Header Ads



சமூகத்தை காட்டிக் கொடுக்கும்...!

(நிந்தவூரான்) 

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை இடம்மாற்றும் நடவடிக்கையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இடமாற்றும் தீர்மானத்தை ரத்துச் செய்யும் கடிதம் கொழும்பிலிருந்து கிடைக்காத நிலையில் உதவிப் பணிப்பாளர் உடனடியாக அம்பாறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் நிந்தவூரில் கடந்த 16 வருடங்களாக இயங்கி வருகின்ற தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட நிர்வாக அலுவலகத்தை பெரும்பான்மையினர் வாழும் அம்பாறை நகருக்கு உடனடியாக மாற்றுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகார சபை தலைவர் கடிதமொன்றை அனுப்பிருந்தார். இருப்பினும் மறைந்த தலைவர் அஷ்ரஃபின் கனவாகவும் மு.கா.வின். சொத்தாகவும் இருக்கின்ற இந்த காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றிவிட சுயலாபம் தேடும் சக்திகள் மேற்கொண்ட முயற்சியை, பிரதேச நலன்விரும்பிகளும் கல்விச் சமூகமும் கடுமையாக எதிர்த்தனர். 

இவ்விடயம் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி எம்.பி. மற்றும் மைசால் காசீம் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மூவரும் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை கொழும்பில் சந்தித்து உரையாடினர். இவ் அலுவலகம் நிந்தவூல் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துக் கூறினர். இதனையடுத்து, நிந்தவூர் அலுவலகம் எக்காரணம் கொண்டும் அம்பாறைக்கு கொண்டு செல்லப்படாது என்று அமைச்சர் டளஸ் உறுதியளித்ததாகவும் அது குறித்து உடனடியாக தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்ததாகவும் எம்.ரி. ஹசனலி எம்.பி. தெரிவித்திருந்தார். 

இருப்பினும் இது தொடர்பான கடிதம் அதிகார சபையின் தலைமையகத்தால் இன்னும் மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனைக் காரணம் காட்டி, பழைய கடிதத்தின் படி அம்பாறைக்கு ஊழியர்களையும் அலுலகத்தையும் கொண்டு செல்வதற்கு உதவிப் பணிப்பாளர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனது பதவியைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு சமூகப் பொறுப்பின்றி இவர் செயற்பட்டு வருவதாக நலன்விரும்பிகள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர். 

இச்சிக்கல் நிலை குறித்து மேற்படி மு.கா. குழுவினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், உடனடியாக இவ்விடயத்திற்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் வாரத்தில் இவ் அலுவலகம் அம்பாறைக்கு தாரை வார்க்கப்பட்டு விடும் என்று நிந்தவூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே இது விடயத்தில் விரைவாக செயற்படுமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். 

2 comments:

Powered by Blogger.