Header Ads



68வது சுதந்திர தினமும், இனவாதம் என்ற கொடிய நோயும்..!!

-முஹம்மது நியாஸ்-

1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றவுடன் தமிழர்கள் தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தங்களுக்கான தமிழ் சங்கத்தை முதன்முறையாக உருவாக்கிகொண்டார்கள். இன்னும் சிலர் பிரிந்து சென்று இலங்கை சம சமாஜக்கட்சி என்றொரு கட்சியை உருவாக்கினார்கள். அதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி முதன் முதலாக உருவாக்கம் பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக யாரை நியமிப்பது என்ற சர்ச்சை எழுந்தபோது அப்போதைய சிங்கள மக்களின் பிரதிநிதியாகிய DS. சேனாநாயக்கவின் பெயரை நடேசன் என்றொரு தமிழரே பிரேரித்தார். அந்த பிரேரிப்பில் திருப்தியடைந்து அதை ஆமோதித்தவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அங்கே வீற்றிருந்த DB. ஜாயா ஆவார்.

ஒரு மிகப்பெரும் அரசியல் கட்சிக்கு ஒரு சிங்களவரை தமிழர் ஒருவர் பிரேரித்து அதை இஸ்லாமிய சமூகத்தின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் ஆமோதிக்கின்ற அளவுக்கு அன்றைய கால தேசிய தலைவர்களின் அன்னியோன்யம் இறுக்கமாகவும் வலுவாகவும் இருந்துள்ளது. காரணம் அன்றைய காலகட்டத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தாய் நாட்டின் சுதந்திரம் என்ற தாகமும் வேட்கையுமே அத்தலைவர்களிடத்தில் மேலோங்கிக்காணப்பட்டது. பிந்திவந்த காலங்களில் அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தல் வாக்குகளுக்காகவும் அந்த அன்னியோன்யம் சிதைக்கப்பட்ட வரலாறுகள் தனியாக விவரிக்கப்பட்டவேண்டியவையாகும்.

ஆகமொத்தத்தில் இந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னின்று உழைத்ததிலும் பிரித்தானிய குடியேற்றவாத ஏகாதிபத்தியத்திற்கெதிராக அறவழி மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் பௌத்த சமய தலைவர்களுக்கு சிறிதளவும் சளைக்காது தமிழ், முஸ்லிம் தலைவர்களும் தன்னார்வத்துடன் பங்காற்றியுள்ளார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத யதார்த்தமான உண்மையாகும்.

அதுமாத்திரமன்றி இந்நாட்டை சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக செலரித்து வந்த விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்தை ஒழித்துக்கட்டி நாட்டில் ஓர் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு இஸ்லாமிய சமூகம் இந்நாட்டிற்கு இராணுவரீதியாக பெரும்பங்காற்றியுள்ளது. முப்படைகளிலும் பொலிஸ் திணைக்களத்திலும் பணியாற்றுகின்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்றளவும் இந்நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தில் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான பல யுத்தங்களிலும் பங்கெடுத்து அதில் வீர மரணமடைந்த பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இராணுவ வீரர்களுடைய ,குடும்பங்கள் இவ்விரு மாகாணங்களிலும் இன்னும் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்கின்றன.

இலங்கை நாட்டின் பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி கடமை நேரத்தில் தேச விரோதிகளால் சுட்டு வீழத்தப்பட்டு வீர மரணமடைந்த முதலாவது பொலிஸ் அதிகாரியும் முஹம்மது ஸபான் என்ற மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் பொலிஸ் அதிகாரிதான் என்பது இந்நாடே நன்கறிந்த ஒரு வரலாறாகும்.

இவ்வாறு இலங்கை நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் நிலையான நீதி, நிருவாக கட்டமைப்புக்களுக்காகவும் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்தளித்து தியாகம் செய்த பல நூற்றுகணக்கான முஸ்லிம் முப்படை வீரர்களையும் பொலிஸ் அதிகாரிகளையும் நாம் அடையாளம் காண்பிக்கமுடியும்.

