Header Ads



''மீண்டும் தலைதூக்கத் துடிக்கும் இனவாதம்''

-மர்லின் மரிக்கார்-

இலங்கை வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். இந்நாள் தான் இந்நாட்டு அரசியல் வரலாற்று ஓட்டப் பாதையில் பாரியதிருப்புமுனைக்கு அடித்தளமானது. அதிலும் நீண்ட காலமாக நீடித்து வந்த இனவாதம் இந்நாட்டு மக்களாலேயே தோற்கடிக்கப்பட்ட நாள் இதுவே. அதன் காரணத்தினால் ஜனவரி 08 ஆம் திகதி முதல் இனவாதம் செல்லாக் காசானது.

அதேநேரம் இந்நாட்டில் வாழும் சகல மக்களும் இன, மத பேதம் பாராது அச்சம் பீதி சந்தேகங்கள் இன்றி ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடன் வாழும் புதியுகம் ஆரம்பமான நாளும் இதுவே அதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட நல்லாட்சியின் பிரதான பண்பாகும்.

இதன் விளைவாக இந்நாட்டில் இனவாத பூதம் உயிரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அது இனி மீளத் தலைதூக்காது. என்று எல்லா மக்களுமே நம்பினர். ஆனால் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் வெளிப்பட்டுள்ள இனவாத குரல்கள் மக்களின் நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 08 ஆம் திகதி முதல் நிலவி வருகின்ற இனவாதக் கூச்சலற்ற நிலைமை தொடர்ந்தும் நீடித்து நிலைக்குமா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் இப்போது உருவாகியுள்ளது.

அதாவது கடந்த திங்களன்று இரவு தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதிலும் அரசாங்கப் பாடசாலைகளின் இஸ்லாம் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தமது தலையீட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராகத் தெரிவித்த இந்த இனவாதக் கூற்றுக்களின் சூடு தணிவதற்குள் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஉதய கம்மன்பில பத்தரமுல்ல, பிட்டகோட் டையிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தி மிக மோசமான இனவாதத்தை உமிழ்திருக்கின்றார்.

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் 45 வருட கால பரந்த அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் 22 வது பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘இந்து’ பத்திரிகைக்கு முக்கியத்துவம் மிக்க பேட்டி யொன்றை வழங்கியுள்ளார். அப்பேட்டியில் அவர் முன்வைத்தி ருக்கும் யோசனைகளும் கருத்துக் களும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அரசியல் மேம்பாட்டுக்கும் பாரிய பங்களிப்பு நல்கும். இதில் இரு கருத்துக்கு இட மிருக்க முடியாது.

அப்படியிருக்கையில், இந்நேர்காணலில் பிரதமர் குறிப்பிட்டுள்ள விடயங்களை இனவாதக் கண்கொண்டு நோக்கியுள்ள உதய கம்மன்பில எம்.பி. ‘வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று இனத்துவேஷத்தைக் கக்கியுள்ளார். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அப்பேட்டியை திறந்த மனதுடன் அவர் படித்திருந்தால் இவ்வாறு ஒருபோதும் கூறி இருக்கமாட்டார் அதுதான் உண்மை.

இதேவேளை நாட்டின் முன்னேற்றத்தையும் சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டு ஐ.தே.கட்சியும் ஸ்ரீல.சு.கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இரு பிரதான கட்சிகளதும் தலைமைகள் இணக்கம் கண்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமே இது.

இதனையும் இனவாதக் கண்ணாடி அணிந்து நோக்கியுள்ள உதய கம்மன்பில, “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை எதிர்க் கட்சித் தலைவராக்கி தமிbழத்தை உருவாக்கும் சதித்திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் குறிப்பிடுவது போன்ற நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப் படுவதாக தெரிய வில்லை.

இதேநேரம் “வடக்கில் பிரபாகரனின் உருவச்சிலையை அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்று வடக்கிலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள பியகம சுசில தேரர் “உறங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டியெழுப்ப வேண்டாம்” என்று எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மிக மோசமான இனவாதக் குரல்கள் ஜனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னர் இப்போதுதான் வெளிப் படத் தொடங்கியு ள்ளன. இது நாட் டுக்கு ஆரோக்கியமான தல்ல.

இந்நாட்டில் இரண்டு மூன்று தசாப்தங்களாக இரத்த ஆறு ஓடியது. அதற்கு இனியும் இடமளிக்க முடியாது. அச்சம், பீதி சந்தேகங்களின்றி ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் ஜனவரி 08ம் திகதி நாட்டு மக்கள் இனவாதத்தை தோற்கடித்து நல்லாட்சியை ஏற்படுத்தினர்.

இவ்வாறான நிலையில் பொய் புரட்டுக்களை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை உசுப்பேற்றுவதற்கு இவர்கள் முயற்சி செய்வதன் வெளிப்பாடே இந்த இனவாத கூச்சல்கள்.

