Header Ads



தேசிய ஷூரா சபை - இலங்கை முஸ்லிம்களின் தேசிய வாழ்வில் ஒரு திருப்புமுனை


(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

"இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்"  (ஸூரத் ஷூரா : 38)

அல் -ஹம்துலில்லாஹ் கடந்த பல மதங்கள் கடின உழைப்பு, கலந்துரையாடல்கள், ஆய்வுப் பணிகளுக்குப் பின்னர் சகல் தரப்புக்களையும் உள்வாங்குகின்ற தேசிய முஸ்லிம் ஷூரா அமைப்பிற்கான கட்டமைப்பு வடிவம் மற்றும் அதற்கான் அடிப்படை கோட்பாடுகள் மிகவும் தெளிவாக ஆராயப்பட்டு மென்பொருளாகவும் ஆவணமாகவும் கொடு வரப்பட்டுள்ளது.

 இந்த பணியில் பல்வேறு குழுக்களாக ஈடு பட்ட பல்வேறு தரப்பினர்களும் இறுதியில் ஒரே அணியாக ஒன்று சேர்ந்து தேசிய முஸ்லிம் ஷூரா கவுன்சிலுக்கான இறுதி வரைவை வெளிக் கொணரும் இடைக்கால குழுவினராக செயற்படுகின்றனர். இந்த இடைக்கால குழுவின் எந்த ஒரு உறுப்பினரும் தாம் தேசிய ஷூராவில் இடம் பெற வேண்டும் அல்லது ஏதாவது ஒரு இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான சுயநல எண்ணமும் இல்லாது சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிக்காக தம்மை ஈடு படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

 தேசிய ஷூரா சபை என்பது புதிய ஒரு உலமா சபையோ, இஸ்லாமிய இயக்கமோ, தாவா  அமைப்போ, அரசியல் கட்சியோ  அல்லது தொண்டர் நிறுவனமோ அல்ல, மாறாக சகல அமைப்புக்களையும் அவர்களது பணிகளையும் மதிக்கின்ற பொதுவான சமூக விவகாரங்களில் அவர்களையும் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் ,வர்த்தக சமூகத்தினர், இளைஞர் மாதர் அமைப்புக்கள் சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் என சகல தரப்பினரையும்  ஒருங்கிணைக்கின்ற ஒரு ஒருங்கிணைப்பு பொறி முறையாகும். 

தேசிய ஷூரா சபை எந்தவொரு உள்நாட்டு  அல்லது வெளிநாட்டு நிறுவனத்தின் ஜமாத்தின் அமைப்பின்  கீழ் வருகின்ற அல்லது மேல் வருகின்ற ஆலோசனை சபையோ அல்ல, அது எந்த தேசிய அல்லது பிராந்திய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் கடப்பாடு உடையதுமல்ல. அது சுயாதீனமான, அதிகார பூர்வமான , முஸ்லிம் சமூகத்திற்கு பொறுப்புக் கூறக் கூடிய, தெளிவான நிகழ்ச்சி நிரல்களுடன் தொழிற்படும் ஒரு தேசிய முஸ்லிம் ஒருங்கிணைப்பு பொறி முறையாகும். 

இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் இறுதிப் பகுதியில் தயார் செய்யப் பட்டுள்ள நகல் யோசனைகளை கொழும்பில் கூடுகின்ற பலதரப்பு பிரதிநிதிகள் கல்விமான்கள் உலமாக்கள் வர்த்தக சமூகத்தினர் துறை சார் நிபுனர்களினைக் கொண்ட கூட்டத்தில் அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்படவுள்ளது.

தலைமைத்துவ வெற்றிடமும் தேசிய ஷூரா ஒன்றிற்கான அவசியமும் அவசரமும்....

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் பின் புலன்கள், மொத்த தேசத்தினதும் சமாதான சகவழ்வு, பொருளாதார சுபீட்சம் உற்பட பல்வேறு பரிமாணங்களில் அவை கொண்டுள்ள தாக்கங்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டு சகல தரப்புக்களையும் உள்வாங்கிய தேசிய ஷூரா சபையொன்று அவசரமாகவும் அவசியமாகவும் நிறுவப் படல்  வேண்டும் என்பதனை எமது சமூகம் நன்கு உணர்ந்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ், இலங்கை வாழ்  முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தம் சார்ந்த ஜமாத்துகள், தரீக்காக்கள், சேம நல அமைப்புக்கள் என பல்வேறு முகாம்களுக்குள் உயரிய இலக்குகளோடு செயற்பட்டாலும் கூட அண்மைக்காலமாக கூட்டுப் பொறுப்புணர்வுடன் மிகவும் நிதானமாகவும் சமயோசிதமாகவும் கட்டுக் கோப்புடன் எமக்கு எதிரான பொதுவான சவால்களுக்கு முகம் கொடுத்து வருவது மிகவும் ஆறுதல் தரும் விடயமாகும்.

