Header Ads



ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், சிறையில் இருந்து திட்டமிடப்பட்டது

-றிஸ்வான் சேகு முகைதீன்-

தேர்தல் சமயத்தில் ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை திட்டமிட்டவர் தெமட்டகொட சமிந்த என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதாள குழுவைச் சேர்ந்த இவர் சிறையில் இருந்து கொண்டே, குறித்த சம்பவத்தினை திட்டமிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

இன்று (07) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த விடயம் அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல எனவும், இரு பாதாள உலக குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 



இச்சம்பத்துடன் தொடர்புபட்ட ரி56 துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், அவர்கள் வந்த வாகனத்தின் சாரதியான சமீர ரசாங்கவிடமிருந்து குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வாகன சாரதியை உடவளவ பிரதேசத்திலுள்ள தங்குமிடம் ஒன்றில் கைதுசெய்ததாகவும் அவரிடம் ரி56 துப்பாக்கி மற்றும் 21 ரவைகள், மகசின்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சித்தி நசீமா (45) என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு, நிரோசன் சம்பத் என்பவர் வைத்தியசாலையில் வைத்து மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.