Header Ads



முஸம்மில் அவர்களே அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்...!

(SAFRAN BIN SALEEM)

இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் பல விஸ்வரூபங்களை எடுத்து பல அழிவுகளையும் கசப்புணர்வுகளையும் தந்து வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்களது இலக்குகள் பள்ளிவாசல்கள், மத சின்னங்கள், ஹிஜாப், ஹலால், முஸ்லிம்களின் வர்த்தகம், உடமைகள்,  உரிமைகள், உயிர்கள் என பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றன. அவர்கள் இனவாத செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் கடந்த சில தினங்களாக இனவாதிகளின் நடவடிக்கைகள் ஓரளவு தணிந்து   காணப்படுவது போல் தோன்றுகிறது. என்றாலும் நாம் முன்னையத்தை விட இப்போது விழிப்பாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வின் கிருபையால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, சூரா கவுன்சில் உட்பட மற்றும் சில சமூக, தஃவா அமைப்புக்கள்  இலங்கை  முஸ்லிம்  சமுகத்துக்கு அளப்பரிய சேவையை பல வகையிலும் செய்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் ஆகும். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மேலும் மேலும்  அருள்பாளிக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக இனவாதிகள் ஒரு பக்கம்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் எம்மில் சில அமைப்புக்களும், தனி நபர்களும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்காக பாடுபடும் அமைப்புக்களுக்கும்  எதிரான நச்சுக்கருத்துக்கருத்துக்களை பரப்பி வருகின்றமை கவலையான விடயமாகும். இவர்களைப்போல் இன்னும் சில சமூகத்தை காட்டிக் கொடுக்கும் நயவஞ்கர்களும் நம்மில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை ஆகும். இனவாதிகளுக்கு தீனிபோடும் இக் களைகளை இனங்கண்டு பிடுங்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும்.

ஒரே இரவில் பல நூறுகோடி முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போதும், தீ மூட்டப்பட்ட போதும், எமது பெண்கள் குழந்தைகள் வாயதிபர்கள் என பாறாது இரவோடு இரவாக வீடுகளில் இருந்து விரட்டப்பட்ட போதும், முஸ்லிம் சகோதரர்களை முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் கொல்லப்பட்ட போதும், தாக்கப்பட்டு, சுடப்பட்ட போதும், குரல் எழுப்பாத ......  பல பள்ளிவாசல்கள் இனவாதிகள் தாக்கப்பட்ட போது குரல் எழுப்பாத தன்னை ஒரு முஸ்லிம் என அறிமுகப்படுத்திக் கொள்ளும், அரசில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் என தன்னை அறிமுகபடுத்தி கொள்ளும் முஸ்ஸம்மில், முஸ்லிம் பெண்களின் ஆடையான ஹபாயா குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து, எம் சமூகத்தை இனவதிகளுக்கு விற்று பிழைப்பு நடத்துகிறாரா? என எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துகளை பார்க்கும் போது அவர் ஒரு முஸ்லிமா? என சிந்திக்க வைக்கின்றது. கடந்த காலங்களிலும் இவர் இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை சில வெளியிட்டு வந்தார்.  அவர் கடந்த காலத்தில் வெளியிட்ட சில  கருத்துக்கள் வருமாறு

1.   ஹலால் என்பது ஒரு முட்டாள் தனமான ஹராம்.
2.   புர்கா அடிப்படை வாத்தைத் தோற்று விக்கிறது. பெண்களின் ஆடை முறைக்கு உதாரணமாக ஷேக் ஹஸீனாவையும், பெனாஸிர் பூட்டோவையும் சொன்னார்.

(எமது பெண்களுக்கு முன்மாதிரி உம்மஹாதுல் முஹ்மினீன்களும், ஸஹாபா பெண்மணிகளுமே என்பதை இவர் அறிய வில்லையா?)

இவ்வாறு கருத்து வெளியிட்டு வந்த முஸ்ஸம்மில் இப்போது இனவாதிகள் கூட சிந்திக்காத ஒரு கருத்தை பரப்பிவருகிறார். இதன்மூலம் இனவாதிகளுக்கு மேலும் தீனி போடா முனைகிறார். இனவாதிகள் கூட நிகாபுக்கு எதிராகத் தான் கோஷம் எழுப்பி வந்தனர். ஆனால் இந்த முனாபிக் முஸ்ஸம்மில் ஹபாயா இலங்கை முஸ்லிம் பெண்மணிகளுக்கு தேவையற்ற ஒரு ஆடை., அது அரேபியா கலாச்சர ஆடை, இது மத்தியகால கலாச்சராத்திற்குறிய ஆடை, மேற்குலக ஆதரவு சக்திகளால் சில குழுக்கள் மூலம் திணிக்கப்படும் ஒரு ஆடை , இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை மாத்திரம் அணிவதே இலங்கைக்கு பொருத்தமானது, சேலை நுனியால் தலையை மூடுவது போதுமானது, என பல கருத்துக்களை சொல்கிறார். பத்வாவும் கொடுக்கிறார்.

