Header Ads



கண்டியில் தலைமைத்துவ பயிற்சி - மாணவிகள் மீது பாலியல் கொடுமை

கண்டியில் தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவிகள் பலர், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவிகளை மீண்டும் பரீட்சையில் சித்தியடையச் செய்வதற்காக இப்பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேசத்தில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்நிறுவனம் இயங்கி வருவதாகவும் இதுவரை பலர் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இம்முறை நடத்தப்பட்ட பயிற்சியில் 17 மாணவிகள் பங்கேற்றுள்ளதுடன் இவர்களில் 10 பேர் இந்நிலையத்திலிருந்து தப்பி வந்துள்ளதாகவும் இவர்களே இவ்விபரத்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது. 

இந்நிலையத்தில் செவ்வாய்கிழமை (02)  பயிற்சியை பெற்றுக்கொண்டிருந்த மாணவிகளில்  10 பேர், அங்கிருந்த கடும் பாதுகாப்பு ஒழுங்குகளையும் மீறி தப்பிச் சென்று காட்டுப் பகுதியில் மறைந்துள்ளனர். 

காட்டு வழியாக வந்த பிரதேசவாசி ஒருவரைச் சந்தித்த இவர்கள், விபரங்களை கூறியுள்ளதுடன் அவரது உதவியுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி இச்சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

கண்டி பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பராமரிப்புப்  பிரிவினர், உடன் ஸ்தலத்துக்கு விரைந்து மாணவிகளை பொறுப்பேற்றதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்தனர். இம்மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதுடன், அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையமானது மாணவிகளை  பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.