Header Ads



பாழ்பட்டுப் போன இன்றைய அரசியல் முறைமை - ரணில் விக்ரமசிங்க

பாழ்பட்டுப் போன இன்றைய அரசியல் முறைமை மற்றும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைத்து அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவு வழங்கியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முதல்முறையாக ஐக்கிய தேசியக் கட்சி உதவியது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி பிரதிதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டமை மிக சிறந்த விடயமாகும்.

அரசாங்கத்துடன் இணையுமாறு அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதமே அழைப்பு விடுக்கப்பட்டது.

அதேவிதமாக சில கட்சிகள் அமைச்சுப் பதவிகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது போல், தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இருக்கின்றன.

அனைவரும் மூன்று முனைகளில் இருந்து செயற்பட்டாலும் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்காக செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக முக்கியமானது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இது முன்பயிற்சியாக இருக்கும். பொதுத் தேர்தலுக்கு பின்னர், முழு நாடாளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றும் தேவை தனக்கிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.