எமது சமூகத்தின் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் தத்தமது வரை முறைகளுக்கு உற்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளை விமர்சனங்களுக்கு அப்பாலும் பாராட்டாமல் இருக்க முடியாது. வேற்றுமைகளுக்கு மத்தியில் இணக்கம் காண முடியாத, கருத்து வேறுபாடுகளால் தமக்குள் அந்நியப்பட்டு பல தரப்புக் களாய் தொழிற்படுகின்ற, பல அரசியல் கூறுகளாய் பிரிந்து நிற்கின்ற தத் தமக்கே உரிய நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ள ஒரு சமூகம் எப்பொழுதும் பரிபூரணமான, விமர்சனனகளுக்கு அப்பால் பட்ட, குறை நிறைகளைக் கொண்டிராத தேசிய தலைமைகளைக் கொண்டிருக்க முடியாது என்பதே உண்மையாகும்.

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை அல்லது சகோதர சமூகங்களை மாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு  முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப்   பின்னால் சர்வதேச முஸ்லிம்  உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர  முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர  மூலோபாயத் திட்டமிடல்களும் உளவுச் சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.

 இவ்வாறான பல்வேறு பல்வேறு பரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் எமது குறுகிய  சமூகத்தை மாத்திரம் மைய்யப்படுத்திய அரசியல், தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை ,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல் சக்திகளோடும் புரிந்துணர்வோடு சமயோசிதமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து செயற்பட  வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

 பொதுவாக ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ, பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் தமக்குள்ளே முரண் பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால் பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன் பெரும் நம்பிக்கையீனத்துடன் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே.

இன்றைய நிலையில் இந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் நாம் நமது இருப்பையும், பாதுகாப்பையும், அரசியல் சமூக பொருளாதார,கல்வி கலாச்சார, மற்றும் இன்னொரன்ன விவகாரங்களிலான நமது உரிமைகளையும், சலுகைகளையும் உறுதி செய்து கொள்ளுகிற வலுவுள்ள சிறு பான்மை சமூகமாக மாற முடியும். 

இவாறு ஒரு குடும்பம், ஒரு குழுமம், ஒரு கிராமம், ஒரு நகரம், மொத்தமாக ஒரு சமூகம் என கூட்டுத் தலைமைத்துவப் பண்புகளை பெற்றிருக்கின்ற பொழுது அந்த ஒவ்வொரு அலகும் தத்தமக்குரிய தெளிவான நிகழ்ச்சி நிரல்களை ,செயற்றிட்டங்களை வகுத்து மிகவும் வெற்றிகரமாக சமூக பொருளாதார, அரசியல்  வாழ்வியல் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றன, தமது இருப்புக்கும், பாதுகாப்பிற்கும், பொருளாதாரத் திற்கும், ஆத்மா கௌரவத்திற்கும் விடுக்கப் படுகிற சவால் களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கின்றன.

"இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்"  (ஸூரத் ஷூரா :38)

இந்த அடிப் படையில் நமது சமூகம், ஊர் மற்றும் மஹா ல்லா  மட்டத்திலான சகல  தரப்புக்  களையும்  உள்வாங்கிய மஜ்லிஸ் அல்-ஷூராக்களை (ஆலோசனை சபைகளை ) பள்ளி  வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள், இளைஞர், மாதர் பிரதி நிதிகள் ,அரசியல்,சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும் கொண்ட நிரந்தரமான ஆலோசன சபைகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை, வழிகாட்டல்களை மொத்தத்தில் தலைமைத் துவத்தை ஒவ்வொரு கிராமும் அவ்வப்போது பெற்றுக்கொள்ளும். 

 முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இது புதிய ஒரு தலைமைத்துவ கட்டமைப்பு  அல்ல, மாறாக மஸ்ஜித்களை மையமாகக் கொண்ட சமூக கூட்டு வாழ்வை , கூட்டுக் கடமைகளை , மிம்பர் எனும் வழிகாட்டும் அரியாசனத்தை, வார வார வெள்ளி பிரசங்கங்களை , ஷூரா முறையினை , இமாம், மாமூம், அமீர், மாமூர் கட்டுக் கோப்புகளை இஸ்லாம் அல்குரான் .அல்-ஸுன்னா   மூலம் மிகத்தெளிவாக அடையாள படுத்தியுள்ளது. அவற்றை அடிப்படியாக கொண்டு வாழ்ந்த நபித் தோழர்கள், முன்னோர்கள் என ஒரு அழகிய வரலாற்றுப் பாரம் பரியமும் எமக்கு இருக்கிறது. 

இவ்வாறு அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஷூரா அமைப்பு முறை இலங்கை வால் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் சிறந்த தலைமைத்துவக் கட்டமைப்பாக வருவதோடு முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவ்வப்போது மிகவும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கான மூலோபாயங்களையும் கொண்டிருக்கும். 

முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் குறுகிய நீண்ட மற்றும் இடைக்கால நிகழ்ச்சி  நிரல்களை இந்த தலைமைத்துவம் வகுத்துக் கொள்ளும். தனி நபர்களையோ தனி நபர்களை மாத்திரம் நம்பியுள்ள  அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ அல்லது தங்களுக்குள்   கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் வேறு பட்டிருக்கும் இயக்கங்களையோ மாத்திரம்  நம்பியிராது அந்த  சகல் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்கின்ற தேசிய ஷூரா ஒன்றின் அவசியம் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது. 

கவனத்திற் கொள்ளப் பட வேண்டிய அண்மைக்கால அனுபவங்கள்....

அண்மைக்காலமாக   இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுப்பதில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் இன்றுவரை முஸ்லிம்களின் சிவில் அரசியல் மற்றும் சன்மார்கத் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான ஷூரா முறையை அமைத்து அதனை உயர் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை கொண்டு செல்லும் முயற்சிகளை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

ஹலால் சான்றிதழ் விவகாரம் சூடுபிடித்த கையேடு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் எடுத்து வந்துள்ளது, அதேபோல் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எனும் அமைப்பும் சில நகர்வுகளை எடுத்து வந்துள்ளமை மறுக்க முடியாத உண்மைகளாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மார்க்க அறிஞர்களுக்கான ஒரு சேம  நல சேவை அமைப்பு என்பதனாலும் குறிப்பாக ஒரு இஸ்லாமிய இயக்கமும் அதன பிரபலங்களும் மாத்திரம் அதில் கூடுதலாக செல்வாக்கு செலுத்துவதாலும் ஏனைய  இஸ்லாமிய இயக்கங்கள் ,தொண்டர் நிறுவனங்கள், தொழில் சார் நிபுணர்கள், தேசிய மட்ட அமைப்புக்கள் தங்களுக்கு சரி சமமான கௌரவமும் பிரதிநிதித் துவமும் அங்கு கிடைப்பதில்லை மாறாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஒரு சில தலைமைப் புள்ளிகளின் முடிவுகளுக்கு அல்லது அரசியலுக்கு தாம் கட்டுப் பட வேண்டியுள்ளது என குறை கூறுகின்றனர்.

அதேவேளை இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கடந்த சிலவருடங்களுக்கு முன் பல அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பிக்கப் பட்டாலும் அதற்கான வருடா வடுட பொதுக்கூட்டங்கள்  பட்டு தலைமைத்துவக்  ஒரு செயலகத்துடனும் அது முறையாக இயங்காததால் இன்று ஒரு சில பிரபலங்கள் மாத்திரம் அதனை கையாளுகின்றமை அதன் மேலுள்ள நம்பிக்கையினை  குறைத்துள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைமைகள் எல்லோரும் அறிந்ததே, அதனை ஆராய்வதில் எமது நல்லெண்ண முயற்சிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இப்போதைக்கு அதனை தவிர்த்துக் கொள்வோம்.

