Header Ads



தொலைக்காட்சியில் அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி. வெளியே காத்திருந்த குண்டர்கள்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

சிங்களத் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் லஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார். நேற்று இரவு இந்த நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருந்தது.

நிகழ்ச்சி நிறைவில் ரஞ்சனை தாக்கும் நோக்கில் குண்டர் கூட்டமொன்று தொலைக்காட்சி நிலையத்திற்கு அருகாமையில் ஆயுதங்களுடன் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களுடன் குறித்த குண்டர்கள் ரஞ்சனை தாக்க முயற்சித்திருந்தனர் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க நீண்ட நேரம் தொலைக்காட்சி நிலையத்தில் நின்றதாகவும் பின்னர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தொலைக்காட்சி நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விவாதம் நடத்தப்பட்ட வேளையில் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசக் கூடாத வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வந்த நாட்டின் தலைவரை இழிவுபடுத்துவதனை பெண்களைப் போன்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற அர்த்தத்தில் அமைச்சர் கோபாவேசத்துடன் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பார்வையிட்டு கொண்டிருப்பதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சரரை கேட்டுக்கொண்டார்.

எனினும் அமைச்சர் தாம் பயன்படுத்திய வார்த்தைக்காக மன்னிப்பு கோரவில்லை.

No comments

Powered by Blogger.