Header Ads



ராத்தே வீரரை கோடாரியால், வெட்டிக் கொலை செய்தவரும் கைது

அனுராதபுரம், பனோராமா இரவு விடுதி உரிமையாளர், கராத்தே வீரரான வசந்த சொய்ஸாவை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் எஸ்.எப்.லொக்கா எனப்படும் இராணுவத் தின் சிறப்புப் படையில் இருந்து தப்பிச்சென்ற வீரரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரே மற்றொரு விடுதி உரிமையாளருடன் சேர்ந்து இந்த கொலையை திட்டமிட்டுள்ளதாக விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில், பிரதேசத்தைவிட்டு தலமறைவாகியுள்ள அவரை கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனிடையே நேற்று மாலை வரை இந்த சம்பவம் தொடர்பில் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் அவர்களில் 14 பேர் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அறுவரும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட அனுராதபுரத்தின் தஹய்யாகம பகுதியைச் சேர்ந்த கே.தில்ருக் சரித்த பெரேரா, குடாபாலாடிக் குளம் பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.டி. மதுசங்க கருணாரத்ன, மிஹிந்துபுர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.குஷான் சரித்த பெரேரா, புபுது மாவத்தையைச் சேர்ந்த எஸ்.கே.டப்ளியூ. சமிந்த புஷ்பகுமார சில்வா, கிராவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த எம்.ஜே.கயன் லக்மால், ஆர்.எம். விராஜ் சதுரங்க ஆகிய சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந் நிலையில் நேற்று, நேற்று முன் தினம் கைதுச் செய்யப்பட்ட தலவ, ரயில் வீதி பகுதியைச் சேர்ந்த டீ.எச். தினெஷ் மதுசங்க, தஹய்யாகம பகுதியைச் சேர்ந்த கே.சுரேஷ் சந்த கெளும், அஷோக பண்டார, ஏ.பிரசன்ன குமார, ஜீ.எச். சானக சுரங்க மற்றும் கே.எச். தேவிந்த கஸ்தூரி ஆராச்சி ஆகியோருடன் 48 மணி நேர தடுப்புக் காவலில் இருந்த அனுராதபுரம் உதய மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பீ.எம்.சாருக்க மதுஷான் மற்றும் ஜயசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஜயசூரிய பாரிந்த மேனக குணதிலக ஆகியோரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அந்த 8 பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதனிடையே நேற்று காலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட 4 பேர் அனுராத புரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அத்துடன் நேற்று மாலை அனுராதபுரம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்தனர். இந் நிலையில் இவர்களிடம் நேற்று இரவாகும் போதும் விசாரணைகள் தொடர்ந்த நிலையில் இன்று இவர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி இரவு திட்டமிட்ட 20 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழு, அனுராதபுரம், கட பனஹ - முதிதா மாவத்தையில் உள்ள பனோரமா இரவு விடுதிக்குள் அத்து மீறி அங்குள்ள சொத்துக்களுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த பலரைத் தாக்கியுள்ளனர். இதன் போது அந்த இரவு விடுதியின் உரிமையாளர், முகாமையாளர் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்ஸா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் 24 மணி நேரத்திலேயே நடவடிக்கை எடுத்தனர். கைது செய்யப்படும் போது சந்தேக நபர்கள் அனைவரும் போதையிலேயே இருந்தனர்.

இந்த குற்றச் செயலை புரிய பயன்படுத்தப்பட்ட கோடாரி தலை,இரும்பு கம்பி, பொல்லுகள் பல, டிப்பர் வண்டி, முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் கார் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த திட்டமிட்ட குற்றச் செயலின் திட்டமிட்டவராக கருதப்படும் இராணுவத்தின் விஷேட படையணியின் முன்னாள் வீரர் உள்ளிட்ட ஏனையோரை கைதுச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறித்த இரவு விடுதியை தாக்கி அங்குள்ள மதுபானத்தை கொள்ளையடித்து விருந்துபசாரம் நடத்துவதே திட்டமாக கூறப்பட்டு சந்தேக நபர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளமையும் தாக்குதலுக்கு முன்னர் மற்றொரு பிரதான சந்தேக நபராக கருதப்படும் பிறிதொரு விடுதி உரிமையாளரின் தலைமையில் அவரது விடுதியில் ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் ஏனையோரைக் கைதுச் செய்வதற்கான நடவடிக்கை தொடர்கின்றது. இது வரை கைது செய்யப்பட்டவர்களில் கராத்தே வீரரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்தவரும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் உறுதி செய்தன.

1 comment:

  1. இரவு விடுதி என்கின்ற கலாச்சாரம் தேவைதானா?

    ReplyDelete

Powered by Blogger.