Header Ads



சக மனிதனின் முகம் பார்த்து, பேசுவதற்கு தடைபோடும் மின்னணு சாதனங்கள்

வால்-இ’ என்கிற படத்தில், பூமி நாசமடைந்து, மனிதன் வாழத்தகுதியற்று போனபின்னர் 700 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதன் நடக்கத் தெரியாமல், படுத்தபடியே நகரும் சாதனம் ஒன்றில், எதிரில் வரும் யாரையும் கண்டுகொள்ளாமல், டேப்லட் போன்ற ஒரு சாதனத்தின் வாயிலாக இன்னொரு மனிதனிடம் உரையாற்றுவான்.

இதுபோல, பூமி அழிந்தபின் நடந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நமது வீட்டுச் சின்னக் குழந்தைகள் நம் கண் முன்னே இப்படி செய்வதை பார்க்க மிகக் கடினமாகவே உள்ளது. பிறந்த குழந்தைக்கே இப்போதெல்லாம் செல்போன் காட்டித்தானே சோறூட்ட வேண்டியுள்ளது!

அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் உள்ள பொதுப் பள்ளியொன்றில் படிக்கும் மாணவ, மாணவியரை இரு பிரிவாக பகுத்து, ஒரு பகுதி மாணவர்களை ஐந்து நாட்களுக்கு கூடாரத்தில் தங்க வைத்தனர். இம்மாணவர்கள் எவ்வித மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பிரிவினரை, எப்போதும் போல் இருக்கும்படி கூறியுள்ளனர்.

கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் முதலில் அச்சாதனங்களின்றி வருத்தமடைந்தாலும், பின்னர் அது இல்லாமல் நாட்களை நகர்த்த அவர்கள் பழகிக்கொண்டனர். இருவித மாணவர்களுக்கும், இந்த ஐந்து நாட்களுக்கு முன்பும், பின்பும் பல்வேறு உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளுடன்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன.

இதில் காண்பிக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் செய்கைகளைக் கூட கூடாரத்தில் தங்க வைக்கப்படாத, மாணவர்களால் கண்டறிய முடியவில்லை. இது மனித முகங்களை பார்த்துக்கூட பேசாமல்போவதால் இவ்வாறு நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.

தொழில்நுட்பத்தை எதிர்க்க வேண்டாம், முறையாக பயன்படுத்த கற்றுக் கொடுக்கலாமே! கடைசியாக நீங்கள் எப்போது சக மனிதனின் முகம் பார்த்து பேசினீர்கள்? நினைவிருக்கிறதா!

No comments

Powered by Blogger.