Header Ads



ஊவாவில் ஹக்கீமின் பிரசாரத் தொடக்கம், குற்ற உணர்வுக்குள் அவர் பேச்சின் அடக்கம் - பேச்சு – 02

(நவாஸ் சௌபி)

பேச்சு

மாகாணசபையின் ஆட்சி தற்பொழுது அரசாங்கத்திடம் உள்ளது. அதில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவரின் செல்வாக்குமிருக்கிறது. ஜனாதிபதி தனது சகோதரரின் மகனின் ஆட்சி ஊவாவில் முடிவுற்றிருக்கின்ற நிலையில், அந்த ஆட்சியை மீளக் கைப்பற்ற முடியாது போனால் அது பெரிய அவமானமாக ஆகிவிடும் என்பதால் அரசாங்கம் தோற்பதற்காக நடத்தும் தேர்தல் அல்ல இதுவென்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்தவர் முதலமைச்சராகப் போட்டியிட்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லையென்றால் அவர்களின் அரசியல் வாழ்வுக்கே சமாதி கட்ட வேண்டி வரும் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே முழுமையான அதிகாரத்தை பிரயோகித்து வெல்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மறுபேச்சு

இதன்படி சந்தேகமே இல்லாதபடி ஊவாவில் ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றி நிச்சயமானது என்பது மிகவும் அழுத்தமாகவே ஹக்கீமால் முன்வைக்கப்படுகிறது. அரசாங்த்தின் வெற்றியை உறுதியாக்கிக் கொண்டே அவர் முஸ்லிம்களின் வாக்குகளை தனியான எமது அணிக்கு அளியுங்கள் என்ற வேண்டுதலை விடுக்கின்றார்.  

ஊவாவில் வெற்றி பெறும் அரசாங்கத்திற்கு முஸ்லிம் வாக்குகள் எந்தவிதத்திலும் உதவாத நிலையில் அங்கு பெரும்பான்மையான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே அளிக்கப்படும் நிலை இருக்கிறது. இதனைத் தடுத்து தனியான முஸ்லிம் கூட்டு கட்சிக்கு அவ்வாக்குகள் அளிக்கப்பட்டால் அரசுக்கு தங்களது பலத்தை காட்ட முடியும் என்ற உள்நோக்கு இதில் ஹக்கீமிடம் இருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யாத முஸ்லிம்களின் வாக்குப் பலம் என்பது ஒரு செய்தியாக இருக்குமே தவிர மஹிந்தவின் ஆட்சியில் அரசியல் ரீதியான பாரிய நன்மைகள் எதனையும் முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தராது. மஹிந்தவின் ஆட்சிக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கடந்த கால அனுபவங்களும் இவ்வாறே இருந்துவருகிறது. 

எனவே மஹிந்தவின் வெற்றியைப் பயன்படுத்த முடியாதவர்களாகவே நாம் கடந்தகால  தேர்தல்களிலும் எமது வாக்குகளை அளித்து வருகின்றோம். அவ்வாறு வாக்களிப்பதே காலத்தின் தேவைiயாகவும் இருக்கிறது. ஆனால் அத்தகைய வாக்குகளை அரசுக்கு எதிரானது எனக் கருதி மக்கள் யாருக்கு அளிக்கின்றார்களோ அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அவ்வாக்குகளை அளிக்கும் மக்களின் நோக்கம் நிறைவேறாமலே போய்விடுகிறது. அத்துடன் இது, மக்களை அரசின் எதிரிகளாக ஆக்கி தலைவர்களை அரசுக்கு நண்பர்களாகக் காட்டும் ஒரு மாய வித்தையாகவும் இருந்துவருகிறது. 

பேச்சு

அரசாங்க அமைச்சராக இருக்கும் நான் இங்கு ஊவாவுக்கு வந்து கஷ்ட்டப்பட்டுக் கொண்டு தேர்தலில் இறங்கி இருக்க வேண்டிய தனிப்பட்ட எந்த தேவையுமில்லை. இவ்வாறு தடுமாறிக் கொண்டிராது அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி கவனம் செலுத்தலாம் என சும்மாயிருந்திருக்கலாம். வேண்டுமானால், இத் தேர்தலில் எங்களது சார்பில் வேட்பாளர்களை களமிறக்கிவிட்டு அவர்கள் அடையக் கூடியதை அடைந்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம். ஆனால், அது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைமைக்குரிய பண்பு அல்ல.

