Header Ads



சிரியாவில் ஜனாதிபதி தேர்தல்

உள்நாட்டு கலவரத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டில், அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சியினர், கடந்த நான்கு ஆண்டுகளாக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களை சிரியா ராணுவம் ஒடுக்கி வருகிறது.

அமெரிக்கா வற்புறுத்தியும், அதிபர் ஆசாத் பதவி விலகாததால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி அளித்து வருகின்றன. இதனால், அங்கு உள்நாட்டு சண்டை தொடர்கிறது. இதுவரை, 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்; 8 லட்சம் பேர், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாக, சிரியா அரசு மீது கடந்த ஆண்டு புகார் எழுந்ததால், அந்நாட்டின் மீது, 'நேட்டோ' எனப்படும், அமெரிக்க ஆதரவு நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. 

ஆனால், ரஷ்யா அதிபர் புடின், சிரியா அதிபர் ஆசாத்தின் நண்பர் என்பதால், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து, ரசாயன ஆயுதங்களை அழிக்க உடன்பாட்டை ஏற்படுத்தினார்; இதனால், சிரியா மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 3ல், சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம் 22 முதல் துவங்குவதாகவும், சிரியா பார்லிமென்ட் சபாநாயகர், முகமது லகாம் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகியுள்ளார் அதிபர் ஆசாத்.

No comments

Powered by Blogger.