Header Ads



ஜனாதிபதி மைத்திரிபாலவின், சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

“நாம் சுதந்திரமாக முன் னோக்கிப் பயணிக்கின் றோம் என்ற வகையில், இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளை கொண்டுவரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம்.

நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம்.” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் கூறியதாவது, 

நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி யுகம் உதயமாகியிருக்கும் இவ்வேளையில் இந்த 67ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.

இது எமது தேசத்தின் சுதந்திரம். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கான புதியதோர் அர்ப்பணத்துடன் மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளைத் தோற்கடித்து எதிர்காலத்தை நோக்கி புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும் சந்தர்ப்பமாகும்.

எமது நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தைப் பலப்படுத்தி அபிவிருத்தியை உறுப்படுத்திக்கொள்வதற்கு மக்களின் தேவைகளுக்கு அதிகூடிய முக்கியத்துவத்தை அளிக்கும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் அவசியமாகும். இது எமது நாட்டின் சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு பாரம்பரியங்களின் அடிப்படையில் அமைந்த நல்லாட்சி, சமூக நலனோம்புகை மற்றும் பொருளா தார முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

67 வருடங்களுக்கு முன்னர் நாம் வென்றெடுத்த சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு எமது இளைஞர் பரம்பரைக்கு புதிய திறன் அபிவிருத்தி, புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்திற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து அதனூடாக எமது தேசமெங்கும் சுதந்திர உணர்வுக்கு உரமூட்டவேண்டும்.

இந்த சுதந்திர தினக் கொண்டாட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மிகப்பெரும் தியாகங்களைச் செய்து எமது தேசத்தின் இறைமையையும் ஆள்புல எல்லையையும் பாதுகாத்த எமது பாதுகாப்புப் படையினருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கும் சந்தர்ப்பமாகும்.

மேலும் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடிய எல்லா சமூகங்கள், சமயங்கள் மற்றும் கருத்தியல்களைச் சார்ந்த மிகப்பெரும் சுதந்திரப் போராளிகளையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும்.

மேலும் இது எமது தேசத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் தேசிய ஐக்கியத்தை நினைவுகூரும் அதேநேரம், மெத்தா எல்லோருக்கும் அன்பு செலுத்துதல் என்பதற்கேற்ப நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய சந்தர்ப்பமாகும்.

வெளிநாட்டு உறவுகளில் அணிசேரா கொள்கைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள நாம் சர்வதேச சமூகத்துடன் மிகுந்த நட்புறவை எதிர்பார்த்து சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் சுபிட்சத்திற்கான எமது முன்னேற்றத்திற்கு உதவும் சர்வதேச உறவுகளுக்கும் நாம் அர்ப்பணத்துடன் உள்ளோம்.

ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலான எமது தேசத்தின் முன்னேற்றம் பெளதிக மற்றும் சமூகத் தடைகளைத் தாண்டுவது மட்டுமல்லாது. ஊழலை அதன் எல்லா வடிவங்களிலிருந்தும் ஒழித்துக்கட்டுவதையும் மக்களுக்கு அவர்களின் தலைவர்களின் மூலம் உண்மையான சேவை கிடைப்பதையும் மையப்படுத்திய நாட்டுப்பற்றுக்கு அழைப்பு விடுக்கிறது.

1 comment:

  1. ஜனாதிபதி அவர்களே,

    முன்னாள் ஜனாதிபதியை வலுவாக எதிர்க்கும் வேட்பாளர் என்ற வகையில் மட்டும்தான் ஆரம்பத்தில் எங்களில் பெரும்பாலானோர் உங்களை ஆதரித்திருந்தோம்.

    ஆயினும், காலப்போக்கில் உங்களது எளிமையையும் நல்லெண்ணம், நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்குரிய வேட்கை போன்றவற்றில் உங்களிடமிருக்கும் முனைப்புகளையும் பார்த்து எங்களது தெரிவுக்குரியவர், எங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலான தகுதியுடையவர் என்று அறிந்து கொண்டோம்.

    நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் பெப்ரவரி 4 என்றால் தீய ஆட்சி ஒழிந்து, நல்லாட்சி பிறக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பியிருந்த மக்களாகிய எங்களுக்கு சுதந்திர தினம் ஜனவரி 9 அதிகாலைதான்.

    இதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் அல்லவா?


    ReplyDelete

Powered by Blogger.