Header Ads



முஸ்லிம் சமூகத்துக்குப் பெருமை தேடித்தந்த சாதனைப் பெண்கள்..!



(இர்பான் இக்பால்)

கல்வித்துறையில் முஸ்லிம் பெண்களின் பங்கெடுப்பானது இலங்கை போன்ற நாடுகளில் மிகவும் அரிதான விடயமாகவே இருக்கிறது. அவ்வப்போது சமூகத்தில் காணப்படும் முன்னேற்றங்களும் காலத்தின் கோலத்தால் பாதிக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களுக்கு எப்போதுமே சவாலான விடயமாகவே இருந்து கொண்டு வந்திருக்கிறது.

இதையும் தாண்டிச் சாதிப்பதற்கு சமூகத்துக்குள் இருக்கும் வாழ்க்கைக் கட்டமைப்பு ஒரு சில வேளைகளில் இடமளிப்பதில்லை இருப்பினும் இது ஒரு இடைவெளி என்பது நம் சமூகம் உணர வேண்டிய ஒரு விடயமாகும்.

வைத்தியத்துறை மற்றும் சட்டத்துறையில் பெண்களின் வருகையும் வளர்ச்சியும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காலத்தால் பின் தள்ளியே இருப்பினும் அவ்வப்போது எம்மை வந்தடையும் சந்தோஷம் இதுவரை காலம் ஏதாவது ஒரு திருப்தியைத் தந்தது என்பதையும் மறக்கலாகாது. இன்று பல தனியார் வைத்தியசாலைகளிலும் விரல் விட்டு  எண்ணக்கூடிய அளவிலேனும் முஸ்லிம் பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள், அதே போன்று சட்டத்துறையிலும் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் வளர்ச்சியும் இச்சமூகத்துக்கு அவசியமாக இருப்பினும் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இருக்கிறது.

அதற்கான காரணம், பெற்றோர்களா? இல்லை கல்வியில் நாட்மில்லாமலே தான் நம் சமூகப் பெண்கள் இருக்கிறார்களா? சூழ்நிலையா என பல நூறு கேள்விகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் தேடி ஆராயந்து விடை கண்டு முன்னேறுவது என்பது நெடுங்கால சமாச்சாரம் என்பதால் ஆகக்குறைந்தது சத்தமில்லாமல் சாதித்த எம் சமூகப் பெண்களை அடையாளங்கண்டு அவர்கள் வழிமுறைகளை முன்னுதாரணமாகப் பெறுவது சமூகத்திற்கு நலன் தரக்கூடிய விடயம்.

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை

Top 3 Ranks 

Fathima Nusrath Riyazul Hassen , 87 Marks (1st rank), Col - 13.
Zeenathul Ashra Mohamed Haleek,  84 Marks (2nd rank), Col - 14.
Fathima Rismina Mohamed Sadeeq, 81 Marks (5th rank), Col- 14.

இலங்கையில் அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளான விடயத்தைப் பற்றி பல நாட்கள் பேசிய நாம், அந்த கருமேகத்தால் சூழப்பட்டு ஒளியிழந்த எம் சமூகத்தின் தாரகைகளை மறந்தே போனது துரதிஷ்டம்.

எனினும் அவர்கள் கை விடப்படவில்லை, அவர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கிறது எனும் போது ஆகக்குறைந்தது நாம் சந்தோஷப்படலாம் அவர்கள் எதிர்காலத்துக்காக எம் பிரார்த்தனைகளை நல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு தடவை பரீட்சையில் தேறவில்லையென்றால் இந்தப்பழம் புளிக்கும் என்று ஓடிவிடும் இளைய தலைமுறையினரிடையே நான்கே நான்கு புள்ளிகளால் இலக்கை எட்ட முடியாவிடினும் மீண்டும் முயற்சித்து இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எம் சமூகத்தின் சாதனைப் பெண்ணை நாம் மறப்பது நலமா? எனும் கேள்வி, கேட்கப்பட்டாலேயன்றி நம்மில் பலருக்குத் தெரிவதில்லை, காரணம் முற்றத்து மல்லிகைகள் மணப்பதில்லை என்பது போக நம் சமூகத்தின் அங்கீகாரத்தினை நாமாகத் தேடிக் கொடுப்பதில்லை என்பதுவும் தான்.

