Header Ads



காரைதீவு பள்ளிவாசல் - தமிழர்கள் உண்மைகளை புரியவேண்டும்..!

காரைதீவு முச்சந்தியில் ஸியாரத்துடனான பள்ளிவாசல் அமைந்திருந்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி சம்பந்தமாக திட்டமிட்ட அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருப்பது சகலரும் அறிந்த உண்மையாகும். மேற்படி காணியானது காரைதீவு முச்சந்திக்கருகாமையில் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் மேற்குப்புறமாக அமைந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் மெஹர்பான் அலிஸா கலீபா கலாபத் ஒலியுள்ளா அவர்கள் அடக்கஞ்செய்யப்பட்டதுமான இந்தக்காணியானது 1830ஆம் ஆண்டு மட்டக்களப்பு காணிப்பதிவகத்தில் பதியப்பட்டு உத்தியோகபூர்வமாக சாய்ந்தமருது ஜூம்மாப்பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்தது. அது முதற் கொண்டு அதனுடையதும் மற்றும் அதனோடமைக்கப்பட்டிருந்த கடைகளுக்குமுரிய பரிபாலனத்தை சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் கவனித்துக்கொண்டு வந்திருக்கின்றது.

கடந்த கால பயங்கரவாத மற்றும் இன வன்முறைகளைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்த  ஸியாரத்துடனான பள்ளிவாசல் மற்றும் கடைகள் யாவும் தீயநோக்கம் கொண்ட சில விசமிகளினால் நிர்மூலமாக்கப்பட்டு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் அங்கு சென்று கவனிக்க முடியாதவாறு முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தினர். பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த காரணத்தால், அங்கிருந்த தமது வீடுகளுக்குக் கூட தமிழ் சகோதரர்கள் செல்ல முடியாமலிருந்தது போலவே சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினருக்கும் தொடர்ந்தும் அங்கு சென்று கவனிக்க முடியாத நிலை காணப்பட்டது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சியில் பயங்கரவாதப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து குறித்த காணியின் புனர்நிர்மானம் சம்பந்தமான நடவடிக்கைகளில் சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் ஈடுபடத் தொடங்கிய போது, திட்டமிட்ட அடிப்படையில் குரோத நோக்கம் கொண்ட சிலர் மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனைகின்றனர். இதற்கு சில அரச உயரதிகாரிகளும் உடந்தையாயிருப்பது  கவலைக்குரிய விடயமாகும். மேற்படி காணி சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமானதல்ல என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதன் மூலம் முயற்சிக்கிறார்கள் என்பது கடந்த 27. 09. 2014 ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகையின் 17ம் பக்கத்தில் வெளியான ' விபுலானந்தர் சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள காணியை தருவதாக மாவை எம்.பி. கூறவில்லை' என்ற தலைப்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் சு. பாஸ்கரனின் அறிக்கை மூலம் தெட்டத்தெளிவாகின்றது.

காரைதீவு மற்றும் கல்முனைப் பிரதேசத்திலே சகல தமிழ் தினசரிப் பத்திரகைகளின் பிரபலமான பத்திரிகை நிருபர்கள் பலர் இருக்கும் போது வாழைச்சேனை நிருபரைத் தேடிச் சென்று இந்த அறிக்கையைக் கொடுத்து வெளியிட்டிருப்பதே இதன் உள்நோக்கங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது. இவ்வாறான செயற்பாடுகளினால் உண்மையை ஒருபோதும் இருட்டடிப்புச் செய்யமுடியாது என்பதைத் தெரிவிப்பதுடன், குறித்த காணி சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலுக்குரியது என்பதற்கு ஆதாரமாக நிறையவே இருந்தாலும், ஒருசில ஆதாரங்களை மட்டும் வெளிப்படுத்துகின்றோம்.

இதற்குப் பிரதானமான ஆதாரம் தான் வயதானாலும் ஞாபகசக்தியில் தொய்வில்லாத நடுநிலையான முற்போக்கு சிந்தனையுள்ள காரைதீவு தமிழ் சகோதர பெரியார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்த்தாலே போதும். குறித்த காணியில் ஸியாரத்துடனான பள்ளிவாசலும் கடைகளும் இருந்தன என்பதையும், அவ்விடத்தில் தமது நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்ற தமது பசுமையான நினைவுகளையும் தமது மனங்களில் வஞ்சகமில்லாதவர்களாக கொட்டித் தீர்ப்பார்கள். ஆனாலும், இந்த உண்மைகளைச் சொல்வதற்கு தீவிரப்போக்குடைய பிற்போக்கு சிந்தனையுடைய சில அதிகாரமிக்கவர்கள் விடுவார்களா என்பது சந்தேகம் தான். 

