Header Ads



"சாஸ்" ஆரோக்கியமானவை அல்ல

சாஸ் இல்லாத சாட் அயிட்டங்களோ, துரித உணவுகளோ ருசிப்பதில்லை. துரித உணவு கடைகளில், கலர் கலரான சாஸ்களை தொட்டுக் கொண்டு சாப்பிட கொடுக்கிறார்கள். மேயனைஸ் என்னும் வெள்ளை நிற சாஸ், தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ்... இவையே எல்லா துரித உணவுகளிலும் பிரபலம். சாஸ் வகைகள் ஆரோக்கியமானவை அல்ல என மருத்துவர்கள் சொன்னாலும், மக்கள் கேட்பதாக இல்லை. இவற்றுக்குப் பின்னுள்ள பயங்கரங்கள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன் விளக்குகிறார்...

எல்லா சாஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, புளிப்பு சுவைக்காக வினிகர் சேர்க்கிறார்கள். மேயனைஸ் சாஸில் முட்டையின்  மஞ்சள்கரு, வினிகர், சர்க்கரை, உப்பு, கொஞ்சம் மைதா சேர்த்து தயாரிக்கிறார்கள். முட்டையை கையால் அடித்துச் செய்யப்படும் மேயனைஸ் சாஸை வீட்டில் தயாரிக்கும் போது பெரிய அளவில் கெடுதல் இருக்காது. டப்பாக்களில் அடைத்து வரும் மேயனைஸில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பதப்படுத்தும் பொருட்களை சேர்க்கிறார்கள். 

இவை அதிக கலோரி கொண்டவை.  இதனால் கரையாத கெட்ட கொழுப்புகள்  உடலில் சேர்ந்து பருமன் பிரச்னையை ஏற்படுத்தும்.ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிவப்பு மிளகாய் கேன்சரை ஏற்படுத்தக் கூடியது. வீட்டில் சிவப்பு மிளகாயை சமையலில் சேர்க்கும் போது கூட மஞ்சள் தூளை சேர்ப்பார்கள். அதுவே வணிகத்திற்காக செய்யும்போது உடல்நலனில் அக்கறை செலுத்த வாய்ப்பில்லை. 

பர்கர் தயாரிக்கும் போதே அதிக அளவு சாஸ் சேர்த்துதான் செய்கிறார்கள். சுவைக்கு அடிமையானவர்கள் மேலும் அதிக சாஸை ஊற்றி அதில் பர்கரைத் தொட்டு சாப்பிடுகிறார்கள். இது உடல்நலத்தை எளிதில் கெடுத்துவிடும். சாஸ் உணவுக்கு தேவையில்லாத ஒன்று. சுவையைத் தவிர அதில் எந்த சத்துகளும் இல்லை. தவிர்ப்பதே நல்லது.’’

No comments

Powered by Blogger.