என் சொந்த சகோதரிகளே வெற்றியடைந்தது போன்றிருந்தது, ஆனாலும் அவர்கள் கைகளை வந்தடைந்த கனியைப் புசிக்கக்கூடவா இந்த சமுதாயம் விடாது எனும் ஆத்திரமே எஞ்சியதால் சற்றுப் பொறுமை காக்க வேண்டியிருந்தது. ஆனாலும், இறைவன் அவர்களைக் கைவிடவில்லை எதிர்வரும் 11ம் திகதி கல்லூரி வாசலில் கால் பதிக்கப்போகிறார்கள் என்ற செய்தியெட்டியதும் மனம் கனிந்தது.

அப்படித்தான் உங்கள் பரீட்சை பெறுபேறுகள் ரத்துச் செய்யப்படினும், மீண்டும் நுழைவுப் பரீட்சைஎழுதுவீர்களா ? என்று நுழைவுப் பரீட்சையில் இரண்டாவது இடத்தைப் பெற்ற செல்வி ஸீனத்துல் அஷ்ரா ஹலீக்கிடம் கேட்ட போது, எழுதுவேன் என்று சொல்வதோடு நிற்காமல் எழுதினால் இந்தத் தடவை முதலிடத்தைப் பிடிப்பேன் என்று நம்பிக்கையோடு அவர் சொன்னதைக் கேட்ட கணம் கண்கள் இனியும் பொறுமை காக்க மறுத்தது ஏன் என்று சொல்ல முடியாது.

அப்படித்தான் கிடைத்தாலும், இன்ஷா அல்லாஹ் சட்டக்கல்லூரிக்குள் வரும் அனைத்துப் பரீட்சைகளிலும் எம் திறமையைக் காட்டி, சேறு பூச முனைந்தவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று அவர் அனல் தெறிக்கப் பேசிய போது, இந்த நம்பிக்கைக்கு அவர்கள் குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும், நம் சமூகத்தில் காணும் வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும் எனும் ஆதங்கம் உள்ளாற ஓடியது.

நம்பிச் சென்று பேசுவதற்கொரு முஸ்லிம் பெண் வக்கீல் இல்லாத குறையால் எதையுமே பேசாமல் வாடி, வதங்கி, பாதிக்கப்பட்டு வாழ்நாளில் என்றுமே விடை காணாமல் மறைந்து போன எத்தனையோ அபலைப் பெண்கள் இருந்திருக்கிறார்கள், வெளியே சென்று ஒரு ஆண் வக்கீலிடம் பேச விரும்பாது, முடியாது தவிக்கும் பெண்களும் இருக்கிறார்கள், இவர்கள் பிரச்சினைகள் பல வகை, அதில் ஒரு சில சமூகத்தால் தீர்க்கப்பட்டாலும் இன்னும் பல நாட்டின் சட்டதிட்டங்களால் தீர்க்கப்படும் தேவையிருக்கிறது, அதில் நியாயம் கூடத் தம் பக்கம் இருந்தும் நம்பிச் சென்று பேச ஒரு பெண் வக்கீல் இல்லாமையால் தனிமையில் வாழ்ந்து, தனியாகவும் வாடிக்கொண்டிருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

இப்போது ஒரு பெருமூச்சு, இன்னொரு வகையில் நம்பிக்கை ! நிச்சயமாக இந்தப் பெண்கள் எம் சமூகத்தின் பெயரைக் காப்பாற்றுவர்கள் என்றொரு நம்பிக்கையும் வந்திருக்கிறது. சட்டக் கல்லூரியின் வெட்டுப்புள்ளியைக் குறைத்து இரட்டிப்பு நுழைவு அனுமதியை வழங்கி, சிக்கலுக்கு ஒருவாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி இவர்களின் பயணம் ஆரம்பிக்கும், அது சவால் நிறைந்ததாகவே இருக்கும், என்றாலும் இவர்கள் போராடுவார்கள் எனும் நம்பிக்கை வந்துள்ளது !