மேலும், 1930ஆம் ஆண்டின் நில அளவைத் திணைக்களத்தின் நில அளவைப்படத்தில் மேற்படி முச்சந்தி தைக்காப்பள்ளியிருந்த இடத்தை 'தைக்கா வளவு ட்ரஸ்டி ஒப் த மொஸ்க்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடத்திற்கான இறைவரியை காரைதீவு கிராமாட்சி மன்றம் சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலிடமிருந்து பெற்றிருக்கின்றது.

1946ஆம் ஆண்டு பீ.வீ. கந்தையா, 1963ஆம் ஆண்டு சந்திரகேசரி, 2007ஆம் ஆண்டு செ. வரோதயன் என்ற பெயருடைய பிரபலமான நொத்தாரிசுகளால் எழுதப்பட்ட உறுதிகளில் தெற்குப்புற எல்லையாக தச்சாப்பிட்டி(தைக்காப்பிட்டி என்பது திரிபடைந்து) வளவின் பள்ளிவாசலும் அதற்குரிய வளவும் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, 1978ஆம் ஆண்டு சூறாவளி மற்றும் 1980களில் பயங்கரவாத வன்செயல்களால் பாதிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களைப் புனரமைப்பதற்காக அரசினால் வழங்கப்பட்ட நட்டஈடானது குறித்த காணியிலமைந்திருந்த ஸியாரம் மற்றும் தைக்காப்பள்ளியும் சேதமடைந்திருந்தது என்பது அந்தப்பகுதிக்கு அப்போது பொறுப்பாகவிருந்த கிராமசேவகர், காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் ஆகியோர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மேலும், காரைதீவு முச்சந்தி தைக்காப்பள்ளி சில விசமிகளால் தாக்கப்பட்டமை தொடர்பாக 01.10.1983ல் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையினரும், தமிழ் தரப்பில் காரைதீவு கோவில் தர்மகர்த்தாக்களும், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து பேசிய விடயம் சம்பந்தமாக 12.04.1984ம் திகதி தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், காரைதீவு கிராமசபை முன்னாள் தலைவரும், அம்பாறை மாவட்ட முன்னாள் அபிவிருத்தி சபை உறுப்பினருமான திரு. இ. விநாயகமூர்த்தி மற்றும் முன்னாள் காரைதீவு கிராமசபைத் தலைவரும் வைத்தியக்கலாநிதியுமான திரு. எம். பரசுராமன் ஆகிய இருவரும் பேசிய உரையின் தொகுப்பு வருமாறு. 'பக்கீர்ச் சேனைத் தைக்கா மற்றும் காரைதீவு முச்சந்தித் தைக்கா ஆகிய இரண்டும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலால் பல நூறு வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், அத்தைக்காக்களில் நடைபெற்ற விழாக்களில் தாங்களும் கலந்துகொண்டதாகவும, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகவும் எடுத்துக்கூறி குறித்த தைக்காப்பள்ளிகளை திரும்பக் கட்டிக்கொள்ள சாய்ந்தமருது பள்ளி நிருவாகத்துக்கு எந்தவித தடையும் இல்லை எனவும், மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க எங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தருவோம்' எனவும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காரைதீவைச் சேர்ந்த தமிழ் சகோதரர்களே குறித்த காணி சம்பந்தமான உண்மைத்தன்மையை தங்களது நூலிலேயே அண்மையில்  எழுத்துருவிலே கொணர்ந்துள்ளதையும் யாரால் தான் மறுதலித்திட முடியும்.

காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20.08.2009ம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'காரணீகம்' எனும் சிறப்ப மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு:

காரைதீவு ஆலயங்களின் வரலாறு எனும் தொடரில் இந்த மலரின் 192ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது;. ' .......1830.10.18ம் திகதிய உறுதிப்படி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காரைதீவு முச்சந்தி உள்ள காணியில் இச்சியாரம்  இருந்தது. இங்கு ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வந்த மெஹர்பான் அலிசா கலீபா கலாபத் வலியுல்லாஹ் அவர்கள் குடிசையமைத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர் மரணமானபின் இவரின் ஜனாஸா இவ்வளவில் அடக்கம் செய்யப்பட்டு ஸியாரமும் அமைக்கப்பட்டது. இதனைப் பராமரிக்க பக்கீர்மார்கள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் நியமிக்கப்பட்டனர். தற்போது  இக்கட்டிடங்கள் யாவும் அழிந்து சில தென்னமரங்கள் மட்டும் காணப்படுகின்றன'.

மேலும் அந்த சிறப்பு மலரில், 'காரைதீவின் விவசாயப் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான தனது கட்டுரையில், விவசாயப் போதனாசிரியரான இரா. விஜயராகவன் என்பவர் 103ம் பக்கத்தில் 'அக்காலப்பகுதியிலே இவ்வாறு வண்டில் மாட்டின் மூலம் நெல்லை ஏற்றிவரும் போது தங்கி தேனீர் அருந்த காரைதீவு தைக்கா சந்தியிலே ஒரு பிரபலமான தேனீர்சாலையும் இருந்துள்ளது மூத்த விவசாயிகளின் ஞாபகத்தில் உள்ளது' என்று எழுதியுள்ளார். 

தற்போது காரைதீவு முச்சந்தி என்றழைக்கப்பட்டாலும், காரைதீவு தைக்காச் சந்தி என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பதையும், இந்தக்காணியில் ஸியாரமும் பள்ளிவாசலும் இருந்தது என்பதையும் நடுநிலை மனம் படைத்த காரைதீவு தமிழ் சகோதரர்களே சொல்கின்றார்கள். அவ்வாறே தற்போது வரலாற்றையே மாற்றியமைக்க முனைவது போல, குறித்த இடத்தை விபுலானந்த சதுக்கம் என்று புதிதாக அழைக்கிறார்கள். இந்தப் பெயர் எப்போதிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகும்.

கடந்த 21 10 2014ம் திகதிய வீரகேசரி பத்திரிகையில், 'பிரதேச சபையின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது எனது கடமை' எனும் தலைப்பில் பொறுப்பானதொரு பதவியிலுள்ள காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. யோ. கோபிகாந்த் அவர்கள் உண்மைக்குப் புறம்பானதும், மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியதுமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். தங்களுக்குச் சொந்தமான காணி என்பதற்கு தகுந்த ஆதாரங்களை வைத்திருக்கும் கௌரவமான உயரிய சபையான சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் மீது அபாண்டமான பழியைச் சுமத்துவதன் மூலம் கொச்சைப்படுத்த முனைகின்றார். அரசியல் செய்வது வேறு, நிருவாகம் செய்வது வேறு. அவர் குற்றஞ்சாட்டுவது போன்று பிழை நடந்திருக்கிறது என்று அவருக்கு உறுதியாகத் தெரியுமானால், தமது கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறி விட்டார்கள் என்று குறித்த பகுதிக்கான அப்போதிருந்த கிராமசேவை அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கெதிராகவே முதலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவரிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் இதனைச் செய்ய அவர் முன்வருவாரா என்று கேட்கின்றோம்.

மேலும், இந்த விடயம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்ட போது அதனை சமரசமாகத் தீர்த்து வைக்க வேண்டுமென்று ஆரம்ப காலங்களில் முயற்சி செய்த அந்தக் காலத்திலேயே வாழ்ந்திருந்த காரைதீவைச் சேர்ந்த தமிழ் பெரியார்கள், மற்றவர்களிடமும், ஏடுகளிலுமே படித்து வரலாற்றைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலையிலுள்ள தவிசாளரை விட விடயம் தெரியாத புத்தியசாலியற்றவர்கள் என்று அர்த்தப்படுமா என்பதை தமிழ் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

உண்மைகள் இவ்வாறிருக்கும் போது, திட்டமிட்டு சர்ச்சைகளை உண்டாக்குவதற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், அறிக்கைகளையும் விடுவதன் மூலம் ஒரு புனிதமான இடத்தையும், ஒரு கௌரவமான சபையையும் கொச்சைப்படுத்தி மத நிந்தனைக்குள்ளாகாதீர்கள்.

டாக்டர் என். ஆரிப்
நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்
சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல்

No comments

Powered by Blogger.