Header Ads



27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி

எம்.ஏ.எம். நிலாம்  19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி ஆதரவளிக்காது போனால் அரசு பதவி விலகி தேர்தலுக்கு செல்வதைவிட வேறு மாற்று  வழி கிடையாதெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பமும் அவரது  அடிவருடிகளும் மீண்டுமொரு தடவை தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.  

எதிர்வரும் 27 ஆம் திகதி ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், ஜனநாயகத்தை மதிக்கும் சகலரும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.  அலரி மாளிகையில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டார்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இங்கு தொடர்ந்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (நேற்று)100 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மிகவும் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். நாட்டு மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக செயற்படவும் நடமாடவும் கூடியதான சூழ்நிலை உருவாகியுள்ளது. எம்மை விமர்சிப்போரை, எதிர்ப்போரை நாம் ஒருபோதும் தாண்டிக்கப்போவதில்லை. அந்த ஜனநாயக உரிமையை தட்டிப்பறிக்கமாட்டோம்.  இன்று நாட்டில் மீண்டும் இன ஒற்றுமை  கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. 30 வருட காலத்துக்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட பங்கேற்றார்கள். இதனை நம்பிக்கையின் வெளிப்பாடாகவே நோக்குகின்றோம்.  

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி சகல இன மக்களும் ஒன்றுபட்ட யுகமாகவே இன்றைய காலத்தைப் பார்க்கின்றோம். எல்லோரும் இலங்கையராக ஓரணியில் இணைந்திருப்பது பெரும் மன நிறைவைத் தருகின்றது.  10 வருடங்களாக புரையோடிப்போயிருந்த இலஞ்சம், ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்டி முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம். இன்று பணப்பரிமாற்றம்  சீராகக் கையாளப்படுகின்றது. சில முதலைகளிடம்        சிக்கியிருந்த பொருளாதாரத்தை சாதாரண மக்களின் கைகளுக்கு மாற்றியுள்ளோம். இவற்றைச் சகித்துக்கொள்ளமுடியாத சில சக்திகள் "கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது' என்ற தோரணையில் பிதற்றுகின்றார்கள்.  இன்று புதியதொரு அரசியல் கலாசாரத்தை நாம் தோற்றுவித்துள்ளோம். ஜனாதிபதி சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர். அமைச்சரவையில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். 

இதனைவிட எமது நாட்டுக்கு என்ன தேவை? எமது பயணம் தொடரும். இடையில் தடைப்படப்போவதில்லை. 19 க்கு ஆதரவு கிட்டாவிட்டால் பாராளுமன்றம் கலையும். அதன்பின்னர் தேர்தலுக்கு முகம் கொடுத்து மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். அப்போதும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார். அவரோடு இணைந்து நாட்டில் நல்லாட்சியை பலப்படுத்துவோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  நிகழ்வில் நீதியமைச்சர்  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் பேசினர். 

No comments

Powered by Blogger.