Header Ads



''உமர் ரழியின் வாக்குறுதி'' - இப்போது கடைபிடிக்கப்படுகிறது..!


(தூது)

இயேசு பிறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த புண்ணியஸ்தலம் என்று அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் நம்பும் ஜெருசலத்தில் உள்ள புனித கல்லறை ஆலயத்தை (church of the Holy Sepulchre) பன்னெடுங்காலமாக முஸ்லிம்களை திறந்து கொடுக்கின்றார்கள்.

ஜுதே,நுஸைபா ஆகிய முஸ்லிம் குடும்பங்களைச் சார்ந்த இருவர் தினமும் ஆலயத்தை திறந்து இரவில் பூட்டுகின்றார்கள். 12-ஆம் நூற்றாண்டில் இருந்தே இப்பொறுப்பை இந்தஇரண்டும் முஸ்லிம் குடும்பத்தினர்தாம் நிர்வகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 செ.மீ நீளம் கொண்ட சாவியுடன் அதீப் ஜூதே காலையில் ஆலயத்திற்கு வருவார். சாவியை அவர் வஜீஹ் நுஸைபாவிடம் ஒப்படைப்பார். ஏணி மூலம் வஜீஹ் ஆலயத்தின் வாசல் கதவின் பூட்டை திறப்பார்.இம்முறை இரவில் ஆலயத்தை பூட்டும் போதும் தொடருகிறது.

கி.பி 325-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் சாவியை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம்கள் பெற்ற வரலாறு,

கி.பி 637-ஆம் ஆண்டு இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் ஜெருசலத்தை கைப்பற்றிய பொழுது முதலில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை ஜெருசலத்தில் உள்ள ஆலயங்களை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியாகும். அன்று ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆர்ச் பிஷப் ஸெஃப்ராணியஸிற்கு உமர் அவர்கள் கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மதீனாவில் இருந்துஜெருசலத்திற்கு வந்த நுஸைபா குடும்பத்தினரிடம் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை கலீஃபா உமர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.1187-ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை சிலுவைப் போர் வீரர்களிடமிருந்து கைப்பற்றியபோது ஆர்த்தோடக்ஸ், கத்தோலிக்க சபையினர் இந்த ஆலயம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டபோது இவ்விரு பிரிவினரும் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை நுஸைபா குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சம்மதித்தனர்.

புனித கல்லறை ஆலயத்தில் திருப்பலி (கிறிஸ்தவ சடங்கு) நடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. கத்தோலிக்க, க்ரீக், ஆர்த்தோடக்ஸ், ஆர்மீனியன், காப்டிக் என பல கிறிஸ்தவ பிரிவினரும் இந்த ஆலயத்தின் சிறப்பு உரிமைகளை கை பலத்தின் மூலமே கையகப்படுத்தியுள்ளனர். இவர்களிடையேயான சச்சரவுக்கு தீர்வு கண்டவர்

1853-ஆம் ஆண்டு உஸ்மானிய சுல்தான் ஆவார்.உஸ்மானியர்கள் நுஸைபா குடும்பத்தினருடன் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஜூதே குடும்பத்தினரிடம்சேர்த்து ஒப்படைத்தனர். ஆலயத்தை திறப்பதற்காக 2 சாவிகள் இருந்தன. ஒன்று உடைந்து விட்டதால் தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. இந்த சாவி 1187-ஆம் ஆண்டு தொட்டே உபயோகிக்கப்பட்டு வருகிறது. கல்லறை ஆலயத்தின் ஒரு சிறிய அறையில் இந்த சாவி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ சபையினரிடையே நிறுவப்பட்ட சமாதானத்தின் காவலர்களாக இன்று முஸ்லிம்களான நுஸைபா மற்றும் ஜூதே குடும்பத்தினரே திகழ்கின்றனர்.

1 comment:

  1. தலைப்பில் ஒரு திருத்தம் தேவை!

    இப்போது என்பது இப்போதும் என்று திருத்தவும்

    ReplyDelete

Powered by Blogger.