Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால தலையிட்டு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தீர்ப்பார் என எதிர்பார்க்கிறோம்

தமிழ் மக்களின் காணிகள் அரசால் மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவது நாட்டின் நல்லாட்சியை காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ள  உலமா கட்சி; முஸ்லிம்களின் காணிகளையும் மீட்டுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக  தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

நாட்டில் நிலவிய யுத்த சூழ்ந்pலைகளினால் தமிழ் மக்களின் பல்லாயிரக்கனக்கான பூமிகள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அவை தற்போது தமிழ் மக்கள் முன்னெடுத்த ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் காரணமாகவும் அவர்களின் அரசியல் தலைவர்களின் விடா முயற்சி காரணமாகவும் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படுவது மகிழ்வைத்தருகிறது.

ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களும் தமது காணிகள் பலவற்றை கடந்த காலங்களில் இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகள் இன்னமும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அதே போல் அஷ்ரப் நகர் காணிகள் பொத்துவில் மக்களின் காணிகள் என பல நூற்றுக்கணக்கான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதற்கான முயற்சிகளில் முஸ்லிம் கட்சிகளும் காத்திரமான நடவடிக்கைகளில் இறங்கியதாக தெரியவில்லை.

தேர்தல் வந்தவுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி மேடைதோறும் வாய் கிழிய கத்தும் முஸ்லிம் கட்சிகள் தேர்தல் முடிந்த பின் எந்தப்பதவியை சுருட்டலாம், எவனை குழிக்குள் தள்ளலாம் என்றே அலைவதைத்தான் காண்கிறோமே தவிர மக்களின் உரிமைகளை பெற ஜனநாயக ரீதியிலான முயற்சிகளை செய்வதை காணவில்லை. எமது கட்சியை பொறுத்தவரை எமக்கு மக்கள் சக்தி இல்லாவிட்டாலும் அறிவு, ஆற்றல் என்ற எமக்கிருக்கும் சக்தியை வைத்து இதனை அரசியல் மயப்படுத்தி தெளிவு படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் முஸ்லிம் மக்கள் வாக்குள்ள முஸ்லிம் கட்சிகளோ இது விடயங்களில் அக்கறையுடன் செயற்படுவதை காண முடியவில்லை.

முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு வெறுமனே செயலணி அமைத்தல் ஆராய்தல் என்பதெல்லாம் காலத்தை இழுத்தடிக்கும் செயலாகும். இவ்வாறான பல செயலற்ற செயலணிகளை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம். கடந்த காலங்களிலும் இத்தகைய முஸ்லிம் கட்சிகளினால் கண்ட நன்மைகளும் இத்தகைய இழுத்தடிப்புக்கள் மட்டுமே.

ஆகவே இது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைப்பார் என எதிர் பார்க்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.