Header Ads



அமெரிக்காவில் தலைவிரித்தாடும், பொலிஸ் அராஜகம்

மனித உரிமை மீறல்களும் மனித நேயத்துக்கு எதிரான அதிகாரவர்க்கத்தின் அராஜகங்களும் அங்கிங்கெனாதபடி உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன. இதற்கு கண்கண்ட உதாரணமாக அமெரிக்காவில் இன்று வீடற்ற நடைபாதைவாசி ஒருவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் அமைந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்க வீடுகளற்றவர்கள் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளில் தங்கி வருகின்றனர். இதைப் போன்ற ஒரு பகுதியை இன்று திடீரென சுற்றி வளைத்த போலீசார் அங்கு தங்கியிருந்த ஒருவரை நோக்கி டீசரால் (மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கி) சுட்டனர்.

இதற்கிடையே, ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியில் இருந்து சீறிக்கிளம்பிய 5 தோட்டாக்கள் அந்த மனிதரின் உயிரை நொடிப்பொழுதில் பறித்தது. போலீசாரின் இந்த அத்துமீறலை தனது செல்போனால் படம்பிடித்த ஒரு சமூக ஆர்வலர் அதை வீடியோ காட்சியாக வெளியிட்டதையடுத்து இந்த மனித உரிமை மீறல் அமெரிக்க மக்களின் இன்றைய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியான அந்த நபர் ஒரு மனநோயாளி என்றும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர், அதனால்தான் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் வாசிகள் ஆளுக்கொரு மாதிரியாக பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்டவர் மனநோயாளியாகவும் இருக்கலாம். அல்லது, கிரிமினல் குற்றவாளியாகவும் இருக்கலாம். முறையான விசாரணை இல்லாமல் ஒரு உயிரை பறிக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு எந்த நாட்டின் சட்டமும் இதுவரை வழங்கவில்லயே..? என உலகெங்கிலும் வாழும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேபோல், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனை பார்க்கச் சென்ற ஒரு இந்தியரை கடந்த மாதம் அமெரிக்க போலீசார் சுற்றிவளைத்து மிருகத்தனமாக தாக்கியதில் அவர் குற்றுயிராக அங்கு சிகிச்சை பெற்றுவருவது, நினைவிருக்கலாம்.

1 comment:

  1. புத்தி மங்கிக்கிடக்கும் அமெரிக்க போலிஸ்

    ReplyDelete

Powered by Blogger.