Header Ads



மத்திய வங்கி ஆளுனர் நியமனம் – திரைமறைவில் நடந்தது என்ன..?


மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமைக்கு பின்னால் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கும் முன்னர் பிரதமர், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை சந்தித்து தமது யோசனையை முன்வைத்தார்.

இதன்போது அவர்கள் இருவரும் ஜனாதிபதியின் யோசனையைக்கு இணக்கம் வெளியிட்டனர்.

இது குறித்து இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் ஆளுநர் நிலைக்கு பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பவர், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த நியமனம் பொருத்தமானது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தபோது அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட பிரதமர் ரணில், சரித்த ரத்வத்தையை இடைக்கால ஆளுநராக நியமிக்கக்கோரினார்.

இது தொடர்பில் அவர் கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

இதற்கு காரணம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை கோப் நாடாளுமன்ற குழு நிரூபிக்கமுடியாத நிலையில் மஹேந்திரனை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கும் நோக்கிலேயே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

எனினும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குள் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை உடனடியாக நாடு திரும்புமாறு ரணில் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் இன்று அவர் நாடு திரும்பவிருந்தபோதும் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி இணக்கத்துடன், நியமிக்கப்பட்டமையை அடுத்து அவர் உடனடியாக நாடு திரும்ப அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.