மறுபேச்சு

பொறுப்பு வாய்ந்த ஒரு தலைவராக அதற்குரிய பண்புடன் இருக்க தன்னை நிலைப்படுத்தும் ஹக்கீமின் பிரயத்தனம் ஊவாத் தேர்தலில் முதன்மைப்படுத்தப்படுவது வரவேற்க கூடியதே. ஆனாலும் இதுபோன்று தான் ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவருக்குரிய பண்புகளுடன் செயற்பட வேண்டியப பல சந்தர்ப்பங்களை அவர் தவறவிட்டிருக்கிறார் என்ற விமர்சனங்களையும் இதில் அவர் மறந்துவிடக் கூடாது.

ஊவாத் தேர்தலுக்கு தன்னை ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவராக உணர்ந்துகொள்ளும் ஹக்கீம் இதுபோன்ற கடந்த பல சம்பவங்களிலும் தனது தலைமைத்துவத்திற்குள்ள பொறுப்பினை உணர்ந்திருந்தால் வரலாற்றுத் தவறான முடிவுகள் என்று கட்சிக்குள்ளேயே விமர்சிக்கப்படும் சில முடிவுகளை அவர் எடுக்காமலே இருந்திருக்கலாம். 

இதுஇவ்வாறிருக்க தற்போது வேண்டா வெறுப்புடனும், தடுமாற்றத்துடனும் ஊவாத் தேர்தலுக்குள் தனது தலைமைத்துவத்தின் பொறுப்பினை ஹக்கீம் அங்கலாய்ப்புடன் உணர்த்துவதை வெறும் தேர்தல் பிரச்சாரமாகவே பார்க்க முடியும். பொதுவாக தேர்தல் மேடைகளில் பொறுப்புள்ள தலைவராக இருப்பதைவிடவும் ஆட்சியை தீர்மானிக்கின்ற இடத்தில் பொறுப்புள்ள ஒரு தலைவராக இருப்பதே சமூக வெளிப்பாடாக கருதப்படும். இதனையும் ஹக்கீம் தனது பொறுப்புள்ள தலைமைக்குள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பேச்சு

குறிப்பாக இங்கு யுத்தத்தின் பினன்ரான ஜனநாயகம் என்பது வேறுபட்டது. எந்தப் பருப்பு எங்கு வேக வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பருப்பு எல்லா இடங்களிலும் வேகுமென எதிர்பார்க்காதீர்கள். சர்வதேச அரசியல் நாம் நினைப்பது போல அல்ல. அது அநியாயம் நடக்கும் பொழுது நியாயம் கேட்கும் நிலையில் இல்லை. அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வதுதான் சர்வதேசத்தில் நடக்கிறது. என்ன நடந்தாலும் ஐ.நா சபையும் பாதுகாப்பு சபையும் தலைகீழாக மாறிவிட வல்லவை. தீயணைக்கும் படையினர் போன்று சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் நெருப்பை அணைக்க வருவார்கள். எனவே, நாங்கள்தான் எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணவேண்டும்.

மறுபேச்சு

இப்பேச்சினை முதலில் ஹக்கீம் தனக்குள்ளேயே பேசி விடை காண வேண்டும். ஏனென்றால் நவநீதம் பிள்ளையிடம் 50 பக்க அறிக்கை, வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு, சர்வதே ஊடகங்களில் பேட்டி என்று இறுதியில் புனிதமான உம்றா பயணத்தையும் அரசியலாக்கி முகநூல்கள் உட்பட பத்திரிகைகளில் தலைப்புச் செய்திவரை கொட்டமடைத்து வெளிநாட்டு பிரமுவர்களின் சந்திப்பாக கடைந்ததெல்லாம் வெறும் வேகாத பருப்பைத்தானா?

