Header Ads



இஸ்ரேலின் அனைத்து குற்றச் செயல்களுக்கும் பிரிட்டனே பொறுப்பு - பலஸ்தீனம் பரபரப்பு குற்றச்சாட்டு

பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய்நாடொன்றை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்ட 1917 பல்போர் பிரகடனம் குறித்து பிரிட்டனுக்கு எதிராக வழக்கு தொடுக்க பலஸ்தீனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பிரகடனம் பிரிட்டன் வசமிருந்த பலஸ்தீனத்திற்கு பாரிய எண்ணிக்கையிலான யூதர்கள் குடியேற வழிவகுத்ததோடு, “எமது பலஸ்தீன மக்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி ஏற்பட்டது” என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் மல்கி குறிப்பிட்டார்.

சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மல்கி குறிப்பிட்டார்.

பலஸ்தீனத்தில் பிரிட்டனின் ஆளுகைக் காலம் காலாவதியானதை அடுத்தே 1948இல் இஸ்ரேல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது.

மொரிதானியாவில் இடம்பெற்ற அரபு லீக் மாநாட்டில் திங்களன்று உரையாற்றிய மல்கி, இஸ்ரேலின் அனைத்து குற்றச் செயல்களுக்கும் பிரிட்டனே பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக இருந்த லோட் ஆதர் பல்போர், யூத மக்களுக்கு பலஸ்தீனத்தில் நாடொன்றை உருவக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்ததை அடுத்தே பல்போர் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட பலஸ்தீனத்தை அடிப்படையாக வைத்தே இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. இதற்கு 1922இல் லீக் நாடுகளும் அங்கீகாரம் அளித்தன. இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை அடுத்த ஏற்பட்ட 1948 பலஸ்தீன யுத்தத்தில் 700,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அறிவிப்புக் குறித்து பிரட்டன் வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும் இது இஸ்ரேலின் சட்டபூர்வ அங்கீகாரத்தை நிராகரிக்கும் முயற்சியாகும் என்று இஸ்ரேல் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கிளாட் எர்டான் குறிப்பிட்டுள்ளார் 

No comments

Powered by Blogger.