Header Ads



ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதிரொலி, துருக்கி முப்படைகளில் அதிரடி மாற்றம்


துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கடந்த 15-ஆம் தேதி முயன்றதன் எதிரொலியாக, அந்த நாட்டின் முப்படைகளில் அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக, முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் பினாலி யில்திரிம் வியாழக்கிழமை அவசரக் கூட்டம் நடத்தினார்.

முன்னதாக, தரைப்படையைச் சேர்ந்த 87 தளபதிகள், 30 விமானப் படை தளபதிகள், 32 கடற்படை தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது.

இவர்களில் பலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது பதக்கங்களும் பறிக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுதவிர, 1,099 ராணுவ அதிகாரிகளும், 436 இளநிலை அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக கூறினர்.

கடந்த 13 ஆண்டுகளாக துருக்கியின் பலம் மிக்க தலைவராக விளங்கும் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் இந்த மாதம் 15-ஆம் தேதி ஈடுபட்டனர்.

எனினும், எர்டோகனின் ஆதரவாளர்களும், அரசுக்கு விசுவாசமான ராணுவப் பிரிவினரும் அந்த முயற்சியை முறியடித்தனர்.

அதையடுத்து, நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்களை முற்றிலுமாகக் களையெடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக சுமார் 16,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான நீதிபதிகள், கல்வித் துறை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ராணுவத்தின் ஒரு சின்னஞ் சிறு பிரிவினரே கிளர்ச்சியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், முப்படைகளின் 358 தளபதிகளில் 178 பேர் - அதாவது ஏறத்தாழ பாதி பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊடகங்கள் முடக்கம்: கிளர்ச்சியை அடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, துருக்கியின் பல்வேறு ஊடகங்களுக்கு அந்த நாட்டு அரசு புதன்கிழமை தடை விதித்தது.

மூன்று செய்தி நிறுவனங்கள், 16 தொலைக்காட்சி நிலையங்கள், 45 செய்தித் தாள்கள், 15 பத்திரிகைகள், 29 பதிப்பகங்கள் ஆகியவற்றை மூடுமாறு துருக்கி அரசு உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.