Header Ads



நூடுல்ஸ் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் - உணவு நிபுணர்கள் எச்சரிக்கை

என்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? இந்த உணவுப் பழக்கத்தை 90 சதவீதம் பேர் முறையாக கடைபிடிப்பதும் இல்லை. அதுபற்றி கண்டுகொள்வதும் இல்லை. எந்த பருவத்தில் எதை சாப்பிடவேண்டும் என்பதை கண்டுபிடித்து உலகுக்கே வழி காட்டினார்கள். உணவு பற்றி பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி வைத்தனர்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழர்களிடம் உணவு பழக்கவழக்கம் மிகமிக உன்னதமாக இருந்தது. மற்ற இனங்கள் என்றைக்கு தமிழ் இனம் மீது ஆக்கிரமிப்பு செய்ததோ அதன் பிறகு எல்லாம் சிதைந்தது போல உணவுப் பழக்கமும் சிதைந்து சீர்கெட்டுப்போனது.
 
நகரங்களில், பெரும்பாலான மக்களின் தினசரி வாழ்க்கை எந்திர மயமாகி போய்விட்டது. ‘‘பணம் சம்பாதிக்க வேண்டும்’’ என்ற ஒரே ஒரு காரணத்துக்காக நகர மக்கள் ஓய்வின்றி, ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த தேவை நடுத்தர பிரிவு மக்களிடம் நிர்ப்பந்தமாகவும் நியதியாகவும்கூட மாறிவிட்டது. நாகரீக மாற்றங்கள் மக்களை மேலும் மேலும் பரபரப்புக்குள்ளாக்கி வைத்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பெரும்பாலான மக்களின் குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தினசரி பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டன. அதுபோல உணவு சாப்பிடுவதிலும் பெரும் மாற்றங்கள் வந்துள்ளது.

கம்பு, வரகு, சாமை, திணை, கேழ்வரகு போன்ற சத்துமிக்க சிறுதானிய உணவு வகைகளை சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை பக்குவப்படுத்தி உணவு தயாரிக்க கூடுதல் நேரமாகும் என்பதே இந்த சிறு தானியங்கள் காணாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த அவசர உலகில் எல்லாவற்றையுமே துரிதமாக செய்து பழகிவிட்ட மக்களுக்கு உணவுப்பொருளும் துரிதமாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தனர். இதற்கு நூடுல்ஸ் உணவுப் பொருள் கைகொடுப்பதாக வந்தது.

இரண்டே நிமிடத்தில் நூடுல்சை சமைத்து சாப்பிட்டு விடலாம் என்று விளம்பரங்களில் பார்த்ததும் மக்களுக்கு கொண்டாட்ட மாகிவிட்டது. கடைகளில் விற்கும் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி வந்து சில நிமிடங்களில் உணவை தயாரித்து சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

காய்கறி வெட்ட வேண்டியதில்லை. நிறைய பாத்திரங்கள் தேவை இல்லை. சில மணி நேரம் சமையல் செய்ய வேண்டியதில்லை – என்பன போன்ற பல சுகங்களை நூடுல்ஸ் வகை உணவுப் பொருட்கள் கொடுத்தன. எனவே கடந்த சில ஆண்டுகளில் இந்த நூடுல்ஸ் கணிசமான மக்களின் தினசரி உணவாகவே மாறிவிட்டது.

சுவைக்காக இதில் ‘‘எம்.எஸ்.ஜி.’’ எனப்படும் ‘‘மோனோ சோடியம் குளுட்டாமேட்’’ என்ற ஈயத்தை நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் சேர்த்தன. இதனால் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் உணவுக்கு அடிமையாகி விட்டனர்.

இந்த நூடுல்ஸ் எப்படி தயாராகிறது தெரியுமா?

கோதுமை, மைதா ஆகிய இரண்டும்தான் நூடுல்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் தண்ணீர் ஊற்றி பிசைவார்கள்.

புரோட்டா போட மாவு பிசைவார்களோ, அப்படி பிசைந்து மாவாக மாற்றுவார்கள். பிறகு அந்த மாவை பதப்படுத்துவார்கள்.

