Header Ads



இந்த அரசாங்கம் தேவையா..? அநுரகுமார ஆத்திரம்

இந்த நாட்டில் 68 வருட காலமாக இரண்டு பிரதான கட்சிகளை ஆட்சி பீடத்தில் அமைக்க மக்கள் வாக்களித்து வருகின்றனர். இவ்வாறு வாக்களிக்கின்ற மக்கள் ஒரு அரசை உயர்த்தவும், வீழ்த்தவும் வாக்களிக்கின்றனர். 

இந்த அரசாங்கத்தின் ஊடாக வரி சுமை, கடன் சுமை மற்றும் வீழ்ச்சி அடையும் பொருளதார கொள்கை மூலமாக மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் இந்த அரசாங்கம் தேவைதானா? என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், தலைவருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் இன்று (11) மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் இங்கு உரை நிகழ்த்துகையில், 

தோட்ட தொழிலாளர்களும் வீடுகள் இல்லாமல், மலசலகூட வசதிகள் இல்லாமல் சுவாசிக்க கூடிய அறைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால் இவர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற தலைவர்கள் கொழும்பில் ஒரு வீடு, குளிராக இருக்க நுவரெலியாவில் ஒரு வீடு, காற்று வாங்குவதற்கு கடற்கரையில் ஒரு வீடு என வாழ்ந்து வருகின்றனர். 

நமது மக்கள் தோட்ட லயன் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களில் 5 வயதுக்கு குறைவான அதிகமான பிள்ளைகள் போசாக்கின்மையை கொண்டு வாழ்கின்றனர். 

இம் மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு பிள்ளைக்கு போசாக்கு குறைபாடு இருக்கின்றது. இதனால் வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இல்லை. கல்வி நிலைமை இல்லை. இது இமக்களுக்கு சாப கேடா? என கேள்வி எழுப்பினார். 

மஹிந்த ராஜபக்ஷ 2014 டிசம்பர் வரை ஆட்சி செய்த காலப்பகுதியில் உணவுக்கென 1000 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார். தொழிலாளர்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்து செலவு செய்யும் பணத்தை இவர் ஒரு மாதத்தில் செலவு செய்துள்ளார். 

பாடசாலையை பொறுத்த வரையில் இம்மாவட்டத்தில் தளபாட வசதிகள் இல்லை. 8 பாடங்கள் கொண்ட பாட விதானத்தில் தினமும் மூன்று பாடங்களே கற்பிக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் இருந்தும் முறையாக கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. 

நாம் ஏழைகள், அதற்கு ஏற்றாபோல் தான் கல்வி நிலைமை முன்னெடுத்து செல்லப்படும் என்ற நிலைமைக்கு இவர்கள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். 

சென்ற வருடம் க.பொ.த பரீட்சையில் நூற்றுக்கு நான்கு வீதமானவர்களே சிறந்த சித்தி எய்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை கிராம பகுதிகளிலும் உண்டு. ஆனால் நீங்கள் வாக்களித்த அமைச்சர்கள் அவர்களின் பிள்ளைகளை வெளிநாட்டு பாடசாலைகளில் கல்வி பயில அனுப்புகின்றனர். 

மஹிந்தவின் மூத்த மகன் இங்கிலாந்திலும், சிறிய மகன் ரஷ்யாவிலும், மைத்திரிபால சிறிசேனவின் மகள் இங்கிலாந்திலும், எஸ்.பி. திஸாநாயக்கவின் பிள்ளை இங்கிலாந்திலும் கல்வி கற்கின்றனர். 

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி தேவைப்பாடுகள் முழுமையாக பூர்த்தியடையப்பட்டுள்ளதா? ஆனால் ஒன்று நடக்கின்றது. தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பிற்கு ஹோட்டல்களிலும், பங்களாக்கனிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இது தான் உண்மை. 

இந்த நாட்டில் அதிகமாக, சம்பளத்தை குறைவாக பெறுகின்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே ஆகும். வருமானம் இல்லாத வாழ்க்கை தேவை தானா? இதற்காகவா வாக்களித்தீர்கள். 

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து வந்தார். மாத்தறை, கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய வீடுகளை அமைத்துள்ளார். சொத்து எங்கே இருந்து வந்தது. தெஹிவளை சுற்று பிரதேசத்தில் ராஜபக்ஷவின் மகன் வீடு அமைத்துள்ளார். கேட்டால் பாட்டி கொடுத்தார் என தெரிவிக்கின்றார். பாட்டியின் வயது 84. 

இவர்கள் பொது மக்களின் சொத்துகளை வீண் விரயோகம் செய்கின்றார்கள். சமூக பிரச்சினை கூடியுள்ளது. இதற்கு பின்னணி அரசியல்வாதிகள். தோட்டப்பகுதி மக்களுக்கு சுகாதார சேவைகள் இல்லை. சட்டத்துக்கு விரோதமான சுகாதார சேவை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் வாக்கு வாங்கிய சுகாதார அமைச்சர், ஏனையோர்கள் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சிகிச்சைக்கு செல்கின்றார்கள். 

இந்த நிலையைில் எமது மக்கள் வைத்தியசாலைக்கு சென்றால் கட்டில் வசதிகள் இல்லை, தரையில் உறங்குகின்றனர், முறைக்கேடாக நடத்தப்படுகின்றனர். இதை இவர்கள் உணர்வதில்லை. ஆகையால் இந்த அரசியல் நமக்கு தேவையில்லை. மாற்று நடவடிக்கை கொண்டு வர வேண்டும். இதற்காகவே ஜே.வீ.பீ மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றது என்றார். 

No comments

Powered by Blogger.