Header Ads



''முஸ்லிம் தலைமைக்கு பதிலடி கொடுத்தே தீருவார்கள்'' சம்பந்தன்

நாங்கள் இறைமையுள்ள மக்களின் உரிமைகளைத்தான் கேட்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34 வது மாநாட்டின், இரண்டாவது நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சம்பந்தன்,


தமிழர்கள் இந்த மண்ணிலே சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள். அவர்களும் இந்த நாட்டின் இறைமை இருக்கின்றது. எனவே. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

தமிழ் மக்கள் தமது ஜனநாயக தீர்ப்பை எமக்கு விரும்பி அளித்துள்ளனர். எனவே, தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்க மாட்டோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் வந்த போதெல்லாம் அவற்றை நாம் பேசித் தீர்த்து ஒற்றுமையாக செயற்படுகின்றோம். 

எமது இந்த ஒற்றுமையைச் சிதறடிக்க வெளியிலிருந்து சிலர் முயற்சி செய்கின்றனர். எனினும், கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைக்க முடியாது. 

எம்மைப் பலவீனப்படுத்தலாம் என்று எவரும் நினைக்கவேண்டாம். 

நாம் ஒற்றுமைப் பாதையில் பயணித்து தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெறுவோம். 

நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். 

இதனால்தான் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எம்முடன் கேட்டறிகின்றனர்; எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். 

அதேவேளை, இந்த நாடுகள் எம்முடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை எமது பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறோம். 

எங்கள் மக்களின் இறைமை மதிக்கப்பட வேண்டும். 

அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரங்களை மதிக்கக் கூடிய விதத்தில் அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும். 

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்குள்ள உரிமைகளை தமிழ் பேசும் மக்களுக்கும் வழங்குமாறு இந்த அரசிடம் கேட்கின்றோம். 

அதிகாரத்தைப் பகிரும்படி தான் கேட்கின்றோம். 

நாங்கள் தனிநாடு கோரவில்லை. வன்முறையை விரும்பவில்லை. 

சிங்களவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் எமது நண்பர்கள். 

நாங்கள் இறைமையுள்ள மக்களின் உரிமைகளைத்தான் கேட்கிறோம். இது சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல .

ஆனால், எமது கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகின்றது. 

இதனால்தான் அனைத்துலகத் தலையீடு வந்தது. இலங்கை விடயத்தில் அனைத்துலக நாடுகளின் தலையீடுகளுக்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. 

இந்த அரசு சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அல்லது எமது கோரிக்கைகளை ஏற்று தமிழ் பேசும் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கியிருந்தால் அனைத்துலகத் தலையீடு வந்திருக்கமாட்டாது. 

தமிழ் பேசும் மக்களுக்கு மாகாணசபை பெரும் சொத்து. ஆனால், ஆளும்தரப்பில் உள்ளவர்கள் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். 

இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து முஸ்லிம் தலைமை ஆட்சி நடத்துகிறது. 

முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது; மக்களை நடுத்தெருவில் நிற்கவிட்டு விட்டு அரசுடன் சேர்ந்து சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இது வெட்கக்கேடானது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம்கள் சேர்ந்து ஆட்சியமைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமை புறந்தள்ளியது. 

எனவே, தமது தலைமைக்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்தே தீருவார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைக்காக முஸ்லிம் மக்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை. 

இதேவேளை, இந்தியாவின் புதிய அரசு மௌனமாக இருக்கிறது என்பதற்காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்கறையில்லையென்று கருதக்கூடாது. 

உரிய நிலை வருகின்ற போது எல்லாமே நல்ல மாதிரி நடைபெறும். 

இந்தியா இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல. ஒரு பிராந்திய வல்லரசாகவும் திகழ்கிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை அயல்நாடுகள் எல்லாவற்றுடனும் சிநேகித நிலையைப் பேணவும் வளர்க்கவுமே விரும்பும். அந்தக் கொள்கை நியாயமானது. 

அவ்விதமான நிலைப்பாட்டையே இலங்கையுடனும் தொடர முற்படுகிறது. 

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினையொன்று இருக்கிறது. 

அது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்காகவே இந்தியா நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கிறது. 

இந்தியாவின் இந்த முயற்சி 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 13வது அரசியலமைப்புத் திருத்தம் ஆகியன அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விடயங்களாகும். 

கடந்த காலங்களில் இந்தியாவுக்கு பல்வேறு வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அளித்துள்ளது. ஆனால், அவற்றை ராஜபக்‌ச நிறைவேற்றவில்லை. 

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வு முடிந்த மறுநாள், சிறிலங்கா அதிபர் அவரைச் சந்தித்து உரையாடிய வேளையில் இந்தியாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் பற்றி இந்தியப் பிரதமர் வினவியுள்ளார். 

இந்திய மத்தியரசின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லி சென்று வருவதற்கு முன்பு மக்களுக்கு எதையும் சொல்ல முடியாது. 

அது விடயமாக பேசுவது ஏற்றதல்ல. அப்படி பேசுவது பாதகமாக அமையலாம். 

ஆனால், நடைபெற வேண்டிய கருமங்கள் நன்றாகவே நடைபெறுமென மக்களுக்கு கூற விரும்புகின்றோம். 

அனைத்துலக நடுநிலையுடன் எமக்கான நிரந்தர தீர்வு விரைவில் கிடைக்கும். நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

2 comments:

  1. தமிழ் கூட்டமைப்பில் சற்று தலம்பல் ஏற்பட்டு விட்டது

    ஜயா சம்மந்தன் உங்கள் அரசியல் ஆளுமைக்கு முஸ்லிம் மக்களின் பலம் மிக விரைவில் சன்மானம் அளிககுமேன நான் நினைக்கிறோன் இருந்தும் உங்கள் அமைப்பிலுள்ள அங்கத்தவா்கள் எவ்வாறு முஸ்லிம் மக்கள் உரிமை பற்றி சிறாக தொடா்ந்து சிந்திப்பார்களா அல்லது முஸ்லிம் கட்சியலின் கோழை முடிவினால் இன்று தடம்பிரல்வதுபோன்று இருப்பார்களா.,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  2. Yarayya muslim thalaivar muslim Congress allazu rizvi mufthi allazu sltj leader allazu jamath islami leader allazu media forum n.m. ameen allazu rishad bla bla bla konjam thlaivarai katti thandhal nalla irukum thooo theri

    ReplyDelete

Powered by Blogger.