Header Ads



மைத்திரி-, மஹிந்த, சந்திரிகா - ஐக்கியப்படுத்தும் முயற்சி தோல்வி

மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் எமது கனவு இனிமேலும் மெய்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையென அதன் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கை நழுவி சென்றுள்ளபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுசேர்க்கும் முயற்சியினை தாங்கல் இதுவரை கைவிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாம் பொறுத்தது போதும். தீர்மானம் எடுப்பதற்கு இதுவே சரியான தருணம், எனினும் இத்தீர்மானத்தால் கட்சி பிரிவடைந்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்” என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீல. சு. க வை பிரிக்க வேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக இருக்காது. என்றபோதும் அவருடன் இருக்கும் கோஷ்டியினரின் அழுத்தங்களால் அவர் கட்டுப்பட்டுள்ளார். இக்கும்பல் எரிச்சல் மற்றும் குரோத மனப்பான்மைக் கொண்டது.

ராஜபக்ஷக்கள் மீதான எமது கௌரவம் இன்னமும் குறையவில்லை. குறிப்பாக நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவை நான் இன்னும் மதிக்கிறேன். சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று ஒரு ராஜாவைப் போல இருந்தவரை இந்த கோஷ்டி தமது சுய இலாபத்துக்காக கொளுத்தும் வெயிலில் வீதிதோறும் நடக்கவைத்துள்ளது.

இவர்களை ஸ்ரீல.சு. க விலிருந்து விலக்குவது இலகுவான விடயம் என்கின்றபோதும் நாம் அதை செய்ய விரும்பவில்லை. கட்சியை ஒன்று சேர்க்கும் முயற்சியினை நாம் இன்னும் கைவிடவில்லை என்றும் அமைச்சர் அமரவீர கூறினார்.

No comments

Powered by Blogger.