Header Ads



மைத்திரியும், மகிந்தவும் கொலை செய்யப்பட இருந்தவர்களே..!

கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அரச தலைவர்கள் உள்ளிட்ட பலரைப் படுகொலை செய்யும் முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர் என்ற அதிர்ச்சித் தகவலை ரிவிர பத்திரிகை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் படுகொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து அந்தச் செய்தியில் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த தகவல்களின் பிரகாரம் கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விடுதலைப்புலிகளின் இரகசியப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டுள்ளார். அத்துடன் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து வருவது, தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, சிங்களப் புலிகளை ஒருங்கிணைப்பது போன்ற விடயங்களை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு இலட்சக்கணக்கான பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கில் ராம் தலைமையிலான குழுவினரை கைது செய்த ராணுவ புலனாய்வுப் பிரிவு அவர்களை வைத்து விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்களை தேடியழிக்கும் நடவடிக்கையொன்றை மேற்கொண்டது. அதற்காக கிழக்கு மாகாணத்த்தில் மீண்டும் விடுதலைப் போராட்டம் தொடங்கப் போவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தது. இராணுவ புலனாய்வாளர்கள் அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திருந்ததுடன், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் உதவியாளர்களாக ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டனர்.

இதனை அறியாத பிரகீத் எக்னெலிகொட ராமை இயக்கிய ராணுவப் புலனாய்வுப் பிரிவினரை விடுதலைப் புலிகளாக கருதி அவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவர்களிடம் இருந்தும் பணம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்து ஒரு தொகை வெடிமருந்துகள் பொலன்னறுவையில் வைத்து 2009ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையும் பிரகீத் எக்னெலிகொடவின் மூலமாகவே விடுதலைப் புலிகள் கொண்டு வந்திருந்ததுடன், அவரிடமிருந்து கசிந்த தகவல் மூலமாகவே வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுற்ற பின்னர் அன்றைய அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைப் படுகொலை படுகொலை செய்யும் நோக்குடன் அந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதன் பின்னர் பிரகீத் எக்னெலிகொடவின் உதவியுடன் விடுதலைப் புலிகளால் கொழும்பு, கல்கிஸ்ஸையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் ராணுவப் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னரும் கூட தான் ராணுவப் புலனாய்வாளர்களால் பின் தொடரப்படுவதை பிரகீத் எக்னெலிகொட அறிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில்தான் அவர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யும் திட்டமொன்றை ராணுவ புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கிய போலி விடுதலைப் புலிகள் அமைப்பிடம் முன்மொழிந்துள்ளார்.

அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடொன்றுக்குச் செல்லும்போது அவரையும், அவருடன் கூடச் செல்லும் அதிகாரிகளையும் படுகொலை செய்யும் திட்டமாகும்.

அதற்காக முன்னாள் ஜனாதிபதி பயணம் செய்யும் விமானத்தை தாக்கியழிப்பது பிரகீத் எக்னெலிகொடவின் திட்டமாகும். அவர் பெரும்பாலும் மிஹின் லங்கா விமானத்தில் பயணம் செய்வதன் காரணமாக பொதுமக்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், அதன் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாது என்றும் பிரகீத் எக்னெலிகொட தெரிவித்துள்ளர். அத்துடன் இவ்வாறான ஒரு கொலைச் சம்பவத்தை நடத்தி முடித்தால் விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் வராது. அதற்குப் பதிலாக யுத்த வெற்றியை வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாட்டத்தில் இருந்த முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதே சந்தேகங்கள் எழும் என்றும் பிரகீத் எக்னெலிகொட விளக்கியிருந்தார்.

அத்திட்டத்தின்படி நீர்கொழும்பில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான சிறிய ரக ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வந்து கொடுக்க உதவுவது, அத்துடன் அங்கு தங்கவுள்ள விடுதலைப் புலிகளுக்கு போலி அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பது போன்ற பொறுப்புகளை பிரகீத் எக்னெலிகொட ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னரும் அவர் இவ்வாறான பல சதி நடவடிக்கைகளை திட்டமிட்ட காரணத்தினாலேயே பிரகீத் எக்னெலிகொட ராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.எனினும் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் ஹிங்குராக்கொடையில் வைத்து அவர் ராணுவத்தினரிமிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிவிர பத்திரிகை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறவினர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.