Header Ads



சவூதி அரேபிய பொலிஸ் பிரேத அறையில், 4 மாதகாலமாக வைக்கப்பட்டிருந்த இலங்கையரின் சடலம்

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்காக சென்றிருந்த கண்டி பன்விலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரின் சடலம் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பன்விலை, உனனகல தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான முனியாண்டி ரனிதமலர் சுப்பையா என்ற பெண், பணிப்பெண்ணாக 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.

சவுதியில் பணிக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் சுமார் ஒருவருடம் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த இந்தப் பெண், அங்கிருந்து வேறொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக மாறியுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ரனிதமலர் வீட்டிற்கு பணம் அனுப்பியுள்ளதுடன், அதற்கு மறுநாளான 8 ஆம் திகதி தனது கணவருடனும் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார்.

அதன்பின்னர், கடந்த நான்குமாத காலமாக இந்த பணிப்பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்புகளோ அல்லது எந்தவிதமான தகவலோ கிடைக்காத நிலையில், சவுதியில் பணிபுரிகின்ற தனக்கு பரிச்சயமான இலங்கையர் ஒருவரிடம் விபரங்களைக் கூறி விசாரிக்குமாறு பெண்ணின் கணவர் சில தினங்களுக்கு முன்னர் கேட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் பணிபுரிந்த வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஒருவர் அங்கில்லை என வீட்டின் எஜமானரால் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சவுதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தபோது, ரனிதமலரின் சடலம் கடந்த நான்கு மாதகாலமாக பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

தனது சொந்த பணத்தில் பெருமளவு செலவு மேற்கொண்டு பெண்ணின் உடலை குறிப்பிட்ட இலங்கையர், நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1 comment:

  1. "கண்டி பன்வில பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில்" என்பது, "கண்டி பன்வில பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அநியாயமாக கொலை செய்யப்பட்ட நிலையில்" என்று வந்திருக்க வேண்டும். அரபு நாடுகளில், அரபியரல்லாத மனிதர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.