இது வரை இந்த அமைப்புக்கள் தனித்தும் இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளை  நன்றியுடன் நினைவுகூருவதோடு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சவால்களையும் அவற்றின் அரசியல் இராஜ தந்திர பின்புலன்களையும் கருத்தில் கொண்டு  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ,முஸ்லிம் கவுன்ஸில் உற்பட ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் , வை எம் எம் ஏ , முஸ்லிம் லீக் போன்ற பழமை வாய்ந்த தேசிய அமைப்புக்கள் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,  இளைஞர் மாதர் அமைப்பின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் ,புத்திஜீவிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக சமூகத்தினர் என சகலரையும் சமமாக வழிநடாத்தக் கூடிய ஒரு ஒருங்கிணைப்பு  பொறிமுறையை நாம் தேசிய ஷூராவாகவும் அதே ஒருமைப்பாட்டுடன் அடிமட்ட ஷூராக்களையும் அமைத்துக் கொள்வதே இன்றைய தேவையாக சகலராலும் உணரப்படுகிறது.

தனிநபர்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற அமைப்புக்கள், கட்சிகள் அல்லது தொண்டர் நிறுவனங்கள் மிகவும் இலகுவாக அச்சுறுத்தப் படலாம் இலாகவமாக கையாளப் படலாம் என்பதற்கு அண்மைக்கால  நிகழ்வுகள் போதுமான எடுத்துக் காட்டுகளாகும்.

நமது தலைவர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கே விசுவாசிகளைக் கலந்தாலோசிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப் பட்டது...

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (ஸூரத் ஆல இம்ரான் : 159)  

அன்று அல்லாஹ்வுடைய வஹியும் கட்டளைகளும் அல்லாஹ்வின் தூதருடைய பிரசன்னமும், வழிகாட்டல்களும் நேரடியாக சஹாபாக்களுக்கு கிடைத்தது, இன்று குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக இருக்கின்ற இலங்கை போன்ற நாட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாமல் குர்ஆனில் வரலாற்றில் சுன்னஹ்வில் இருகின்றதென ஆதாரங்களைக் கூறி சிலர் ஆவேசமான உரைகளை நிகழ்த்துவதை அவதானிக்க முடிகிறது.

அல்குரானிலும் சுன்னஹ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சவால்விடுவோரை அல்லது போர்ப்பிரகடனம் செய்வோரை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் கட்டளைகள் வசனங்கள் அத்தாட்சிகள் நிறையவே இருக்கின்றன. மக்க வாழ்வு, ஹிஜ்ரத,மதீனா வாழ்வு, ஹுதைபிய உடன்பாடு, மோதல்கள், மக்க வெற்றி மீண்டும் மதீனா வாழ்வு என அவ்வக் கால சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் ரசூலுல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டன. 

அன்று அல்லாஹ்வுடைய வஹியும் கட்டளைகளும் அல்லாஹ்வின் தூதருடைய பிரசன்னமும், வழிகாட்டல்களும் நேரடியாக சஹாபாக்களுக்கு கிடைத்தது, இன்று குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக இருக்கின்ற இலங்கை போன்ற நாட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாமல் குர்ஆனில் வரலாற்றில் சுன்னஹ்வில் இருகின்றதென ஆதாரங்களைக் கூறி சிலர் ஆவேசமான உரைகளை நிகழ்த்துவதை அவதானிக்க முடிகிறது. 

“ மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஆய்வு செய்து  ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள். (ஸூரத் நிஸா :83) 

அல்லாஹ்வின் வஹியோ தூதரோ இல்லாத பொழுது ஒன்று பட்ட முஸ்லிம்களின் உம்மத்தின் கூட்டுத் தலைமை இஸ்லாமிய சட்டவாக்க அடிப்படைகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு அறிஞர்கள் புத்திஜீவிகள் துறை சார் நிபுணர்கள் சமூகத் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை சார்ந்தோரையும் கலந்தாலோசித்து ஷூரா மூலம் எடுக்கின்ற முடிவுகளை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.

"இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்"  (ஸூரத் ஷூரா :38)

தலைமைத்துவம் என்பது மிகப் பெரிய அமானிதம் அதை பாழ் படுத்துவது மிகக் கொடிய அக்கிரமம்...!

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.”
 (ஸூராதுல் அஹ்ஸாப் :72) 

மனிதர்கள் புகழப் படுவதனை விரும்புகிறார்கள், அதிலும் பதவியில் அந்தஸ்தில் அதிகாரத்தில் ஒரு எல்லையை கடந்து விட்டால் பூஜிக்கப் படுவதனை விரும்புகிறார்கள்,

 மனிதன் தனது சேவைகள் சாதனைகள் அங்கீகரிக்கப் படுவதனை பாராட்டப் படுவதனை கண்டுகொள்ளும் பொழுது "அல் ஹம்து லில்லாஹ்" மாஷா அல்லாஹ்" "எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப் படியே" எல்லாப் புகழும் புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறி மமதை பெருமை இறுமாப்பு போன்ற இழி குணங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றான்.

