்: நான்தான் புகார் மனு அனுப்பியவன்.

ஆக, கருத்தெடுப்பில், ஒருவரைத் தவிர நூறு விழுக்காட்டினர் ஆட்சியரை சரி கண்டிருந்தனர்.

எனவே, அத்தோழரை மீண்டும் கூஃபா சென்று பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கலீஃபா சொன்னபோது, அந்த நல்ல நபித்தோழர் சிரித்தார்.

''முறையாகத் தொழவைக்கவில்லை என்று கருதும் ஒரு கூட்டத்தாரிடமா நான் திரும்பச் செல்ல வேண்டும் என்கிறீர்கள்?'' என வினவினார்.பிறகு புகார் அனுப்பிய மனிதரிடம் சென்று இவ்வாறு பிரார்த்தித்தார்:

இறைவா! இம்மனிதர் பொய்யராக இருந்தால், இவருக்கு நீண்ட ஆயுளையும் ஏழ்மையையும் கொடு! குழப்பங்களுக்கும் சோதனைகளுக்கும் இவரை ஆட்படுத்து!

பல்லாண்டுகள் கழிந்தபின், புகார் கொடுத்த அந்த மனிதர், சாலைகளில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் புருவங்கள் விழுந்து கண்களை மூடிவிட்டன. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதும் மக்களின் ஏச்சுக்கு ஆளாவதும் அவருக்கு வாடிக்கையானது.

அந்தக் கிழவரிடம், யாரேனும் அவரது நிலை குறித்து விசாரித்தால், ''அந்த துஆ பலித்துவிட்டது'' என்று கூறுவாராம்!இறுதியாக, நம் நபித்தோழருக்கு இறப்பு வந்தபோது, கிழிந்த ஒரு கம்பளி ஆடையைக் கொண்டுவரச் சொல்லி, அதிலேயே தமக்கு 'கஃபன்' அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ''இதை அணிந்துகொண்டுதான் 'பத்ர்' போரில் எதிரிகளைச் சந்தித்தேன்; இதனுடனேயே அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்'' என்றார்.ஹிஜ்ரீ 55ஆம் ஆண்டு மறைந்த அந்த நல்ல மனிதர் 'அல்பகீஉ' மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.யார் அவர்?

அந்த நபித்தோழர்தான், சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். 

No comments

Powered by Blogger.