Header Ads



ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின், பிள்ளைகளுடைய மார்க்க கல்விக்காக உழைப்போம் - Eimf தலைவர் ஹனீப் மொஹமட்

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் -Eimf- 9 ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த குடும்ப ஒன்றுகூடல் 22,23,24,25 ஆம் திகதிகளில் சுவிஸர்லாந்து அல்பினா ஹோட்டலில் நடைபெற்றது.

ஜேர்மன், பிரான்ஸ், ஹோலன்ட் மற்றும் சுவிஸ் நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பலஸ்தீனம், அல்ஜீரியா, மொரோக்கோ, எகிப்து உள்ளிட்ட அரபு மொழி பேசும் தேசங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளும் இந்த குடும்ப ஒன்றுகூடலில் கலந்துகொண்டமை சிறப்பு நிகழ்வாகும்.

4 நாட்கள் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்தியாவைச் சேர்ந்த, பிரிட்டனில் இருந்து வருகைதந்த மௌலவி இப்றாஹிம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரதான வழிகாட்டல்களை வழங்கினர். அனைத்து நிகழ்வுகளும் தமிழ் மற்றும் ஜேர்மன் மொழிகளில் நடைபெற்றது. 

அல்குர்ஆன் விளக்க வகுப்பு,  சிறப்பு பயான், சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள், இளவயது மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு உள்ளிட்ட மற்றும் பல நிகழ்வுகளும்  நடைபெற்றதுடன், தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கபட்டு, கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இறுதிநாள் நிகழ்வில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவரும், சுவிஸ் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் தலைவருமான அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,

குறித்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வானது சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களினால் ஏற்பாடு செய்யபட்டுள்ள போதிலும், இதில் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் சுவிஸில் வாழும் அரபு தேசங்களைச் சேர்ந்த மக்களும் பங்குகொண்டிருப்பது சிறப்பம்சமாகும்.

ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களிடையே வைத்தியர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்கள் உருவாக வேண்டும். இதற்கு ஐரோப்பிய வாழ் இஸ்லாமிய தகவல் நிலையம் ஒத்துழைப்பு நல்கும். ஐரோப்பாவில் வளர்ந்துவரும் எமது சந்ததிகளிடம் உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியையும் ஊட்டி வளர்ப்பது அவசியமாகிறது. அதன் அடிப்டையிலேயே மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் மற்றும்  இஸ்லாமிய தகவல் நிலையம் ஆகியன பங்காற்றிவருகின்றன. வேறுபாடுகளை மறந்து ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்கள் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டுமெனவும் அவர் தனது உரையில் வேண்டிக்கொண்டதுடன் இந்த குடும்ப ஒன்றுகூடல் வெற்றிகரமாக நடைபெற்றுமுடிய ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் தனது நன்றிகளை கூறி, அடுத்தவருடம் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ள 10 ஆவது ஆண்டு குடும்ப ஒன்றுகூடலிலும் சகலரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தபோது, ஒன்றுகூடலில் பங்கேற்பதாக சிறுவர்கள் அல்லாஹு அக்பர் முழக்கத்துடன் உறுதிமொழி வழங்கியது உணர்வுபூர்வமாக அமைந்தது.

அதேவேளை இந்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வில் பிரிட்டனில் இருந்து வருகைதந்திருந்த மௌலவி இப்றாஹிம், சுவிஸ் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலின் அபிவிருத்தி பணிகளுக்காக 3000 சுவிஸ் பிராங்குகளை பள்ளிவாசல் தலைவர் ஹனீப்பிடம் ஒப்படைத்தார்.



No comments

Powered by Blogger.