Header Ads



இணையங்களை மறந்துபோன மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பத்திரிகையாளர் மற்றும் ஊடக பிரதானிகளை நேற்று ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துள்ள போதிலும் இணைய ஊடக பிரதானிகளுக்கு அழைப்பு கிடைக்கவில்லை.

கடந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பிரதான செயற்பாட்டை மேற்கொண்ட இணைய ஊடக பிரதானிகளுக்கு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகள் சந்திப்பிற்கும் அழைப்பு கிடைக்கவில்லை.

ராஜபக்ச ஆட்சியின் போது பிரதான ஊடகங்களினால் எதிர்க்கட்சியினருக்கு மிகவும் குறைவான சலுகைகள் கிடைத்த போதும், இணைய ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களினால் எதிர்க்கட்சியினருக்கு பெரிய அளவிலான பங்களிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாவதற்கு வாக்களிக்கும் தரப்பினர் தீர்மானிப்பதற்கு 31 வீதம் இணையதளங்கேள காரணம் என நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வுக்கமைய ஜனாதிபதி தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த தொலைக்காட்சி ஊடாக 59 வீதமும் பத்திரிக்கைகள் ஊடாக ஒரு வீதமும், வானொலி ஊடாக 0.05% என்ற குறைந்த அளவிலான மாற்றங்களே ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு இணைய ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களே காரணம் என பகிரங்மாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் இணையதள ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் ப்ரேட் கமகேவிடம் வினவிய போது,

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதனை போன்று இணையத்தள ஊடகங்களை மூன்றாம் நிலையில் (third class) எண்ண வேண்டாமென பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு ஏணைய ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரனவை சந்தித்ததாகவும், அங்கு அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் அரசாங்கத்தின் முக்கிய சந்திப்புகளின் போது பதிவு செய்யப்பட்ட செய்தி இணையத்தளங்களுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் வாக்குறுதியளித்த போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேலும் ஒரு முறை இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அறிவிக்கவுள்ளதாகவும், அது இறுதி அறிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள போதிலும், இதுவரையில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு இணையதள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில இணைய ஊடகவியலாளர்கள் ராஜபக்ச ஆட்சியை கவிழ்ப்பதற்காக சிறை சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.