Header Ads



சுதந்திரக் கட்சி அடிப்படைவாதத்தினால் நிறைந்துள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 115க்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட எதிர்க்கட்சிகள் வெறும் 55 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றும். இதனால், நாடு முழுவதும் விகாரை விகாரையாக சென்று வாக்கு சேகரித்தாலும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வெறும் 40 வீத வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது. இம்முறை அதுவும் கிடைக்காது. அப்போது கிடைத்த 40 வீத வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்.

இதனால், மகிந்த ராஜபக்ச அன்று தோற்றது போல் நாளை தோற்பதும் உறுதியான உண்மை. முழு மலையகத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இல்லை.

போரை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் திட்டங்கள் மகிந்த ராஜபக்சவிடம் இருக்கவில்லை. அதற்கான திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடமே உள்ளது.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்தமை இதற்கு சிறந்த உதாரணம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் நடுநிலைமை இல்லை. அது அடிப்படைவாதத்தினால் நிறைந்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட பதவிகளில் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் பிரதிநிதித்துப்படுத்தியுள்ளமை இதற்கு காரணம்.

மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப்படுமா என நாடாளுமன்றத்தில் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பினார். அவ்வாறான விசாரணைக்கு மகிந்த ராஜபக்ச எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார். அவ்வாறு உறுதியளித்துள்ளதால், அதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச தரப்பினர் படையினரை மிகவும் நேசிக்கின்றனர் என்றால், ஏன் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தனர்.

அதேவேளை மத்திய வங்கியின் முறி பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.