Header Ads



தற்போதைய அரசாங்கம் ஒர் ஊறுகாய்க்கு சமமானது - சரத் என் சில்வா

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றுமொரு அந்தர்பல்டி அடித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த தேர்தல் காலத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சரத் என் சில்வா, தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என எதிர்பார்க்கவில்லை எனவும், இந்த விடயம் அறிவிக்கப்பட்ட உடனேயே பிழையான திசையில் நகர்வதாக உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுவதற்கான பட்டியல் ஒன்றை தயாரித்து தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதனை தாம் குப்பை கூடையில் வீசி எறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பல்வேறு ஊடகங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராட்டியும், மஹிந்த ராஜபக்ஸவை கடுமையாக சாடியும் சரத் என் சில்வா கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18ம் திருத்தச் சட்டத்தினை எதிர்த்ததாகவும் இதுவே மஹிந்தவிற்கும் தமக்கும் இடையிலான முரண்பாடு எனவும் வேறு பிரச்சினைகள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மூன்று தடவைகள் ஆட்சி வகிப்பதனை தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒர் ஊறுகாய்க்கு சமமானது எனவும் விரைவில் ஜீரணமாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவிற்கே தாம் வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பிரதம நீதியரசர் பங்கேற்கவில்லை எனவும், மரபாக பிரதம நீதியரசர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார் எனவும் அதனை காண முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், பிரதமர் ஒருவர் பதவி வகித்துக் கொண்டிருக்கும் தருணத்திலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்தமை நகைப்பிற்குரிய விடயமாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பமே பிழையாக அமைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட விதம், முன்னாள் பிரதம நீதியரசர் சிரான பணிகளைப் பொறுப்பேற்று பதவி விலகிய விதம் அனைத்துமே சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளின் பின்னர் இந்த விடயங்களை வாசிக்கும் எவரும் இதனை நகைச்சுவையாகவே பார்ப்பார்கள் எனவும், வீதி நாடங்களைப் போன்றே சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மொஹான் பீரிஸை நியமிக்க வேண்டாம் என தாம் கோரியதாகவும், அதனை மஹிந்த பொருட்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் நபர்களை கைது செய்வது தொடர்பிலான அரசியல் சாசன சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களைத் தவிர வேறு விடயங்களுக்காக நபர்களை கைது செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.நபர்களை கைது செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நீதிமன்றங்கள் இரவு ஒன்பது மணி வரையில் திறந்து வைத்து நபர்கள் பழிவாங்கப்படும் கலாச்சாரத்தை ரணில் விக்ரமசிங்க நாட்டில் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நபர்களை கைது செய்வதும் விடுவிப்பதும் நகைப்பிற்குரிய விடயங்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலில் தோல்வியடைந்த உடனேயே மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் அதற்கு மஹிந்தவை பாராட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் சூழ்ச்சி எதுவும் நடக்கவில்லை எனவும் அவ்வாறு நடந்திருந்தால் சீ.சீ.டி.வி கமராவில் அவை பதிவாகியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தமது இந்த கருத்தை நகர நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களும், கொழும்பு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் மோசடி வழக்கில் அப்போது பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸவை சிறையில் அடைக்காமைக்காக தாம் மிகவும் வருந்துவதாகவும், நாட்டை அதள பாதாளத்தில் இட்டுச் சென்றவர்கள் மஹிந்த ராஜபக்ஸக்களே எனவும் விமர்சனம் செய்திருந்தார். நியாயமான தீர்ப்பினை வழங்காமைக்காக தாம் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.