எமது சமூகத்தை விற்றுப்பிழைக்கும், சமூகத்தை காட்டிக்கொடுக்கும் முஸம்மில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தெரியாது வெறுமனே வாயில் வந்ததை உளறுகிறார். இலங்கைக்கு ஆரம்பத்தில் இஸ்லாம் அரேபியர் வழியாக வந்ததை இலங்கையின் புராதன வரலாறுகள் கூறுகின்றது. மானவரம்மன் என்ற மன்னர் காலத்தில் அரேபியாவிலிருந்து இலங்கைக்கு இஸ்லாம் வந்ததாக இலங்கையின் வரலாறு கூறும் போது, தனது அரசியல் இருப்புக்காக வரலாற்றை மாற்றி பேசுகிறான். இலங்கைக்கு இஸ்லாம் இந்தியா மூலம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என முஸம்மில் கூறுகிறார். பிற்காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் விளைவாக இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஆலிம்கள் இஸ்லாமிய போதனைகளை வழங்கினர் என்பதே உண்மை.

இனவாதிகளுக்கு தீனிபோட்டு தன் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முனையும் முஸ்ஸம்மில் இஸ்லாம் என்பது பூரா உலகிற்கும் பொதுவான, எக்காலத்துக்கும் பொருத்தமான எல்லா சந்தர்பங்களுக்கும் தகுதியான வழிகாட்டல்களையே தருகிறது என்பதை அறியவில்லையா?. ஹபாயா, ஹிஜாப் போன்ற இஸ்லாமிய ஆடைகள் குறித்து அதன் முக்கியத்துவம் குறித்து பௌத்த மக்களே விளங்கியிருக்கும் போது முஸ்லிம் என்று தன்னை அறிமுகம் செய்யும் பெயரளவு முஸ்லிம்  முஸ்ஸம்மில் அதை விளங்காதது அவரது இஸ்லாமிய அறிவை எடுத்துக் காட்டுகின்றது.  ஹபாயா என்ற உடை இன்று முஸ்லிம்களின் கலாச்சார உடையாக காணப்படுகின்றது. இது இலங்கை மட்டுமல்ல பொதுவாக எல்லா நாடுகளிலும் முஸ்லிம் பெண்கள் இந்த ஆடையையே அணிகிறார்கள்.

ஆரம்ப நாட்களில் சேலை அணியும் வழமையும் காணப்பட்டது. அப்போது எமது பெண்கள் பர்தா என்ற ஒரு ஆடையை சேர்த்தே அணிந்து வந்தனர். அதுவும் இன்றைய ஹபாயாவை போன்ற ஒரு ஆடை, உச்சம் தலையிலிருந்து இடுப்பு வரை அது மறைக்கும். அதை போலவே இன்று ஹபாய அணிகிறார்கள்.

ஹபாயா அணிவதால் எம் சமூகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கி காட்டப்படுகின்றது என்று சொல்லும் முஸ்ஸம்மில் அவர்கள், அதற்கு முன் மேற்கு நாடுகளின் வழமையான நீலக்காற்சட்டை, ஷேர்ட் போன்றவற்றை நிறுத்தி இலங்கையின் தேசிய ஆடைகளை அணிய வேண்டும்.   

இவ்வாறு நச்சு  கருத்துக்களை பரப்பி முஸ்லிம்களை அளிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு வழிசமைத்து கொடுப்போர் நேரடியாக ஊடகங்கள் முன் வந்து உளறிக்கொட்டுவதன் மூலம்  இவர்களது கருத்துக்கள் இனவாதிகளின் இனவாத செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக காணப்படுகிறது. இவர்கள் இதன் மூலம் சமூகத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்பது தான் உண்மை.

முஸ்ஸம்மில் போன்றோர் எமது பெண்களுக்கு அறைகுறை ஆடை அணியச் சொன்னாலும் ஆச்சிரியப் பட முடியாது.

எமது அறியாமை, சுயலாபம், பொடுபோக்கு, சமுதாய அக்கறையின்மை, ஈமானிய பலவீனம் போன்றவையே எமது பொது எதிரியின் பக்கபலம்.  ஊர் பிளவு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதனை மனதில் நிறுத்த வேண்டும்.

முஸ்ஸம்மில் போன்றோருக்கு வாக்களிக்கும் மக்களே நீங்களும் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

திரு முஸ்ஸம்மில் அவர்களே அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். இந்த அற்ப சொற்ப உலக இலாபத்திற்காக இஸ்லாத்திற்கு எதிராக பேசி அல்லாஹ்வின் தண்டனக்கு ஆளாகாதீர்.

இவர்கள் போன்ற சமூகத்திலுள்ள களைகளை இனங் கண்டு பிடுங்க வேண்டியது சமூகத்தின் அவசரமானதும் அவசியாமானதுமான கடமையாகும்.   அறியாமையிலுள்ளவர்கள் கருத்துக்களை வெளியிடாது குறித்த விடயம் சம்பந்தமான அறிவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட குரோதங்களை மறந்து சமூகப் பற்றுடன் ஒன்று சேர வேண்டும்.          

1 comment:

  1. பல சகோதரர்கள் சொல்லத்துடிக்கும் வார்த்தைகளை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

    அலாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

    ReplyDelete

Powered by Blogger.