Header Ads



“சேர் நீங்களே இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்”

கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன்.

பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும்.

அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடைக்குச் சென்றிருந்தேன்.

உங்களது கட்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், என் முதுகில் தட்டி அழைத்தார்.

“சேர் நீங்களே இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்” என்றார். நான்தானே இந்தப் பிரச்சினையை எழுப்பியிருக்கின்றேன் என அவரிடம் குறிப்பிட்டேன்.

“சேர் நீங்கள் இன்று சட்ட தர்க்கங்களை முன்வைக்கின்றீர்கள், உங்களுக்கு அதிகாரம் இருந்த காலத்தில், ஒரு வசனத் தொடரில் அந்த நபரை (ஜனாதிபதியை) இறுக்கியிருந்தால் இந்த நாட்டுக்கு எவ்வளவு சேவை செய்த நபராக வரலாற்றில் இடம்பிடித்திருப்பீர்கள்” என்றார்.

உண்மையில் நான் அந்த கூற்றினால் வெட்கப்பட்டேன் என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என்பதனை தெளிவுபடுத்தும் நோக்கில் ஜே.வி.பி.யினால் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார்.

1 comment:

  1. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சரத் என். சில்வா கூறுகின்றார்.

    மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானபோது, அவர் மீதான குற்ற விசாரணையை நிறுத்தி சரத் என்.சில்வா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அப்போது, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதரங்கள் மீதான சந்தேகத்தின் பலனை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்து, அவர் சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து தடுத்ததாக சரத் என். சில்வா கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். அன்று மகிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைத்திருந்தால், அவர் இன்று ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்றும் சரத் சில்வா கூறியுள்ளார்.

    ‘2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ரிமாண்டில் போட்டு சிறையலடைப்பதற்கான வாய்ப்பு தான் இருந்தது. நான் அந்த நேரத்தில், எனக்குத் தெரிந்தவரையில் நீதியை நிறைவேற்றினேன்’ என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.

    (படம்: மகிந்த ராஜபக்ஷ, சரத் சில்வா முன்னிலையில் முதலாவது தவணைக்கு பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோது)
    ‘அதாவது இந்த சந்தர்ப்பத்தில் இவரை சிறையில் அடைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினேன். அதனால், அவரால் போட்டியிட முடிந்தது. ஜனாதிபதியாக நியமனம் பெற்றார். இரண்டாவது தவணைக்கும் தெரிவானார்’ என்றும் கூறினார் சரத் என். சில்வா.Sarath_Maginta

    ‘இப்போது இவர் செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது, உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றது என்பது எமக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். பொதுச் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன. அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா இல்லையா?’ என்று சரத் சில்வா கூறினார்.

    மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புப்படி தகுதியை இழந்துவிட்டார் என்றும் முன்னாள் தலைமை நீதியரசர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.