Header Ads



இன்னும் 6 மாதங்களுக்குள், சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்கும் - ஊவா முதலமைச்சர்


ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி காலி மற்றும் கிருலப்பனை ஆகிய இடங்களில் தனித்தனியாக மேதின நிகழ்வுகளை நடத்திய போதிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இரு பிரிவினரும் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பது உறுதியாகும் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார். ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கலந்து கொண்டு பேசும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

முதலமைச்சர் தொடர்ந்து பேசுகையில், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், காலியில் சமனல மைதானத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி நடைபெறும் மேதின நிகழ்விலேயே நான் கலந்துகொள்கிறேன். கட்சி மீது பற்றுள்ள, கட்சிக்கு செல்வர், இம் மேதினக் கூட்டத்துக்கு ஊவாவிலிருந்து 6,615 பஸ்களில்  மக்கள் செல்லவுள்ளனர். இப் பஸ்களுக்கான கட்டணப்பணமும் செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊவா மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் விருப்பம்போல் காலி மற்றும் கிருலப்பனை மே தின கூட்டங்களுக்கு செல்ல முடியும். நான் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. எது எப்படியிருப்பினும் இரு கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஒன்றினைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பர். 

முன்னர் என்றால் மேதினங்களுக்கு, எமது சொந்த செலவில் நாம் சென்று வந்த நிலை மாறி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வசதிகள் செய்து கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எம்மிடையே பிரிவினைகள் இருக்கும் பட்சத்தில் அதன் இலாபம் மாற்றுக்கட்சிகளுக்கே சென்று விடும். ஆகையால் எம்மிடையே ஐக்கியம்  நிலவினால்  மட்டுமே எமது ஆட்சியை அமைக்க முடியும் என்றார். 

ஊவா மாகண அமைச்சர் சாலிய சுமேத உரையாற்றுகையில், 

கிராம மட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தொடர்ந்தும் அமோக ஆதரவு இருந்து வருகின்றது. நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தப் பிரிவைச் சேர்ந்திருந்தாலும் உண்மை நிலையினை நாம் உணர்தாக வேண்டும். தற்போதைய கலாநிதியும் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் எமது கட்சியின் தலைமைப் பொறுப்பை  ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.