Header Ads



"ஜனாதிபதி மைத்திரியின் கோமாளித்தனம்"

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி. யின் சந்தேசய சிங்கள ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய செவ்வியில்,

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி ஆசனம் உரித்தானது. ஆனால் அதனை ஜனாதிபதியோ கட்சியின் தலைவரோ தீர்மானிக்க முடியாது.

அதனை பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்றோ நடப்பது அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன.

நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதிதான் தேர்ந்தெடுக்கின்றார். அமைச்சரவையையும் அவர்தான் முடிவு செய்கின்றார். அதுவும் போதாதற்கு எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்தான் தீர்மானிக்க முயல்கின்றார்.

இது ஒரு அரசியல் கோமாளித்தனம். அத்துடன் இதன் மூலம் இலங்கையின் பல்கட்சி ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு நசுக்கப்பட்டுவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்கக் கோருபவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலர் பொதிகளுக்கு ஆசைப்பட்டு குரல் கொடுக்கின்றார்கள். அது குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக் கட்சிக்கே உரியது. ஆனால் அதனை தீர்மானிக்கும் சுதந்திரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது செவ்வியில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.