மேலும் விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாதிகளால் இந்நாடு செல்லரித்து சின்னாபின்னப்படுத்தப்பட்ட போது அதன் உச்சபட்ச பாதிப்பை ஒட்டுமொத்தமாக அனுபவித்த சமூகமாக இந்த இஸ்லாமிய சமூகம் காணப்படுகிறது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தெருவோர அனாதையாக நின்றது இந்த இஸ்லாமிய சமூகம். இன்று விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்ட போதும் கூட அதன் வடுக்கள் இன்னும் இஸ்லாமிய சமூகத்தை விட்டும் முழுவதுமாக நீங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

இவ்வாறு இந்நாட்டின் யதார்த்தமான சுதந்திரத்திற்காகவும் சீரான ஜனநாயக நீரோட்டத்திற்காகவும் மிகப்பாரியளவில் பங்காற்றிய இஸ்லாமிய சமூகம் நேற்றைய மழையில் முளைத்த சில காளான்களாலும் புல்லுருவிகளாலும் இன்று மிகவும் அழுத்தமானதொரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்நாட்டில் விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்டு பிந்தி வந்த கடந்த ஐந்துவருட கால வரலாறை எடுத்துநோக்கினால் அதில் இந்த இஸ்லாமிய சமூகமானது சிங்களப்பேரினவாத அமைப்புக்களால் மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டுகொள்ளமுடியும்.

வணக்கஸ்தலங்கள், முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான மிலேச்சத்தனமான அடக்குமுறைகள் பலவற்றையும் பல சந்தர்ப்பங்களிலும் சந்தித்துள்ளது இந்த இஸ்லாமிய சமூகம். இந்த அடக்கு முறைகளின் உச்சகட்டமாக கடந்த 2014ஆம் ஆண்டு பேருவலை, அழுத்கம பகுதியில் சிங்களப்பேரினவாதிகளால் இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத வன்முறையினை நாம் அடையாளப்படுத்தமுடியும்.

இவ்வாறு கடந்த ஐந்து வருட காலமாக  சிங்களப்பேரினவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீதான வன்முறைகளும் மற்றும் சமய ரீதியான பல தரப்பட்ட நிந்தனைகளும் மிகவும் பகிரங்கமாகவே நிகழ்ந்தேறி வருவதை நாம் காண்கிறோம்.

பல்லின மக்களும் வாழ்கின்ற ஒரு ஜனநாயக நாட்டில் அந்தந்த சமய மக்களுக்கென்று தனித்தனியான சமய கோட்பாடுகள், வழிபாட்டு முறைமைகள், கலாச்சார விழுமியங்கள் அமையப்பெற்றிருப்பது மிகச்சாதாரணமான ஒரு விடயமாகும். ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அந்நாட்டிலுள்ள பல சமய மக்களும் தங்களுடைய வாழ்க்கை முறைமைகளை, சமய கிரியைகளை யாருடைய விருப்பு வெறுப்புக்களுக்கும் ஆட்படாதவாறு சுயாதீனமான முறையில் அமைத்துக்கொள்வதிலேதான் தங்கியுள்ளதென்றால் அது மிகையாகாது.

அந்தவகையில் சுதந்திரம் அடைந்த இந்நாட்டில் சகல இன மக்களுடைய சமய, வழிபாட்டு, கலாச்சார ரீதியான சுயாதீனங்கள் உத்தரவாதமளிக்கப்படவேண்டும். சமயங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை வேர்விடவேண்டும். எந்தவொரு சமயத்தை பின்பற்றுகின்ற பொதுமக்களும் இனங்களுக்கிடையிலான உரசல்களை ஆதரவு வைக்கவில்லை. மாறாக மதகுருமார்கள் என்னும் போர்வையில் தங்களுடைய சுயலாபங்களுக்காக இந்த நாட்டையே இன்னும் பல தசாப்தங்களுக்கு அதள பாதாளத்திற்கு இட்டுச்செல்ல எத்தனிக்கின்ற சில இனவாத பெருச்சாளிகளே இவ்வாறான இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைகளை தோற்றுவித்து அதில் குளிர்காய முற்படுகின்றனர்.

