Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்குகின்றன

விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.

சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி, இக்கொலைக்கு முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என்று இந்துவெறியைக் கிளறிவிட்டுப் பெருங்கூச்சல் போடுகின்றன இந்துத்துவ பரிவாரங்கள். ரமேஷ் கொலை மட்டுமின்றி, கடந்த ஈராண்டுகளாகத் தங்களது தலைவர்களையும் பிரமுகர்களையும் இசுலாமிய கூலிப்படையினர் குறிவைத்துக் கொன்று வருவதாகப் பட்டியலிடும் இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசித்து, மரண பீதியில் இந்து தலைவர்கள் தவிப்பதாக கிசுகிசு பத்திரிகைகள் பீதியூட்டுகின்றன.

வீட்டுமனை, கந்துவட்டி, சினிமா, சாராயம், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களை நாடெங்கும் அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் நடத்தி வருகின்றனர். இவை தவிர கிரானைட், மணற்கொள்ளை போன்ற பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதிலிருந்து, தனிநபர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பது வரை புதிய பொருளாதாரக் கொள்கையால் கொழுத்துவரும் தரகு முதலாளிகள் – நிலப்பிரபுகளின் கூட்டாளிகளாக இருந்து பொறுக்கித் தின்னும் கும்பல்களாக ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் தலைவர்களும் சீரழிந்துள்ளனர். இந்துத்துவ பரிவாரங்கள் ஆளும் குஜராத்திலே 49 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்களாக அம்பலப்பட்டுள்ளனர். நாடெங்கும் மாஃபியாக்களும் கூலிப் படைகளும் வளர்ந்துள்ளதோடு, பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இத்தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு இரகசிய உலகமும் ஓட்டுக்கட்சி அரசியலும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு ஓட்டுக்கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சில கொலைகளைத் தவிர பிற அனைத்துக்கும் அரசியல் காரணங்களோ, மதரீதியான காரணங்களோ இல்லை என்பதும் போலீசு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறிவிட்டு, இக்கொலைகளை வைத்து இந்துவெறி பரிவாரங்கள் ஆதாயமடையத் துடிக்கின்றன. இதன்படியே, ரமேஷ் கொலையையொட்டி நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டத்தின் போது பேருந்துகள் மீதான தாக்குதலும், வேலூரில் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் சுவரொட்டிப் பிரச்சாரமும்,கோவை துடியலூரில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலும் இந்துவெறியர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன.

பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் – பெண் விவகாரம். நாகப்பட்டினம் புகழேந்தி கட்டப்பஞ்சாயத்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த ஒரு ரவுடி. பரமக்குடி பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காகடை முருகன் ஆகியோரின் கொலைகளுக்குக் காரணம் நிலத்தகராறு. சென்னை கோயம்பேட்டில் கந்து வட்டித் தொழில் நடத்தி வந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டிலுள்ள பெண்களை ஆபாசமாகத் திட்டியதாலேயே கடந்த ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்டார். இக்கொலைகளையொட்டி, கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள்தான். ஆடிட்டர் ரமேஷ் யாரால், எதற்காகக் கொல்லப்பட்டார் என்பதற்கான தடயமும், அவரது தீவிர ஆதரவாளராகச் சித்தரிக்கப்படும் பா.ஜ.க. மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ராஜராஜேஸ்வரி மறுநாள் தீக்குளித்து மாண்டதற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஒருபுறம் கூறும் போலீசு, மறுபுறம் அத்வானி மதுரைக்கு வந்த போது பைப் வெடிகுண்டு வைக்க முயன்றதாகச் சொல்லப்படும் தலைமறைவு முஸ்லிம் குற்றவாளிகளைத் தேடுவதாகவும், அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு முக்கியத்துவமளிக்கிறார். விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே மொத்த சந்தேகத்தையும் முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டு, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.

தமிழகத் தேர்தல் அரசியல் கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் உள்ள இந்துவெறி பா.ஜ.க., மக்களிடையே இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு தமிழகத்தில் காலூன்றும் நோக்கத்துடனேயே இத்தகைய கொலைகளைக் காட்டி, கொல்லப்பட்டவர்களை இந்துக்களின் தலைவர்களாகவும் தேசத்துக்காக உழைத்த மாபெரும் தியாகிகளாகவும் சித்தரித்து, மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பான அடையாளமாகவும், தங்களை இந்துக்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக் கொள்கிறது. இந்துவெறி கும்பலின் இச்சதியை அம்பலப்படுத்த முன்வராமல், தமிழகத்தில் கொலைகள் பெருகி வருவதாக ஓட்டுக்கட்சிகள் அறிக்கை வாசிக்கின்றன. இந்துவெறி பாசிசப் பரிவாரங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வன்னிய சாதிவெறிக் கட்சியான பா.ம.க. ஆதரவு தெரிவித்து, சாதி-மதவெறி அணிதிரட்டலை முன்தள்ளுகிறது. பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றத் துடிக்கும் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளின், சாதிவெறியர்களின் சூழ்ச்சிகள் - சதிகளை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதே இன்றைய அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

- மனோகரன்

No comments

Powered by Blogger.