Header Ads



மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக் கூடாது - மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதிலடி

வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் வைத்துக் கூறியுள்ளார். வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை, வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார்.

இன்று புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு தொண்டமனாறு நீர்ப்பாசன திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு,

தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அலுவலர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே!

இன்று இந்த ஆய்வு மையத்தைத் திறந்து வைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். பல வழிகளிலும் எம்மைக் கட்டுப்படுத்தி செயலற்றதாகச் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கி வருகையில் ஏதோ ஒரு வழியில்  மக்கள் சேவையில் நாங்கள் இறங்கக் கூடியதாக இருக்கின்றது என்பது எனக்குப் பெரு மகிழ்வைத் தருகின்றது.

எமது கௌரவ அமைச்சர்களே இதன் பொருட்டு பாராட்டுக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்களின் விடாமுயற்சியும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் அலுவலர்களின் ஆற்றலும் அனுபவமும் எமக்கு அதி விசேட நன்மையைப் பெற்றுக் கொடுத்து வருகின்றது.

இன்றைய தினம் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கைதடி விழிப்புலனற்றோரின் வெள்ளைப் பிரம்பு பாதுகாப்புத் தின விழா, கொடிகாமத்தில் ஒரு பரிசளிப்பு விழா என்று இரு கூட்டங்களில் பங்கு பற்றி விட்டு இங்கு வந்துள்ளேன்.

அதற்கு முன்னர் வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவருடன் நீண்டநேரம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அப்படியிருந்தும் இந்த நிகழ்வில் மாலைப் பொழுதில் மகிழ்வுடன் கலந்து கொள்கின்றேன் என்றால் இது எமது மக்கட் சேவையின் எடுத்துக் காட்டாக அமைவதே தான்.

எம்மைப் பல விதங்களில் அரசாங்கம் குறை கூறி வருகின்றது. தாம் செய்யுந் தவறுகளை மூடி மறைக்க எம்மைச் சாடுகிறது. முதன் முதலில் நேசக்கரம் நீட்டி எனது மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் 
கொண்டு எனது உறுதியுரையை எடுக்க ஜனாதிபதியிடம் சென்றவன் நான்.

நாட்டில் சுமுக நிலை ஏற்பட வேண்டும் எமது மக்கள் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன், அதன் பின்னர் எமக்குத் தேவையான பல விடயங்களை ஜனாதிபதி முன் வைத்தேன். அவர் தருவதாக அன்றே உறுதி மொழி கூறி இன்று இதுவரையில் தரவில்லை. அந்த ஒரு காரணமே போதும் அவரின் வருகையை நாங்கள் புறக்கணிக்க.

ஆனால் அதற்கு மேலும் பல காரணங்களைக் கூறியே எம்மால் கலந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்று மனவருத்தத்துடன் கூறிக் கடிதம் அனுப்பி வைத்தேன்.

கடிதத்தில் குறிப்பிட்டவற்றைக் குறிப்பிடாமல் அவற்றிற்குப் பதில் இறுக்காமல் வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சியில் வைத்துக் கூறியுள்ளார்.

வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை, வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார்.

எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால் தான் ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது.

மற்றைய சகோதரர் வைக்கோல் பட்டடையைப் பராமரிப்போம் பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார்.

இந்நிலையில் நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டடையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்? நாயாக உழைக்கப் போகின்றார்கள்?

ஒரு பிரதம செயலாளரை சட்டப்படி நியமிக்க வக்கில்லாதவர் ஒரு ஆளுநரை மக்கள் கோரிக்கைப் படி மாற்ற முடியாதவர் அதிகாரம் தன் வசம் என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக் கூடாது.

2012ல் நடந்தவற்றிற்கு 2014ல் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வைப்பவர், அதுவும் 2013ல் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்முடன் கலந்தாலோசியாமல் கூட்டம் வைப்பவர் எமக்கு நன்மை செய்ய வருகின்றாரா ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு நன்மை தேட வருகின்றாரா?

