Header Ads



தலிபான்களுக்கு எதிராக போராடுவேன் - 13 வயது சிறுமி சூளுரை


பாகிஸ்தானில் உள்ள சுவாத் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்ஷாய் (13). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-வது வகுப்பு படித்தார். இப்பகுதி தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர். 

அதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகள் குண்டுவீசி அழிக்கப்பட்டன. இது சிறுமி மலாலா யூசுப்ஷாயின் மனதை மிகவும் பாதித்துள்ளது. தனது கல்வி பாதிக்கப்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் தலிபான்களுக்கு எதிராக தைரியமாக பி.பி.சி. உருது ஆன்லைனில் உலக மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். 

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கான தேர்வு நடைபெறுகிறது. அதில் 42 நாடுகளை சேர்ந்த 93 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் உலகில் தைரியமான சிறுமிகள் பட்டியலில் மலாலா யூசுப்ஷாய் உள்பட 4 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், இந்த விருது கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோரை மலாலா யூசுப் ஷாயின் தலிபான்கள் எதிர்ப்பு கடிதம் கவர்ந்துள்ளது. 

எனவே, சர்வதேச குழந்தைகள் அமைதி விருது இவருக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் மலாலா வெற்றி பெற்றால் நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் துதூ விருது வழங்குவார். இது குறித்து மலாலா கூறும்போது, எனக்கு இந்த விருது கிடைக்காவிட்டாலும், தலிபான்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும், உலகில் எங்கும் அமைதி நிலவ வேண்டும். சுவாத் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிய வேண்டும் என்றும் கூறி உள்ளார். 

No comments

Powered by Blogger.