எந்தப் பருப்பு எங்கு வேகும் என்று தெரியாமல்தான் ஹக்கீம் இத்தனை சர்வதேச செயற்பாடுகளையும் செய்தாரா? அல்லது தான் பொறுப்புள்ள ஒரு தலைவராக செயற்படுகிறேன் என்பதை சமூகத்திற்கு தெரிவிக்க இத்தனையும் செய்தாரா? அளுத்கம சம்பவம் நடைபெற்ற பிறகு முற்றாக சர்வதேசத்தையே காட்டி அரசை அச்சப்படுத்திக்கொண்டிருந்த ஹக்கீமின் பருப்பு எதுவும் வேகவில்லை என்று தெரிந்தா? இன்று சர்வதேசத்தை நம்ப முடியாது, அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் நீதி கிடைக்காது என்று கதையை தலைகீழாகத் திருப்பி போடுகிறார். 

நமது பிரச்சினையை நாங்கள்தான் தீர்க்க வேண்டும் என்ற நிலைதான் இலங்கை முஸ்லிம்களுக்கு உகந்தது என்று ஊவாத் தேர்தல் பிரச்சார மேடைவரை தெரியாத ஒரு தலைவராகத்தான் ஹக்கீம் இருந்திருக்கிறாரா? இதனை ஆரம்பத்திலேயே விளங்கி இருந்தால் அரசுக்குள் இருந்துகொண்டு சர்வதேசத்திற்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்ற பேரினவாத அரசியல்வாதிகளின் பழிச் சொல்லுக்கேனும் ஆளாகாமல் அரசின் விசுவாசத்தையேனும் தங்க வைத்திருக்கலாம். இறுதியில் அந்தப் பருப்பும் வேகாமலே போய்விட்டது. 

இவ்வாறு சர்வதேசத்தை நம்பமுடியாது என்று ஆணித்தரமாக அடித்துப் பேசியவர் அதே மேடையில் இன்னுமொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார். 

'ஜூம்ஆ மிம்பர்களில் எங்களது உலமாக்கள் வலியுறுத்தும் ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் என்ற முக்கியமான அம்சம் எங்களிடம் இல்லாதது பெரும் குறைபாடாகும். அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிகளுக்கோ மட்டுமல்லாது சர்வதேசத்திற்கும் எமது பலத்தை எடுத்துக் காட்டுவதற்கு இது மிகவும் நல்ல சந்தர்ப்பமாகும்.'

இதன்மூலம் தனது பேச்சுக்குத் தானே முரண்பட்ட ஒரு பேச்சை ஹக்கீம் பேசி இருக்கிறார். சர்வதேசத்தை நம்ப முடியாது என்ற பிறகு நமது பலத்தை சர்வதேசத்திற்கு காட்டி என்ன பயன்? தீயணைக்கும் படையினர் போன்று எல்லாம் எரிந்த பிறகு வரும் அவர்களின் உதவி நமக்கு எதற்கு? இதில் சர்வதேசத்தை நம்புவதா? இல்லையா? என்பதில் தலைவரே  தெளிவில்லாமல் குழம்புவதும் புரிகிறது. 

அடுத்து, தேர்தல் வந்தால் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்பதும் எமது பலத்தைக் காட்ட வாக்களியுங்கள் என்பதும் வழக்கமான பல்லவியாக இருந்தும் எமது மக்கள் வழமை போல் ஒற்றுமைக்காகவும் எமது பலத்தைக் காட்டவும்; வாக்களித்து தங்கள் அரசியல் உரிமையை வெளிப்படுத்தும் நிலையில், எமது தலைவர்களின் ஒற்றுமைக் கயிறும் அவர்களின் அரசியல் பலமும் எந்தளவில் இருக்கிறது என்ற கேள்விக்கும் இங்கு மனச்சாட்சியுள்ள விடை தேவைப்படுகிறது அல்லவா. 

இறுதியில், எதை எழுதினாலும் என்னதான் சொன்னாலும் எமது மக்களும் 
'யாரைத் தக்பீர் அல்லாஹ் அக்பர். '

(முற்றும்)

2 comments:

  1. நல்ல தொரு ஆரோக்கியமான விமர்சனம்.
    Good job keep it up.

    ReplyDelete
  2. Iwwaru aalukkaal pesi pesi katturai eluthi muslim kalai kulappi waakkukalai sinna pinnamaakki muslimkalukku onrum illaamal saiwathuthaan iwarkalin welai .palaya kuttrankalai pesum nilamayil ippothu naadu illai enpathai owworuwarum unara wendum.

    ReplyDelete

Powered by Blogger.