அவ்வாறான தேச விரோதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்தும் புலிப்பயங்கரவாதத்தில் இருந்தும் மீட்டெடுத்த போன்று இனவாதம் என்னும் கோரப்பிடிக்குள் இருந்தும் இந்நாட்டையும் இந்நாட்டின் இறைமையையும் மீட்டெடுக்கின்ற இன்றியமையாத பணியை நடப்பு அரசாங்கம் சிறப்புற மேற்கொள்ளவேண்டும்.

சுமார் முப்பத்தியைந்து வருடகாலம் இந்நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற விடுதலைப்புலிகள் மஹிந்த ராஜபக்ஷவினுடைய கடந்த ஆட்சியின் போது ஒழித்துக்கட்டப்பட்டார்கள். மேலும் அவ்வாட்சியில் நாடுதோறும் பல்வேறுபட்ட அபிவிருத்திப்பணிகளும் இடம்பெறத்தவறவில்லை. 

ஆனாலும் எந்த விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டார்களோ அதே பயங்கரவாதத்திற்கு ஒப்பான சிங்களப்பேரினவாத இயக்கங்களை அந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் தோற்றுவித்தது. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பேரினவாத இயக்கங்கள் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக சுதந்திரத்தின் மீது அடாவடித்தனமான முறையில் அடந்தேறியபோது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது அதற்கெதிராக எதுவித எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அரங்கத்தில் ஆடவிட்டு கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. 

ஆனால் அது எப்பேர்ப்பட்டதொரு முட்டாள்த்தனமான செயற்பாடு என்பதை பிந்தி வந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மிகத்தெளிவாக அறிந்துகொண்டது. ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் ஆதரவு வைத்த இந்நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி பேதங்களை தாண்டி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மிச்சிறந்த பாடத்தை புகட்டினார்கள்.

அப்போது விடுதலைப்புலிகளை இல்லாதொழித்து நாட்டை மீட்டெடுத்ததையோ நாடுமுழுவதும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதையோ பொதுமக்கள் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக தாய்த்திரு நாட்டின் ஒரே வயிற்றுப்பிள்ளைகளாக வாழ்ந்துவந்த மக்களை இனவாதம் என்ற அரக்கத்தனத்தின் மூலம் பிரித்தாள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த நயவஞ்சகத்தனமே மக்களுடைய உணர்வுகளை உசுப்பிவிட்டது. அதுவே இப்போது மஹிந்த ராஜபக்ஷவினுடைய பரம்பரைக்கே ஒரு பேரிடியாக மாறிப்போயுள்ளது.

எனவே தற்போது நல்லாட்சி என்ற கோஷத்துடன் ஆட்சி பீடமேறியுள்ள மைத்திரி அரசாங்கம் கூட இந்நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது, மக்களுடைய வாழ்க்கைத்தரங்களை எவ்வாறு தரமுயர்த்துவது என்ற தூய்மையான சிந்தனையோடு பயணிக்குமானால் தொடர்ந்தும் இந்த நல்லாட்சிக்கு நாட்டு மக்களுடைய ஆதரவும் உத்தரவாதமும் கிடைக்கப்பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை விடுத்து இனங்களுக்கிடையிலான விரிசல்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற கேவலமான செயற்பாடுகளையும் சதித்திட்டங்களையும் மேற்கொண்டால் அல்லது அவ்வாறான இனவாத அடக்கு முறைகளுக்கு அங்கீகாரமளித்தால் மஹிந்த ராஜபக்ஷவினுடைய சர்வாதிகார ஆட்சியை போலவே மைத்திரிபால சிறிசேனவினுடைய இனவாத ஆட்சிக்கும் முடிவுரை எழுதுவதற்கு இந்நாட்டு மக்களுக்கு அதிககாலம் செலவாகாது என்பதை சமகால ஆட்சியாளர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது. 

                              தேச விரோதிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவதே தேசத்தின் சுதந்திரமாகும்.

No comments

Powered by Blogger.