Header Ads



ஜனாதிபதியுடன் 20 வருடங்களாக பழகுகிறேன் - அவரிடம் மாற்றத்தை காணமுடிகிறது



நீதி சரிவர நிலைநிறுத்தப்படும் போதுதான் அரசாங்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒழுங்காகப் பேணிப் பாதுகாக்க முடியும். இந்த நீதியின் ஆட்சி என்பது சரிவர நிலைநாட்டப்படவிட்டால், நாட்டின் உள்விவகாரங்கள் சீர்கெட்டு விடும் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

மாவட்ட, பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நீதியமைச்சில் வெள்ளிக்கிழமை (19) முற்பகல் நடைபெற்ற பொழுது அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.  

170 க்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு நீதியமைச்சில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இரு அமர்வுகளாக காலையிலும், மாலையிலும் இந் நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பட்டதாரிகள் அமைச்சரிடம் இருந்தும், அமைச்சின் செயலாளரிடம் இருந்தும் தங்களுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.  

நீதித்துறையில் கடமையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. இந் நாட்டில் அரசியல் இயந்திரத்தைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவையுள்ளன. இவற்றில் நிறைவேற்று அதிகாரமும், நீதித்துறையும் தொடர்புபட்டதுதான் நீதியமைச்சு ஆகும். 

நீதியின் ஆட்சி என்பது பற்றி இந்த நாட்களில் ஊடகங்களில் அதிகம் வெளிவருகின்றது. நீதி என்பது அனைவருக்கும் சமமானது என்பதுதான் இதில் முக்கியமானது. ஒருவர் எந்த தாரதரத்தில் இருந்தாலும் அவர் நீதியின் முன் ஒரே சமமானவர் என்பது தான் இதன் தாற்பரியம் ஆகும். 

ஆனால் இதனைச் செயற்படுத்தும் போது பல்வேறு சவால்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடுகின்றது. குறிப்பாக நீதி சரிவர நிலைநிறுத்தப்படும் போதுதான் அரசாங்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒழுங்காக பேணிப் பாதுகாக்க முடியும். இந்த நீதியின் ஆட்சி என்பது சரிவர நிலைநாட்டப்படவிட்டால் நாட்டின் உள்விவகாரங்கள் சீர்கெட்டு விடும். 

புதிதாக பதவியேற்கும் நீங்கள் நீதிமன்றங்களில் பணிபுரிவதன் ஊடாக உங்களது திறமைகளையும், ஆளுமையையும் விருத்தி செய்து அதன் மூலம் நீதியின் ஆட்சிக்கு உங்களாலான சிறந்த ஒத்துழைப்பை நல்க முடியும்.

நீதியை உரிய முறையில் நிலைநாட்டுவதற்கு தடையாகவுள்ள வழக்குத் தாமதத்தின் பாரதூரம் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உதவியாளர் என்ற பதவியை பட்டதாரிகள் பெறுகின்ற பொழுது, இது வெற்றிடங்கள் நிலவுவதன் காரணமாக அவற்றை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நியமனங்கள் அல்லவென்பதை நன்கு மனதில் இருத்திற்கொள்ள வேண்டும். 

பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முற்றாக நீக்கியாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஜனாதிபதி அமைச்சுக்களிலும், திணைக்களங்களிலும் பட்டதாரிகளை நியமித்து அவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உதவியாளர் என்ற பதவிக்கு எமது அமைச்சிலும், நீதித்துறையிலும் பட்டதாரிகளை நியமிக்கும் போது ஏனைய அமைச்சுகளைப் போலவே ஒவ்வொருவருக்கும் உரிய அலுவல் என்னவென்பது திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. இது திறந்த தன்மை வாய்ந்ததாக உள்ளது. பட்டதாரி பயிலுநர்களுக்கான  பொறுப்புக்களை பகிர்ந்தளிக்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு பொறுப்பான நீதிபதிகளுக்கும், நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. திட்டவட்டமாக ஒரு குறிப்பிட்ட காரியத்தைத்தான் செய்ய வேண்டுமென இந்த நியமனங்களை வழங்கும் பொழுது நாங்கள் முடிவுகளை மேற்கொள்ளவில்லை. 

எந்தத் தொழில் வரையறையுமின்றி வழங்கப்படும் இந்தப் பயிலுநர் பதவி புதிதாக நியமனம் பெறுவோருக்கு ஒரு பெரும் புதிராக இருப்பதில் வியப்பில்லை. அலுவலகத்தில் கதிரையில் அமர்த்தி, உரிய கடமையை வரையறுக்காமல் வெறுமனே காலத்தை கடத்துவதா என்ற கேள்வி எழுவது இயல்பானதே. 

பட்டதாரிகளின் சமூக அந்தஸ்தைப் பேணி, அவர்களுக்கு பதவிகளை வழங்கும் போது அவர்கள் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் உரிய பங்களிப்பை வழங்கக்கூடிய விதத்தில் அவர்களைப் பயன்படுத்திக்கொள்வது அரசாங்கத்தின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும். 

சிங்கள மொழி மூல பட்டதாரி பயிலுநர்கள் இந் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழையும் கற்றுக்கொண்டால் கடமையை செவ்வனே செய்வதற்கு இலகுவாக இருக்கும். தமிழ் மொழி கற்பதற்கு மிகவும் இலகுவானது. நாட்டின் ஜனாதிபதி கூட படிப்படியாக தமிழைக் கற்று இப்பொழுது இந்த மொழியை பேசவும் விளங்கவும் தெரிந்து வைத்திருக்கிறார்.  இருபது வருடங்களுக்கு மேலாக நான் அவருடன் பழகி வருவதன் காரணமாக இந்த மாற்றத்தை அவரில் நான் காண்கிறேன் என்றார். 

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலார். ஏ.டி.டி.கே அரந்தர ஆகியோரும் உரையாற்றினர். நீதியமைச்சின் உயர் அதிகாரிகளும் இந் நிகழ்வில் கல்நதுகொண்டனர். 










3 comments:

  1. தலையங்கம் பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது..!!! தமிழ் மொழி கற்பதில் மாற்றத்தை காண்கிறேன் என இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. சமமான நீதியே இல்லாத ஒருநாட்டில் இப்படியும் ஒரு பதவி ஆனாலும் இந்த 170 பட்டதாரிகளின் குடும்பங்கள் வாழ ஒரு வழி தற்காலிகமாகவேனும் கிடைத்ததைஇட்டு மகிழ்ச்சி

    ReplyDelete
  3. Dear Jaffna Muslim, u are doing great social service to public and u have most responsibility..... and u have good name too. so please consider about the Head line of every news.... This news and the Head line are rather different...... because all over the world people are visiting ur page,,,
    So do not miss use ok.........

    ReplyDelete

Powered by Blogger.