Header Ads



"வறுமையும், இலங்கை முஸ்லிம்களும்.." பகுதி - 1

-Misnaaf-

அஸ்ஸலாமு அலைக்கும்,

வறுமை குப்ரை வரவழைக்கும் அளவுக்கு கொடூரமானது ஆகவே வறுமையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது ஒரு நபி மொழியாகும். மற்றுமோர் நபிமொழியில் நபியவர்கள் கூறினார்கள் ஒரு ஊரில் ஒருவர் பசியில் இருந்தால் அந்த ஊரின் பாதுகாப்பில் இருந்து அல்லாஹ் விலகிக்கொள்வான். நான் அல்லாஹ்விடம் குப்ரில் இருந்தும் வறுமையிலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன். இது நபியவர்களின் பிரார்த்தனையாகும்.

இவை அனைத்தும் வறுமை எந்தளவிற்கு கொடுமையானது என்பதனை நமக்கு உணர்த்துவதோடு, வறிய மக்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றாகவே, எல்லாம் வல்ல இறைவன் ஸகாத்தை ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

இலங்கையில் மற்றைய சமூகத்தினரைவிட முஸ்லிம் சமூகமே கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற விடயங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு எமது சமூகத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஒரு பாரிய சவாலாகவும், முட்டுக்கட்டையாகவும் காணப்படுவதும் மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் நிலமையாகும்.
   
கடந்த 15 நவம்பர் 2015ல் கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் நான்காவது பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி இலங்கையரில் 6.7% ஆனவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும்போது முஸ்லிம் சமூகத்தில் 22% ஆனவர்கள் வறுமையோடு வாழ்வதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2012 இறுதியில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசமொன்றில் பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 57.68% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டது. மிக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் 38% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக அரச திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட மூன்று (22%,57.68%,38%) புள்ளி விபரங்களிலுமிருந்து குறைந்தபட்சம் 25% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் எனக் கருதுவோமானால், எண்ணிக்கையில் இது 500,000 நபர்களாகும். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து நபர்கள் உள்ளனர் எனக்கருதி, அதில் இரண்டு வயது வந்தவர்களும், மூன்று சிறுவர்களும் உள்ளனர் எனக்கருதுவோமானால், 200,000 வயது வந்தவர்களும், 300,000 சிறுவர்களுமாகும். இந்த எண்ணிக்கையானது முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பொருளாதார நிலையையும், எமது தலைவர்களின் நிர்வாக தோல்வியையும், அரசியல்வாதிகளின் சுயநலத்தையுமே எடுத்துக்காட்டுகின்றது.
  
கடந்த 2015 நவம்பரில், சரிடீஸ் எய்ட் பவுன்டேஷனினால் (Charities Aid Foundation) வெளியிடப்பட்ட உலக நன்கொடை குறிப்பீட்டின்படி (World Giving Index) இலங்கை 8 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2014ல் 9 வது இடத்திலும், 2013ல் 10 வது இடத்தையும் பெற்றிருந்தது.

உலகிலுள்ள எத்தனையோ வல்லரசு நாடுகளையும், மிகவும் பணக்கார நாடுகளான அரபு நாடுகளையும், தர்மம் செய்வதில் மிகவும் முன்னிலையிலிருக்கும் கிறிஸ்தவ நாடுகளையும் பின்தள்ளிவிட்டு, இவ்வாறானதொரு இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது மிகவும் பெருமையானதொரு விடயமுமாகும்.

பெரும்பான்மை சமூகத்தினரே இந்த இடத்தை இலங்கை பெறுவதற்கு காரணமானவர்கள் என்றால் அதில் எந்த சந்தேகமுமில்லை. முஸ்லிம் சமூகத்தினர் தர்மம் செய்வதில் முன்னிலையில் இருந்திருந்தால் மேற்குறிப்பிட்டவாறு 500,000 முஸ்லிம்கள் ஏன் வறுமைக்கோட்டின் கீழ் வாழவேண்டும்.

ஸகாத்தும் ஸதகாவுமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எமது சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் தர்மம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் நமது சமூகத்தில் உள்ள பாரியதொரு பிரச்சினைதான், தேவைகளை அறிந்து முன்னுரிமை படுத்தப்படாமையும் ஸகாத் பணத்தை வறுமையில் வாழும் ஒரு தனி நபரையோ அல்லது வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தையோ வறுமையிலிருந்து மீட்க போதுமான பணத்தை வழங்காமல் ஒரு சிறு தொகை கொடுப்படுவதாகும். அப்பணம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலமைகளினால் ஸகாத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படாமல் செல்கின்றது.

மற்றுமோர் விடயம்தான், ஸகாத் பணங்கள் மத்ரசாக்களுக்கும், தஃவா என்ற பெயரில் இயங்கும் வியாபார அமைப்புக்களுக்கும் கொடுக்கப்படுவதாகும். இந்த இரண்டு காரணங்களாலும், ஸகாத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகின்றது.