இதையடுத்து அந்த மாவை எந்திரத்தில் போட்டு சன்னமாக தேய்த்து, ரோல் செய்வார்கள். பின்னர் அந்த சிறிய ரோல் எந்திரம் மூலம் வெட்டப்பட்டு, சிறு, சிறு நூல், நூலாக வெளியேறும்.

அவற்றை கம்பியில் தொங்கவிட்டு வென்னீர் பாய்லருக்குள் போட்டு வேக வைப்பார்கள். சுமார் 40 நிமிடம் இப்படி வேக வைப்பார்கள்.

பிறகு அவற்றை வெளியில் எடுத்து வெயிலில் காய வைப்பார்கள். ஒருநாள் முழுவதும் நன்கு காய்ந்ததும் நூடுல்சாக தயாராகி விடும். பின்னர் அவற்றை தேவைக்கு ஏற்ப பேக்கிங் செய்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் பல வகைகள் உள்ளன. சோயா நூடுல்ஸ் வேண்டும் என்றால் கோதுமை, மைதாவுடன் சோயா சேர்த்து மாவாக பிசைந்து தயாரிப்பார்கள்.

குறைந்த செலவில் நிறைய லாபம் என்பதால் இந்தியாவில் சுமார் 20 பெரிய நிறுவனங்கள் நூடுல்சை போட்டிப் போட்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நூடுல்ஸ் விற்பனை ஆகிறது.

விற்பனையை அதிகரிக்க நூடுல்ஸ் நிறுவனங்கள் விதம், விதமாக நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் செய்தன. சிறுவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான கால்சியம், புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் நூடுல்சில் நிறைய இருப்பதாக விளம்பரங்களில் கூறப்பட்டன.

இதை பொதுமக்கள் நம்பினார்கள். ஆனால் தினமும் நூடுல்ஸ் சாப்பிடும் பலர் உடல் நலம் பாதிக்கப்படுவதாக சொல்லத் தொடங்கிய பிறகே, நூடுல்ஸ் மீதான சந்தேகம் மக்களிடம் மெல்ல எழுந்தது. நூடுல்ஸ் தயாரிப்பு பற்றியும், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றியும் பரபரப்பாக தகவல்கள் வெளியானது.

அப்போதுதான் நூடுல்ஸ் உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் என்ற ரசாயன கலவை அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த ரசாயனம், நூடுல்சை விஷத் தன்மை கொண்ட உணவுப் பொருளாக மாற்றி விடுவதாக உணவு நிபுணர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து இந்தியாவில் நூடுல்ஸ் தயாரிக்கும் 15 பெரிய நிறுவனங்களின் நூல்டுஸ் உணவு பொருள் மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

நூடுல்சில் என்னென்ன சத்துகள், எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்பதற்கு இந்தியாவில் இதுவரை எந்த மதிப்பீடுகளும் செய்யப்படவில்லை. எனவே, இங்கிலாந்தின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு முகமையின் குறியீடு அளவை அடிப்படையாகக் கொண்டு தரச் சோதனை நடந்தது.

இதில் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்சிலும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் இல்லை என்று தெரியவந்தது. கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை மிகமிகக் குறைந்த அளவே இருப்பது தெரிந்தது.

மேலும் நூடுல்ஸ்களில் தேவைக்கு அதிகமாக உப்பும், கொழுப்புசத்தும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ரத்த நாளங்களில் கொழுப்பு படிதலை ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகிறது.

மேலும் தினமும் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் ஏற்படும் என்று உணவு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நூடுல்ஸ் சாப்பிடும் அளவு அதிகரித்தால் அது உடல் பருமனை ஏற்படுத்தி விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆபத்துக்களுடன் சுவைக்காக சேர்க்கும் ரசாயனம் அதிகரிக்கும்போது அதுவும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

பொதுவாக 100 கிராம் நூடுல்ஸ் உணவில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் இருக்க வேண்டும். ஆனால் பரிசோதனையில் இந்திய நூடுல்ஸ்களில் 821 முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கிவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ்தான் இப்போது ரசாயன பொருள் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தங்கள் தயாரிப்பு தரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று கூறி வருகிறது.

பொதுவாகவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று லட்சக்கணக்கான டாக்டர்கள் கூறி வருகிறார்கள். எனவே நாம்தான் நமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.