Header Ads



எங்களின் கண்ணீர், இலங்கையை எரிக்கும் - கைதி ஒருவரின் தாயார்

எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் செறிந்து வாழும் பகுதி எங்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தாயார் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

என்னுடைய பிள்ளையை 19 வயதில் இராணுவம் பிடித்தது. சந்திரிகா ஆட்சியில் இருந்த போதே எனது பிள்ளை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டான்.

எனது பிள்ளையை விடுவிக்குமாறு நான் ஏறி இறங்காத இடம் இல்லை. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

எனது பிள்ளையைப் பார்க்கக்கூட முடியவில்லை. சிறைகளில் எங்களின் பிள்ளைகள் சாப்பிடாமல் இருக்கும் போது ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை.

பச்சைத்தண்ணிதான் குடித்துவிட்டு போராட்டத்துக்கு வந்திருக்கிறேன். எங்களின் பிள்ளைகளுக்கு விடிவு கிடைக்க வேண்டும்.

அப்படி விடிவு கிடைக்கவில்லை என்றால் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்றார்.

1 comment:

  1. ஏழையின் கண்ணீர் கூரிய வாழுக்கு சமன்.

    ReplyDelete

Powered by Blogger.