பெருந்தொகையான ஸதகா பணங்கள் மத்ரசாக்களின் நிர்வாக செலவிற்கும், மத்ரசா கட்டிடங்களை அமைப்பதற்கும், மஸ்ஜித் கட்டுவதற்கும், மஸ்ஜித் புனர்நிர்மாணங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட பிரதான காரணங்களால், வறிய மக்களுக்கு உதவிகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஸகாத், ஸதகா இரண்டிலும் வறிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மிகவும் அதிகமான குடும்பங்களாக குடும்பத்தலைவனை இழந்த குடும்பங்களும், கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்களும், நாள்பட்ட நோயினால் (chronic disease)  பாதிக்கப்பட்டு இயங்கமுடியாமல் முடக்கப்பட்ட நிலையிலுமுள்ள குடும்பத் தலைவனைக் கொண்ட குடும்பங்களும், கூலித்தொழில் செய்பவர்களின் குடும்பங்களும், சிறைக்கைதிகளின் குடும்பங்களும், போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுமே காணப்படுகின்றன.

ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் உயிர்வாழ்வதற்க்கு குறைந்தபட்சம் மூன்றுவேளை உணவைப் பெறுவதானது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் மிகவும் பிரதானமானதொன்றாகும். வறுமையில் வாழும் மக்கள் மூன்று வேளை உணவைக்கூட  பெறமுடியாதநிலையில் உள்ளனர். காலை உணவின்றி பாடசாலை செல்லும் சிறார்களை இன்று பரவலாக காணக்கூடியதாக உள்ளதோடு, போஷாக்கு குறைவினால் பாதிக்கப்பட்டும், கல்வியில் பின்தங்கிய நிலையிலும் இவர்கள் காணப்படுகின்றன.

குடும்பத்தின் வறுமை நிலமை காரணமாக பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுவிட்டு  சிறார்கள் முழு நேர தொழிலுக்காக செல்ல வேண்டிய நிலமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனை எமது வியாபாரிகளும், தொழிலதிபர்களும் தங்களுக்கு சார்பாக பயன்படுத்தி மிகக் குறைந்த தொகையை சம்பளமாக வழங்கி இந்த அப்பாவி சிறார்களை எமாற்றுகின்றனர்.

இவ்வாறு பிரதான உணவிற்கே தடுமாறும் இப்படிப்பட்ட குடும்பங்களில் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் இவர்களின் நிலமை மேலும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றது. வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கான செலவு, வைத்திய செலவு என மேலும் கஷ்டமான நிலமைக்கு தள்ளப்படுகின்றனர். இதிலும் பெண்களினால் நிர்வகிக்கப்படும் குடும்பங்களின் நிலமை மிகவும் பரிதாபமானதாகும். அதுமட்டுமன்றி பொருளாதார நிலமை காரணமாக இவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டியே நிலையில் உள்ளதால், மேலும் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எமது உறவுகள் வாடகை வீடுகளில் வசித்துக் கொண்டும், உண்ண உணவின்றியும், வைத்திய செலவுக்கு பணமின்றியும், தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைப் பெற எந்தவித வழியுமின்றி அதற்காக கடன்வாங்கியும், வயது வந்த பெண்பிள்ளைகள் திருமணம் முடிக்க, சீதனம் கொடுக்க, வீடு கட்ட எந்தவித வசதியுமின்றி வெழிநாடு செல்லும் போதும், பணத்தை பெற்றுக்கொண்டு மார்கத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போதும், பணத்திற்காக குழந்தைகளை விற்க முயற்சிக்கும் போதும், உணவிற்காக எமது சகோதரிகள் விபச்சார தொழிலில் ஈடுபடும் போதும், சமுர்தியிலும் வங்கிகளிலும் வட்டிக்கு பணம் பெற்று வாழும் போதும் எவ்வாறு இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு வெற்றிபெற்ற சமூகமாக கருதமுடியும்?

இவர்களின் நிலமைகளை மாற்ற நாம் முன்வராதவரை, எவ்வாறு நாங்கள் முஸ்லிம்கள் என்று கூற முடியும். ஒரு உண்மையான முஸ்லிம் தலைமத்துவமும், உண்மையான முஸ்லிம்களும் இவ்வாறான நிலையில் தமது உறவுகள் வாழ்வதை ஏற்றுக் கொள்வார்களா?. மேற்குறிப்பிட்ட நிலமைகள் ஒன்றும் கற்பனை அல்ல. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள வறிய மக்களின் இன்றைய உண்மையான நிலைமை இதுதான்.

3 comments:

  1. Safwan Ibne Sulaim(Ral) narrates that Nabi (sal) said, He who strives to serve a widow and the poor is like one who struggles in the path of Allah, or like the one who fasts by the day and stands in the Salath by night. (Bukhari)
    Sahd (Ral) narrates that Rasullullah (Sal) said, I and the one who brings up an orphan, will be like this in Paradise, and he pointed his forefinger and middle finger with a slight gap between them (Bukhari)
    So plz. spend on others Allah will spend on us. Let's treat out patients with SADAQA. Let's deposit to harvest in life hereafter...

    ReplyDelete
  2. நிலைமை இவ்வாறு இருக்க, நாங்கள் நாளுக்கு நாள் ஆளுக்கு ஆள் சண்டையிட்டுக் கொண்டு காலம் தள்ளுகின்றோம்.

    ReplyDelete
  3. Be Strong Brothers & Sisters. Poors will enter janna first if you are with correct belief. Come out of Tradition and practice Wahee (Islam), you will deserve what you must deserve

    ReplyDelete

Powered by Blogger.