Header Ads



கொலன்னாவயில் ஜனாதிபதிக்கு, நெருக்கமானவர் செய்த அக்கிரமம்

கொலன்னாவை, முல்லேரியா பிரதேசங்களில் தனது அனுமதியின்றி எந்தவொரு தன்னார்வப் பணியாளர்களும் செயற்பட முடியாது என்று பிரசன்ன சோலங்க ஆரச்சி கட்டுப்பாடு விதித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண காலநிலையின் காரணமாக களனி கங்கையின் அருகே அமைந்துள்ள ஹங்வெல்லை தொடக்கம் மட்டக்குளி வரையான பிரதேசம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கடற்படையினரும் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து மீட்டெடுத்திருந்தனர். இவர்களில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் இம்ராத் தலைமையிலான பல்கலைக்கழக மாணவர் குழு, ஊடகவயிலாளரும் பேஸ்புக் செயற்பாட்டாளருமான கசுன் புஸ்ஸேவல தலைமையிலான பேஸ்புக் நண்பர்கள் குழு என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

வெள்ளம் வடிந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் தன்னார்வத் தொண்டர்களும், கடற்படையினரும் இணைந்து தொடர்ந்தும் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை பிரதம அமைப்பாளரான பிரசன்ன சோலங்காரச்சி தன்னார்வப் பணியாளர்களோ அல்லது கடற்படையினரோ தனது அனுமதியின்றி கொலன்னாவை மற்றும் முல்லேரிய பிரதேசங்களில் நுழையக் கூடாது என்று தடைவிதித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தனக்கு உள்ள நெருக்கமான தொடர்பை தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்யும் சோலங்காரச்சி , சாதாரண தொகுதி அமைப்பாளரான தனது பாதுகாவலுக்கு டிபெண்டர் வாகனம் ஒன்றுடன் ஆறு பொலிசாரை பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் கொலன்னாவைப் பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்த கட்டத்தில் அனைத்து நிவாரணப் பணிகளும் தன்னுடைய தலைமையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் இவர் பாதையை மறித்து நிவாரணப் பொருள் சேகரிப்பு நிலையமொன்றை நடத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.