Header Ads



நான் செத்துப் போவேனா...?


தன்னுடைய கருப்பையில் பத்து மாதம் குடியிருந்து பிறந்த மகன் ‘நான் செத்துப் போவேனா, அம்மா?’ என்று தன்னையே பார்த்து கேட்கும் கொடுமையை உலகத்தில் எந்தத் தாயும் அனுபவிக்கவே கூடாது என்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த கிம் பன்டி.


எட்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு பிறந்த ஒரு ஆண் குழந்தை சராசரி அளவை விட பாதியளவே உள்ள இதயத்துடன் பிறந்தது. சாம் பன்டி என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் ஐந்து சதவீதம் அளவே உள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இதய அறுவைச் சிகிச்சைகளை சாம் பன்டிக்கு செய்து விட்டனர்.

மூன்று நாள் குழந்தையாக இருந்தபோது தொடங்கிய முதல் ஆபரேஷனுக்குப் பின்னர், இதயம் இருக்கும் மார்பு எலும்புப் பகுதியை திறந்தே வைத்திருக்கும் டாக்டர்கள், அவ்வப்போது அஞ்சறை பெட்டியில் ஆராய்வதைப் போல் அவனது இதயத்தில் அடிக்கடி ஆபரேஷன்களை செய்து வருகின்றனர்.

அழகிய, வசீகரமான முக அமைப்புடன் துறுதுறுவென இருக்கும் சாமுக்கு தற்போது பத்து வயது ஆனாலும், தோற்றத்தில் நான்கு வயது சிறுவனாகவே காணப்படுகிறான்.

இன்னும் எத்தனை ஆபரேஷன்களை செய்ய வேண்டுமோ? அந்த ஆபரேஷன்களுக்கு எல்லாம் அவனது பிஞ்சு உடல் தாக்குப் பிடிக்குமோ, இல்லையோ? என்ற கவலையில் மூழ்கிப்போய் கிடக்கும் சாமின் தாயார் கிம் பன்டி, சமீபத்தில் தனது அன்பு மகன் கேட்ட ஒரு கேள்வியால் மனம் குமுறிப்போய் தாங்க முடியாத வேதனையில் மூழ்கியுள்ளார்.

‘ஏம்மா, யாரோ இன்னும் கொஞ்ச நாளில் செத்துப்போய் விடுவதாக டாக்டர் உன்னிடம் சொன்னாரே.., அவர், என்னைப் பற்றித்தானே அப்படி சொன்னார்?’ என அவன் என்னிடம் கேட்டபோது, எனது இதயமே சுக்குநூறாக நொறுங்கிய வலியையும், வேதனையையும் நான் அனுபவித்தேன்.

உலகில் எந்த ஒரு தாய்க்கும் இந்த அனுபவம் நேரக்கூடாது’ என கூறியபடி, கதறியழும் கிம் பன்டி, தனது செல்ல மகன் இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்தே உள்ளார். 

அவனுடைய இறுதி நாளைக்கு முன்னதாக கடைசி விடுமுறைப் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னிலேன்டுக்கு அவனை அழைத்துச் சென்று மகிழ்விக்க வேண்டும் என முடிவு செய்துள்ள அவர், அதற்காக சுமார் 5 ஆயிரம் பவுண்ட் நிதியும் திரட்டி வருகிறார்.

No comments

Powered by Blogger.