அவரின் நப்பாசை யாராவது ஒரு உண்மையான வடமாகாணத் தமிழ் மகனோ மகளோ தப்பித் தவறித் தமக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடும் என்பதுதான்.

நாம் எமது மக்களுக்குக் கூறியுள்ளோம் - அவர் தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் உங்களுக்குப் பெருவாரியான நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது. அவர் தற்போது தரப்பார்ப்பது அதில் ஒரு மிகச் சிறு தொகை தான். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆனால் தேர்தலில் அவரை வீழ்த்த உங்களால் முடியுமானவற்றைச் செய்யுங்கள் என்று.

ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ஜனாதிபதியின் கூற்று.

வட மாகாண மக்கள் மீது கரிசனை இருந்திருந்தால் அவர் எம்மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இங்கு வந்திருப்பார். நாங்கள் கேட்ட மிகக் குறைந்த கோரிக்கைகளையாவது கொடுத்து விட்டு வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் நன்றியுடன் வரவேற்றிருப்போம்.

நாய்களுடன் அவர் கவனமாக இருக்கட்டும்.

அடுத்து அமைச்சர் ஒருவர் “கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார்.

தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார்.

மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார்.

நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக் கொள்கின்றேன்.

தென் இந்தியாவில் பாதுகாப்பாக ஒரு தனியிடத்தில் இருத்தப்பட வேண்டியவர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் முட்டாள்கள் ஆக்கி அவற்றில் அங்கம் வகித்து தனக்கெதிராக தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி இருந்து வருவது அவரின் கெட்டித் தனத்தைக் காட்டுகிறது.

அதற்காக அவர் எவரை வேண்டுமானாலும் அடிவருடி, அவர்களுக்கு அடிமையாகச் செயற்ப்பட்டு தனது காரியத்தினைச் சாதித்து வருவதையும் நான் அறிவேன்.

அது பற்றி தம்பி ஸ்ரீதரன் அவர்கள் கூறியதைப் பத்திரிகையில் வாசித்தறிந்தேன்.

ஆனால் சில நேரங்களில் தம்மைக் கெட்டிக்காரர்களாக அடையாளம் காண்பவர்கள் தாமே முட்டாள்கள் ஆகின்றார்கள். அப்படி ஏதாவது நண்பர் டக்ளஸ்க்கு நடந்தால் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப் பட்டால் நான் அவரை முட்டாள் என்று அழைக்க மாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்க மாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன்.

சிலரை எக்காலமும் ஏமாற்றலாம். பலரை ஒரு சில தருணங்களில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நண்பர் அறிந்து வைத்திருந்தால் நல்லது.

இன்று திறக்கப்படும் ஆய்வு மையம் எமக்குப் பல விதங்களிலும் நன்மை பயக்கப் போகின்றது. நான் கொழும்பில் என் வீட்டில் உள்ள ஒரு கிணற்று நீரின் தன்மையை அறிய CISIR என்ற நிறுவனத்தை நாடிப் போன போது ரூபா 5000/= கட்ட வேண்டும் என்றார்கள்.

பின்னர் இவ்வாறான ஒரு அரசாங்க ஆய்வு மையத்தை நாடிய போது வெறும் ரூபா 287/= ஐ மட்டுமே அறவிட்டார்கள். இது பல வருடங்களுக்கு முன் நடந்தது. குறைந்த விலையில் உங்களுக்கு சிறந்த ஒரு சேவையாற்ற இந்த மையம் தாபிக்கப்பட்டுள்ளது.

இன்று எமது நீர் மாசடைந்து வருவது கண்கூடு. அதற்கான காரணங்களை அறிந்தால் தான் மாற்று நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு வசதியளிப்பதற்காகவே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. திறம்பட இந்த மையம் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டு என்னை அழைத்ததற்கு நன்றி கூறி அமர்கின்றேன்

வணக்கம் 
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் 
முதலமைச்சர் 
வடமாகாணம்

No comments

Powered by Blogger.