Header Ads



மு.கா. வுடன் முதலமைச்சர் குறித்து பேவில்லை, புரிந்துணர்வு ஒப்பந்தமும் இல்லை - பசில்



ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது.  ஆவண பரிமாற்றமே இடம்பெறும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளமை மற்றும் அந்த தீர்மானத்தினால் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பசில் ராஜபக்ச இவ்விடயம் குறித்து  தகவல் வெளியிடுகையில்,

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்தமை மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாகும். அரசங்கமும் முஸ்லிம் காங்கிரஸும் சில வருடங்களாகவே ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன.

தொடர்ந்தும் அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றது. அந்த வகையிலேயே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட தீர்மானித்தன. முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு தொடர்பில் அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது.

அதாவது தேர்தல் இல்லாத காலங்களில் அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருக்கும் என்றும் தேர்தல் காலங்களில் பிரிந்தே போட்டியிடும் என்று கருதி வந்த சிலருக்கு முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் சிறந்த பாடத்தை புகட்டியிருக்கும். அவ்வாறு எதிர்பார்த்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறியிருக்கும். ஆளும் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சிறந்த புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாகவும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே தேர்தலிலும் ஒன்றாக போட்டியிடுகின்றோம்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் எந்த விடயமும் பேசப்படவில்லை. வேறு சில விடயங்கள் குறித்து பேசப்பட்டது. அத்துடன் ஆளும் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படமாட்டாது.

அவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படும் வகையில் ஆவண பரிமாற்றம் செய்யப்படும்.
ஆனால் கூட்டணிக் கட்சிகள் எனும்போது கோருகின்ற அனைத்து ஒதுக்கீடுகளும் கிடைக்காது. உதாரணமாக சுதந்திரக் கட்சி மட்டக்களப்பில் நான்கு வேட்பாளர் ஒதுக்கீட்டை கோரியது. ஆனால் இரண்டு வேட்பாளர் ஒதுக்கீடே கிடைத்தது. இதுதான் யதார்த்தம் என்றார்.

No comments

Powered by Blogger.