இவ்வருடம் ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் நாட்டு மக்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்ததையும் நல்லாட்சிக்கு அங்கீகாரம் வழங்கியதையும் இவர்கள் ஒரு தரம் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த ஆணையானது அவ்வளவு இலகுவாக மறக்கக் கூடியதல்ல.

இது பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு. இங்கு வாழும் மக்களில் 99.6 சதவீதத்தினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் முற்றாக நிராகரிக்கின்றனர். ஏனெனில் இனவாதத்தால் இனங்களுக்கிடையில் ஐயங்களும் சந்தேகங்களும்தான் தோற்றம் பெறும் அது நாட்டின் முன்னேற்றத்துக்கும் மக்களின் சுபீட்சத்துக்கும் பெறும் தடைக்கல்லாக அமையும் இதனை இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலில் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனாவின் பொதுஜன பெரமுன கட்சி இனவாத மதவாதப் பிரசாரங்களுடன் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் போட்டியிட்டும் கூட அக்கட்சிக்குக் கிடைக்கப்பெற்ற வாக்கு களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவானது.

ஆகவே அற்ப அரசியல் இலாபம் பெரும் நோக்கில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிப் பிடிக்க முயற்சி செய்வோர் நாட்டு மக்களின் மனநிலையை முதலில் பார்க்க வேண்டும். அதுவே உண்மையான மக்கள் சேவகனின் பண்பு ஜனநாயக நாடொன்றில் மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டியதே அரசியல் வாதிகளின் பொறுப்பே தவிர மக்கள் மத்தியில் இன, மத பேதங்களை ஏற்படுத்தி அதில் அற்ப இலாபம் பெறுவதல்ல இதனை இவ்வாறானவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதேநேரம் கடந்த ஆட்சிக் காலத்தில் நாளுக்கு நாள் முழுத் தேசத்தையுமே எரித்து விடக் கூடிய வகையில் இனவாதம் கக்கி வந்தவர்கள் ஜனவரி 08 ஆம் திகதியோடு வாய் மூடி மெளனிகளாகினர். ஆனால் அவர்களும் இப்போது வாய் திறக்க முயற்சிப்பதுபோல் தெரிகிறது.

எனவே, இந்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு ஜனவரி 08 ஆம் திகதியோடு தோற்கடிக்கப்பட்ட இனவாதத்தையும், மதவாதத்தையும் மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிக்கப்படு வதையே உதயகம்மன்பில எம்.பி. ஞானசார தேரர், பியகம சுசில தேரர் போன்றோரின் கூற்றுக்கள் வெளிப்படுத்து கின்றன. ஆனால் இனவாதமும் மதவாதமும் இனியொரு போதும் இந்நாட்டில் தலை தூக்கிட இடமளிக் கலாகாது. இதற்கு எவரும் துணை போகவும் கூடாது.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டுக்கு அவற்றால் எவ்வித நன்மையுமே கிடைக்காது. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதமற்ற மதவாதமற்ற எல்லோரும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் அச்சம். பீதி சந்தேகங்கள் இன்றி இந்நாட்டில் வாழ்ந்திடவே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கான சூழலை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் இனவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதனை முளையிலேயே கிள்ளிவிட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. 

4 comments:

  1. எத்தனை பேர்கள் நல்லாட்சி வந்து விட்டது என்று கூறினாலும் .உண்மையான நல்லாட்சி இன்னும் வரவில்லை .வழங்கிய வாக்குறிதிகள் நிறைவேற்றப்படாத வரையில் உண்மையான நல்லாட்சி என்று சொல்ல முடியாது நல்லாட்சியில் இதுவரையும் உண்மையான ஊழல்வாதிகள கண்டு பிடிக்க படவில்லை இன்னும் சிறுபான்மையினர் அச்சத்துடன்தான் வால வேண்டியுள்ளது

    ReplyDelete
  2. தோற்றவன் 1000 சொல்லுவான் அதுக்கு மேலயும் சோல்லுவான்.இன்முறை இனவாதத்திற்கு சாவு மணி அடித்தது சிறு பான்மை மக்கள் அல்ல சிங்கள மக்கள். ஒருக்காலும் இவர்களின் பருப்பு வேகாது

    ReplyDelete
  3. Avoid him and his massage. Our Sri Lankan people don't expect anything from him. He is doing some work for foreign currency

    ReplyDelete
  4. அலகன் , சகோதர்ர் முஸ்தபா சொல்வது சரியே!
    ஆனால் எந்த அரசாங்கமும் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்போவதில்லை.
    ஏனெனில் அவர்கள் எல்லோரும் ஒரே கூட்டமே! மக்களை ஏமாற்றுகின்ற கூட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.