Header Ads



இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதை ISIS க்கு ஞாபகமூட்டும் அமெரிக்க பெண்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் பிடியில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் ஸ்காட்டிப் ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.

கடந்த சில தினங்களாக ஐ.எஸ். களின் இருப்பிடம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதல் தொடருமானால் பத்திரிக்கையாளரான ஸ்டீவன் ஸ்காட்டிப்பும் தலை துண்டித்து கொல்லப்படுவார் என எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஸ்டீவன் ஸ்காட்டிப்பின் தாயார் ஷிர்லி ஸ்காட்டிப், தனது மகனை விடுவிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார். 

அரபு தொலைக்காட்சியான அல்-அராபியா தொலைக்காட்சி இந்த வேண்டுகோள் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கொடுங்கோலர்களிடம் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவவே தனது மகன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்தான் என்றும், மரியாதைக்குரியவனான அவன் ஏழைகளுக்கு உதவுவதை குறிக்கோளாக கொண்டவன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் தனது மகனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அவர், "யாரோ ஒருவர் செய்த தவறுக்காக மற்றொருவருக்கு தீங்கிழைக்கக்கூடாது" என்று இஸ்லாம் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். எனவே கருணையுள்ளத்தோடு எனது மகனை விடுவிக்கவேண்டும் என்றும் அவனை ஒரு போதும் பழிவாங்கக்கூடாது என்றும் அத்தாய் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.