சாதனையாளர்கள் உருவாவதற்கு அவர்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது, அது இல்லாமல் இவர்களால் முன்னேற முடியாது. சகோதரி ஸீனத் அஷ்ராவின் குடும்பம் உறுதியாக இருக்கிறது. என் தங்கையின் கல்விக்குத் தேவையான அத்தனையையும் நான் செய்வேன், இன்ஷா அல்லாஹ் ஒரு நல்ல நிலைக்கு அவர் வருவார் என நம்பிக்கையோடு வாக்களிக்கும் ஹக்கீம் ஹலீக் எனும் சகோதரன் அவருக்கு இருக்கிறார், தன் குழந்தைகளின் கல்வியைத் திட்டமிட்டு நகர்த்தும் நிறைந்த அனுபவமிக்க பெற்றோர்கள் அவர்கள் பின்னால் இருக்கிறார்கள் எனவே இவர் போன்ற சாதானைப் பெண்கள் வெளி வருவதற்கு நாம் தட்டிக்கொடுக்க வேண்டும்.

செல்வி நுஸ்ரத் ரியாஸுல் ஹசன் முதலாம் இடத்தைப் பெற்றார், அது சாதாரண முயற்சியல்ல அவர் பட்ட பாடும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் அவர் அறிந்தது, அவர்கள் சுற்றச் சூழ்நிலைகளின் தாக்கத்தையெல்லாம் வென்றெடுத்து, திருமணத்தின் பின்னும் தான் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார், இது சாதாரண விடயமல்ல.

செல்வி ரிஸ்மினா சாதிக் ஐந்தாம் இடத்தைப் பெற்றிருக்கிறார், மூன்று நான்கு புள்ளிகளுக்குள் தான் இவர்களது நிலை பிரிக்கப்பட்டிருக்கிறது, எனவே இவர்களுக்குள்ளிருந்தே திறமைக்கான போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இத்தனை கஷ்டப்பட்டு அடைந்த வெற்றி பாழாய்ப் போகிறதே என்று நேற்று வரை இவர்கள் மனம் குமுறியது என்னவோ உண்மைதான். எந்த அரசியல் வாதியும் ஒரு ஆறுதல் கூறவேனும் வரவில்லை, தட்டிக்கொடுக்கவில்லை ஆனாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைக் கைவிடவில்லை.

முயற்சியால் வெற்றி பெற்று, காயங்களால் அனுபவத்தைப் பெற்று ஒரு சமூகத்தின் பொறுப்பையே தம் தோள்களில் தாங்கிச் செல்லும் இந்தப் பெண்கள் உட்பட சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தேர்வு பெற்ற அனைத்து எதிர்கால முஸ்லிம் சட்ட வல்லுனர்களையும் வாழ்த்துவோம்,  சிறந்த பெறுபேறுகளுடன் எதிர்கால சமூகத்துக்கு எடுத்துக்காட்டாய் இவர்கள் ஒளிரும் நாள் பார்த்து, இன்ஷா அல்லாஹ்  சமூகத்துடன் நாமும் காத்திருப்போம் !

3 comments:

  1. சாதனை பெண்களே!!!!, உங்கள் அவுரதுகளையும் மறைத்து கொள்ளுங்கள்...அப்போதுதான் உங்களுடைய சாதனை முக்கியத்துவம் பெரும்.

    ReplyDelete
  2. kadantha sila kaalamaaha kadeenamaakkapatta sattak kalloori anumatheekkaana nulaivu oor iru varudankalaaha mihavum ilahuvaakkapattullathu.G.C.E (A/L) saathaaranamaaha siththiyadaium maanavanukku kooda Law College Entrance ilahuvaaha kidaithu vidum endra alavukku Law College Entrance ilahuvaakkappaddu ullathu.ivvaaraaha kuraintha vettuppullihalaal maanavarhalai anumathippathu saattthuraieen tharaththai kuraippathaaha ullathu.enavea eathir varum kaalangalil thiramai mihu sattaththaranihalai uruvaakkum muhamaaha Law College Entrace Exam Structure ill maattrankalai eatpaduththuvathu thodarpaaha uriya athihaarihal kavanam eaduppathu mihavum avasiyam.illayeeal sattathurail ullavarhalukkkea sattaththurai meethaana nan matheppu thalarnthu vidum.

    ReplyDelete
  3. Mashaallah!
    Congradulations to all three women. This should be an eye opener to others as well.
    Alhamdulillah

    ReplyDelete

Powered by Blogger.