 இத்தகைய ஆன்மீக ஆளுமையைப் பெறாத மனிதர்கள் தம் பூஜிக்கப் படுவதனை "ஹீரோவொர்ஷிப்" விரும்புவார்கள், அடுத்தவர்களை விட தற்பெருமையும் கர்வமும் ஆணவமும், தலைக் கணமும் அவர்களது தலைக்கு ஏறிவிடும் இவ்வாறான ஆன்மீக வறுமை நிலை ஏற்படாமல் இருப்பதற்கே நாம் எதனைச் செய்தாலும் "அல்லாஹ்வுக்காக" "இறை திருப்தியை பெறுவதற்காக" என்ற இக்லாஸ் எனும் உளத் தூய்மையினை கடைப் பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளப் பட்டுள்ளோம்.

 "மகா கணமும் மாட்சிமையும் எனக்குரியவை அவற்றில் எவராவது பங்கு போட்டுக் கொள்ள விரும்பினால் அவரது முதுகெலும்பை முறித்துவிடுவேன் விளைவுகள் குறித்து கவலைப் படமாட்டேன் " என அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளான். அதனால் தான் ஆன்மீக உயர்வு ஒன்று மாத்திரமே அல்லாஹ்வின் பார்வையில் மனிதனை அந்தஸ்தில் கூடியவனாக கொண்டு சேர்க்கின்றது.

இத்தகைய அடுத்தவரை மிகைக்கின்ற அல்லது மேய்க்கின்ற இழிகுணம் எல்லை மீறும் பொழுது அக்கிரமக் காரர்கள் தோற்றம் பெறுகிறார்கள் , சாதாரண மனிதர்களே அவர்களை பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள், பிர்அவுன் ,காரூன் ஹாமான், நம்ரூது, உத்பா, உமையா ,அபூ ஜஹ்ல் போன்றவர்கள் தோற்றம் பெறுகிறார்கள்.

 வரலாறு நெடுகிலும் இந்த அக்கிரமக் காரர்களின் ஆதிக்க ஜாஹிலிய்யத்துக்கு எதிராகவே இஸ்லாம் மனித குல வரலாறு நெடுகிலும் போராட்டம் நடத்தியுள்ளது. இன்று நவீன சமூகத்திலும் இந்த ஜாஹிளிய்யத்து நூதனமான வடிவங்களை பெற்றுவருகிறது அரசியலில் அதிகமாக இருந்தாலும் அறிவு ஜீவிகளிடமும் ஆன்மீக போதகர்களிடமும் கூட தாங்கள் மட்டுமே பூஜிக்கப் படவேண்டும் தமது அடையாளமும், நிகழ்ச்சி நிரலும் செல்வாக்கும் விட்டுக் கொடுக்கப் பட முடியாதவை என ஆள் வைத்து அடியாள் வைத்து ஆட்டிப் படைக்கும் அக்கிரமம் நூதனமான பல வடிவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

சமூக நலன்களுக்கான ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் பற்றி படும் பொழுதெல்லாம் இந்த ஜாஹிளிய்யத்து குறுக்கே வந்து நிற்கின்றது. வெளியில் இருந்து வரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதனை விட இந்த உள்வீட்டு ஜாஹிளிய்யத்துக்கு முகம் கொடுப்பது கடினமாக இருக்கிறது.

அல்லாஹ்வுக்காக எந்த பிரபலங்களும் தனி நபர்களும் அல்லது இயக்கங்களும் தத்தமது அடையாளத்தை செல்வாக்கை அல்லது நிகழ்ச்சி நிரலை அரசியலை முன்னிலைப்படுத்தாது இவாறான ஒரு கூட்டு முயற்ச்சியை மேற்கொள்ள முன்வர வேண்டும்.  எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உயரிய பணியை அங்கீகரிப்பானாக, எண்கள் அனைவரையும் சரியான திசையில் பயணிக்கச் செய்வானாக..! 

4 comments:

  1. alhamdulillah,may allah bless all, who worked for this .

    ReplyDelete
  2. Alhamdu lillah,may allah bless all those who worked for this , we wish for the success.

    ReplyDelete
  3. Alhamthulillah Please avoid welcome the politicians they do business, they can not think about community

    ReplyDelete

Powered by Blogger.